பக்கம்:அரை மனிதன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

7


 ஏன் சிலபேரை இந்த நாட்டிலே 'தீண்டாதவர்கள்' என்று ஒதுக்குகிறார்கள் என்பது ரொம்ப நாளாகத் தெரிவது இல்லை. என் கால் போன பிறகுதான் அந்த உண்மை தெரிந்தது. எல்லோரும் என்னை 'நொண்டி' என்று கூப்பிட்டார்கள். அதிலும் என் தம்பி கூட அப்படித்தான் கூப்பிட்டான். என்னைக் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்தான்.

இந்த நாட்டிலே உழைத்து உழைத்து நொண்டியாகப் போனவர்கள் பலபேர். அவர்கள்தான் தீண்டாதவர்கள். அவர்கள் காலத்துக்கும் உழைத்தார்கள். சொத்து சுகம் ஒன்றும் கண்டது இல்லை. உழைக்கிறவனுக்குச் சுகம் எப்படி உண்டாகும்? 'உழைப்பே உயர்வு தரும்; கடின உழைப்பு அவசியம்' இப்படி எல்லாம் அங்காங்கே எழுதி வைத்திருப்பதைப் படித்து இருக்கிறேன். அதற்கப்புறம் இந்த உழைக்கிற கூட்டத்தையும் பார்க்கிறேன். அவர்கள் எந்த உயர்வைப் பெற்றார்கள். அவர்கள் அதே ஏழ்மைதான். பற்றாக்குறை தான். போருக்குப் போகாமலே 'பட்டாளம்' என்ற பெயர் அவர்களுக்கு அமைந்து இருக்கிறது. அதுதான் பட்டினிப் பட்டாளம். அவர்கள் இந்த நாட்டிலே ஒதுக்கப்பட்டவர்கள். என் உழைப்பால்தான் என் தம்பி முன்னுக்கு வந்தான். ஆனால் அவன் என்னை உழைப்பாளிகள் போலவே ஒதுக்கி விட்டான். அது எப்படி அவன் மட்டும் விதிவிலக்காக முடியும்?

நான் நொண்டிதானே! நான் எப்படி அவனுக்கு உழைத்திருக்க முடியும்? ஆச்சரியமான கேள்விதான். எனக்கு மதிப்பு இல்லை. ஆனால் என் காலுக்கு விலை பத்தாயிரம். அதை வைத்ததுத்தான் அவனை நிம்மதியாகப் படிக்க வைத்தார்கள். அதனால்தான் சொல்லுகிறேன். அவன் என் உழைப்பால் முன்னுக்கு வந்தான் என்று. என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஆனால் காலுக்குப் பத்தாயிரம் கொடுத்தார்கள். அதுக்குக்கூட அதிருஷ்டம் வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/9&oldid=1461915" இலிருந்து மீள்விக்கப்பட்டது