பக்கம்:தேன் சிட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தேன் சிட்டு


 கூட்டம், ஊர், நாடு என்றிப்படி அவன் எண்ணமிடத் தொடங்கினான். அவனுடைய உள்ளம் அந்த அளவுக்கு விரிந்து கொண்டே வந்தது. மனிதன் தான் பிறந்த நாட்டைத் தாய்நாடு என்று போற்றத் தொடங்கினான். அங்கு வாழ்பவர்களெல்லாம் தன்னுடன் பிறந்தோர் என்று பேசிப் பெருமை கொண்டான். அவர்கள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று ஆசை கொண்டான். அவர்களுக்காகத் தேவைப்படும்போது தன்னையும் தியாகஞ் செய்ய மார் தட்டி முன் வந்தான். மனிதனுடைய உள்ளத்தின் விரிவு இன்று பெரும்பாலும் நாட் டோடு நின்றிருக்கிறது என்று கூறலாம்.

அணுகுண்டு யுகத்திலே அப்படி நாட்டோடு உள்ளத்தின் விரிவு நின்றுவிடுவது சரிப்படாது. மானிட சாதி அழியாது நிலைக்க வேண்டுமானால் மேலும் உள்ளம் விரியவேண்டும். உலகமே ஒரு குடும்பம், உலக மக்கள் எல்லோரும் உடன் பிறந்தவர்கள் என்கிற எண்ணம் உண்டாக வேண்டும். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்ச்சி நிலைபெறவேண்டும். யாரோ சில கவிஞர் கள் அல்லது சான்றோர்கள் மட்டும் அப்படி நினைத்தால் போதாது; மனித இனமே அப்படி நினைக்க வேண்டும்.

அதற்கு முதற்படியாக எல்லா மக்களும் சுதந்தரமாக வாழ்ந்து தங்கள் திறமைகளை வளர்க்க வசதி செய்யவேண்டும்; அடிமை நாடு, ஆளும் நாடு என்ற பிரிவே இருக்கக்கூடாது. நிறம், மதம், சாதி என்ற வகையிலே பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/25&oldid=1142017" இலிருந்து மீள்விக்கப்பட்டது