பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

69


 சிந்தித்தனர். அற்புதமான அனுபவங்களைப் பெற்று, அவற்றையும் அலசிப் பார்த்து சிந்தித்தனர். அவர்கள் உயிர் வாழ மேற்கொண்டமுயற்சிகளை “வாழ்வு பெற வாங்கிக் காெண்ட வருத்தங்கள்” (Struggle for existcance) என்று அழைத்தும் மகிழ்ந்தனர்.

அந்தகால மனிதர்கள் வயதால் மட்டும் வளரவில்லை. அனுபவங்கள் கொடுத்த அறிவாலும் வளர்ந்தனர். அந்த அறிவின் துணை கொண்டு வாழ்வின் இலட்சியங்களை வடித்தனர். அந்த இலட்சியங்களை அடைந்திட, பல எண்ணங்களைத் தொகுத்தனர். வழிகளை அமைத்தனர். அதுவே அவர்களது கொள்கைகளாக வடிவெடுத்தன.

கொள்கை வந்த விதம் :

ஆதிகால மனிதர்கள் வாழ்வில் எந்திரங்கள் இல்லை. பரிசோதனைச் சாலைகளும் கிடையாது. அவர்கள் எதிர்நோக்கிய இடங்கள் யாவும் இயற்கையாகவே இருந்தன. அவர்களின் பார்வைகள், அவற்றின் காரணங்களை அறிய முயன்றன. அதிலே புரிந்தும் புரியாததுமாக பல நிகழ்ச்சிகள் இருந்தன.

நன்றாகப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், அவர்களுக்குள்ளே அவைகள் ஆழமாக ஊன்றிப் போயின. அவையே நம்பிக்கைகள் (Beliefs) என்ற பெயரைப் பெற்றன.

நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே மனிதர்கள் ஏற்றுக் கொண்டனர். ஏன் என்று காரணம் கேட்க, எதற்கு என்று விளக்கம் கேட்க, எப்படி என்று உண்மையை அறிய யாருமே முன் வரவில்லை. விரும்பவும் இல்லை.