பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

உடற்கல்வி என்றால் என்ன?



கொள்கைத் தத்துவத்தின் தந்தையான பிளேட்டோ, மனிதர்களின் மனதின் உட்புறம், மனதின் வெளிப்புறம் என்று பிரித்து, அதன் பெருமையை விளக்கித் கூறினார்.

அவரைத் தொடர்ந்த அரிஸ்டாட்டில் எனும் தத்துவஞானி, விஞ்ஞான பூர்வமாக முறைகளைக் கையாண்டு கொள்ளலாம் என்ற விரிவை ஏற்படுத்தித்தந்தார். அதாவது ஒன்றைக் காண்பதன் மூலமும், ஆய்வு செய்வதன் மூலமும் உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று போதித்தார்.

கொள்கைத் தத்துவமும் கல்வியும்

1. கல்வியானது தனிப்பட்ட மனிதரின் ஆளுமையை வளர்த்து விடுகிறது.

2. மனிதருக்கு அறிவும், மனதின் வளர்ச்சியும் முக்கியமானதாகும் என்னும் கொள்கைத் தத்துவத்தைக் கல்வி வற்புறுத்துகிறது.

3. கல்வி என்பது தொடர்ந்து ஏற்பட்டு விடுகிற முன்னேற்றம். அது ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து தோன்றி உருவெடுத்து வளர்ந்து கொள்கிறது. அதாவது கொள்கைத் தத்துவம் கூறுகிற மனித உள்ளுணர்வு செயல்களில் செழுமை ஏற்படுத்துவதைக் கல்வி செயல்படுத்துகிறது.

4. கல்வியின் திட்டங்கள் யாவும் கொள்கைகளைச் சுற்றியே கருக்கொண்டு விளங்குகிறது. கொள்கைத் தத்துவத்தின் குறிக்கோளும் மனித ஆளுமையை, முன்னேற்றுகிற முயற்சிகளை மேற்கொண்டு, வாய்ப்புகளை வழங்குவதிலேயே இருக்கிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையாகத்தான் கலை, இலக்கியம், வரலாறு போன்றவைகள் விளங்குகின்றன.