பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அவள் அழகும் -பிரமாதம் என்று வியக்கத் தக்கதாயில்லை யெனினும் --- சில நட்சத்திரங்களின் அழகை விட நன்றாகத் தானிருந்தது. திறமையாக மேக்கப் செய்தால் அவளும் ஜொலிக்கும் நட்சத்திரமாக மாற முடியும்.

அந்த நம்பிக்கை தான் முக்கிய தூண்டுதல் அவளை சினிமா உலகுக்கு பிடித்துத் தள்ள . அவள் எதிரேயிருந்த கண்ணாடி ஆசையை வளர்த்தது. ஆர்வத்தீயை அதிகரிக்க உதவியது. 'அவளுக்கும் இவளுக்கும், எந்த ஸ்டாருக்கும் நான் என்ன மட்டமா? நான் அழகாகத்தான் இருக்கிறேன்' என்று இப்படியும் ஆட்டி அசைத்து, சாய்ந்து வளைத்து, நிமிர்த்து, பலவிதப் 'போஸ்கள்' சித்தரித்து மகிழ்ந்தாள். கண்களைச் சுழட்டிக் கொண்டாள் எழிலாக நின்று பார்த்தாள், ஒயிலாக அசைந்து நடந்தாள் சினிமாவில் கண்டு ரசித்த பலவிதக் கோணங்களை, ஸ்டைல்களை யெல்லாம் தானே நடித்துப் பார்த்துக்கொண்டாள், ரொம்ப நல்லாருக்கு இவ்வளவு போதாதா!' என்று அவள் தனக்குத் தானே ஸர்டிபிகேட் கொடுத்துவிட்டாள். அவளைப் பொறுத்தவரையில் தான் சினிமா ஸ்டாராகவே ஆகிவிட்டதாக நினைப்பு.

அவளிடம் அழகிருந்தது கொஞ்சம் படித்திருந்தாள். சினிமா உலகத்தில் உள்ளவர்களில் எத்தனையோ பேருக்கு ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது, தமிழில் சரியாகக் கையெழுத்திட தெரிந்தவர்கள் தான் என்ன ரொம்ப ரொம்ப பேர்கள் இருந்துவிடப் போகிறார்கள்! படங்களில் பலர் தமிழைக் கொலை செய்வதிலிருந்தே அவர்கள் படிப்பு லட்சணம் தெரிகிறதே. தனக்கோ ஆங்கிலம் கூட வாசிக்கத் தெரியும், ஹிந்தி வேறு படித்திருக்கிறாள் போதாதா? கொஞ்சம் ஆங்கில பதங்களை இடையிடையே தூவி தமிழைத் தெளிவாகப் பேசினால் அவள் படித்தவள் என்பது லேசாக புரிந்துவிடும். நேரே போக வேண்டியது; பட முதலாளியப் பார்க்க வேண்டியது கவர்ச்சிக்கும் முறையில் பேசி தன் ஆர்வத்தைப் பற்றிச் சொன்னதுமே, தனக்கு 'சான்ஸ்' கிடைத்துவிடும் என்று நம்பினாள். அவள் எண்ணற்ற