பக்கம்:பறவைகளைப் பார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கொண்டைக் குயில்

வழியிலே பல பறவைகள் உயிரிழக்க நேரிடுகிறது. அப்படியிருந்தும் பறவைகள் வலசை வருவதற்குக் காரணம் என்ன? முக்கியமாகக் கடுங் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்வதும், அக்காலத்தில் உணவு கிடைப்பது அரிதாவதுமே காரணங்களாகும். தண்ணீர் உறைந்து போய் விடுவதால் கடலிலிந்து மீன் முதலிய உணவு எதுவுமே நீர்வாழ் பறவைகளுக்குக் கிடைக்காது. கூடு கட்டும் இடங்கள் நன்கு கிடைப்பதாலும், கோடைகால வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளக் கருதியும், இளவேனிற் காலத்திலே பறவைகள் மீண்டும் திரும்பிப் பயணம் செய்கின்றன.

பறவைகளின் வலசை பற்றிய ஆராய்ச்சி மிகுந்த சுவையுள்ளதாகும். ஆனால் இதிலே இன்னும் விளங்காத பல பிரச்சினைகள் உள்ளன. எப்பொழுது புறப்படுவதென்று பறவைகளுக்கு எப்படித் தெரிகின்றது? அடையாள நிலப் பகுதியே இல்லாத கடலிலே அவை எப்படி வழி கண்டுபிடிக்கின்றன? ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட ஒரே இடத்திற்கே அவை எப்படி. வருகின்றன? கொண்டைக் குயில்கள் முட்டையிட்டு விட்டு இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் வந்துவிடுகின்றன. அப்படியிருந்தும் பல வாரங்களுக்குப் பிறகு இளங் கொண்டைக் குயில்கள் தம்மை வளர்த்த பறவைகளை விட்டுவிட்டு வலசை வந்து எப்படி முன்னாலேயே வந்த கொண்டைக் குயில்களோடு சேர்ந்து கொள்ளுகின்றன? இவை போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் தீர்வு காணவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

39