பக்கம்:தேன் சிட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழலோசை

39



மெதுவாக ஒருங்கு திரண்டு நீர்த்துளியாக உரு வெடுக்கிறது. உருண்டு திரண்டு முத்துச் சொட்டாக இதழ்களின் நுனியிலே இளமங்கையின் வதனத்திற்கு எழில் தரும் எள்ளின் பூவையொத்த நாசியில் தொங்கி அசையும் முத்துப் புலாக்கைப் போல ஒரு கணம் நிற்கிறது. நீர்த்துளியின் சுமை தாங்காது மெல்லிய, இதழ் தலை சாய்கிறது; முத்துச்சொட்டு நிலத்திலே குதிக்கிறது. மரங்களின் இலைகளிலிருந்தும் நூற்றுக்கணக்காகப் பணிச் சொட்டுக்கள் முத்து முத்தாகக் குதிக்கின்றன.

என் உடம்பெல்லாம் ஒரு ஜிலுஜிலுப்பு ஏறுகின்றது. பனித் திவலையின் இந்த ஜிலுஜிலுப்பிலே ஒரு தனிப்பட்ட இன்பக் கிளர்ச்சியுண்டாகிறது. மார்கழித் திங்களிலே அதிகாலையிலே இறைவனுடைய புகழைப் பாடி பஜனை செய்து கொண்டு தெருக்களிலே வலம் வரவேண்டுமென்று முதலில் ஏற்பாடு செய்தவர்கள் இந்த இன்பத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். இழுத்துப் போர்த்துக் கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பவர்கள் இந்த இன்பத்தைத் துய்க்க முடியாது.

நான் கழனிகளின் வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று புல்லாங்குழலின் நாதம் செவிகளிலே பாய்ந்தது. திட்டமான உருவம் பெறாத ஏதோ ஒரு நாடோடிப் பாடலின் மெட்டு அது. கலைப் பண்பில்லாத உள்ளக் கிளர்ச்சியின் எதிரொலிதான்; ஆனாலும் அதிலே ஒரு தனிக் கவர்ச்சியிருந்தது. பனித்திவலைகள் உண்டாக்கிய அமைதி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/40&oldid=1145455" இலிருந்து மீள்விக்கப்பட்டது