பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடித்தது புரட்சி அரவிந்தர் கைது!

வீழ்ச்சியுற்ற பாரதம் எழுச்சி பெற வேண்டுமென்று ஒவ்வொரு மாநில வாலிபர்களும் சுதந்திர வேட்கையோடு வீறுகொண்டு பணியாற்றினார்கள். இந்திய இளைஞர்கள் அரவிந்தரைத் தலைவராக ஏற்று அவருடன் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்ற திட்டம் வகுத்துக் கொண்டிருந்தார்கள்.

'வந்தே மாதரம் என்ற பத்திரிக்கை ஒரு நாளேடு என்ற தகுதியில் மட்டுமல்லாமல், பாரத நாட்டின் சுதந்திரத்துக்கு மக்களைத் திரட்டும் பணிகளையும் செய்தது.

வங்காளத்தை இரு கூறாகப் பிளந்துவிட்ட ஆங்கிலேயர்களை, நாட்டை விட்டுத் துரத்துவதற்குரிய மார்க்கம் என்னவென்ற எண்ணமுடைய வாலிபர்கள், நாட்டின் முக்கிய இடங்களில் ரகசிய சங்கங்களை அமைத்துக் கொண்டு வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

இத்தகைய புரட்சி எண்ணமுடைய வீர இளைஞர்கள், தங்களது கொள்கைகள் திட்டங்கள் என்னவென்பதை பிறரறியும் பொருட்டு, யுகாந்தா என்ற ஒரு பத்திரிக்கையைத் துவக்கினார்கள்.