பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் ஜி. 105

தத்துவத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவருடைய அணுகு முறை அல்லது தத்துவ இயலின் போக்கு எப்படி இருந்திருக்கும் என்று இன்று உய்த்துணர்ந்து கொள்ள முடியும். அந்த வாய்ப்பைத் தமிழர்கள் வழங்காதது ஒரு குறையேயாம். -

இரு வேறு நிலையில் வளர்ந்த தத்துவங்கள்

சைவ சித்தாந்தம் கடவுளை நம்புவதாலும் கடவுள் வழிபட்ட சமய வாழ்க்கை முறையை எடுத்துக் கூறுவதாலும் இஃது ஒரு சமயம். மாமேதை மார்க்சு கடவுளை நம்பாததாலும், மதம் மக்கட்கு அபின் என்று கூறுவதாலும் பொருளையே மையமாகக் கொண்ட வாழ்க்கையை வலியுறுத்துவதாலும் மார்க்சியம் கடவுளை நம்பாத - கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திகமாயிற்று. ஆனால், பிரெஞ்சு தேசத்தில் - பாரசீகத்தில் - இந்திய நாட்டில் தோன்றிய, மனித உணர்வுகளை - ஒழுக்கங்களை - கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாது "கண்டதே காட்சி - கொண்டதே கோலம்" என்ற நாத்திகம் போன்றதன்று மார்க்சியம். மார்க்சியத்திற்கே don-L– ஆன்மிகத்தில் நம்பிக்கையிருக்கிறது. நமது மரபு வழியில் ஆன்மிகம் என்ற சொல்லுக்குப் பொருள் உயிரின் தகுதியை - வளர்ச்சியைக் குறிப்பதாகும். மார்க்சியம் மானிடத்தின் தரத்தை - வளர்ச்சியை விரும்புகின்றது. மார்க்சியத்தில் உயிரின் தன்மை, கல்வி, கேள்வி மற்றும் செயல்முறைகளால் வளர வேண்டும் என்னும் கொள்கை இருக்கிறது. ஆதலால் மார்க்சியத்தை வறட்சித் தன்மையுடைய - அராசகத் தன்மையுடைய - ஆக்கும் தன்மையில்லாத - அழிக்கும் தன்மை மட்டுமேயுடைய நாத்திகக் கொள்கைகளின் வரிசையில் எண்ணுவது கூடாது, கூடவே கூடாது!