பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி #65

துன்பம் எப்போதும் இன்பத்தைச் சூழ்ந்து கொண்டிருக் றகிறது. புத்திரப் பாசத்துக்கு மட்டும் இந்த விதி பொருந்துவது அல்ல; உலகத்துப் பொருள்கள் அனைத்தின் மீதும் ஏற்படும் விருப்பத்துக்கும் இந்த விதி பொருத்தமானதே.

மனத்தில் தீரமும் உறுதியும் பூண்டு, இன்ப-துன்பங்கள் அனைத்தையும் இறைவன் திருவடிகளில் காணிக்கை செய்வதொன்றே மனிதனுக்கு வழி.

சரி, இப்போது அந்த விஷயத்துக்கு வருவோம். எந்த மனிதனுடைய விதியோடு உன்னுடைய விதி பிணைக்கப் பட்டுள்ளதோ, அந்த மனிதன் விசித்திரமானவன் என்பதை இதற்குள் நீ பெரும்பாலும் புரிந்து கொண்டிருக்கலாம்.

இந்த நாட்டில், இன்றைய மக்களுக்குள்ள மனோபாவமும், வாழ்க்கைக் குறிக்கோளும், செயல் வகையும் எனக்கு மாறானவை. முற்றிலும் மாறுபட்டவை. அசாதாரணமானவை.

சாதாரண மக்கள், அசாதாரணமான கருத்துக்களைப் பற்றியும், அசாதாரணமான முயற்சிகளைப் பற்றியும், அசாதாரணமான உயர்ந்த நம்பிக்கைகளைப் பற்றியும் என்ன சொல்வார்கள் என்பதை நீ அறிந்திருக்கலாம்.

இக் கருத்துக்களை எல்லாம் அவர்கள் பைத்தியக்காரத் தனமானவை என்கிறார்கள். அந்தப் பைத்தியம் வெற்றி கண்டு விட்டாலோ, ஒளி கண்ட மகா புருஷர்கள் என்று போற்று கிறார்கள்.

ஆனால், எத்தனை பேர்களுடைய முயற்சி வெற்றி பெறுகிறது. ஆயிரக் கணக்கானவர்களில் பத்து பேர் அசாதாரண மானவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பத்து பேரிலும் ஒருவரே தம் குறிக்கோளை அடைகிறார்.