பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. முத்தி நெறி

[1]


இவ்வுலகில் வாழும் மக்கள் கருத்தாலும் செயலாலும் பலதிறப்பட்டவர்களாய் இருத்தலைக் காணலாம். சிலர் பொருள் திரட்டுவதனையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர்; சிலர் இவ்வுலக இன்பத்திலேயே ஆழங்கால் பட்டிருப்பர்; சிலர் கல்வி அறிவைப் பெருக்குவதிலேயே நாட்டம் கொண்டிருப்பர். ஆனால், ஒருசிலருக்கு இறைவனருளால் நிலையில்லாததும், அடிக்கடி மாறுத் தன்மையுடையதும், துன்பம் நிறைந்ததுமான இவ்வுலக வாழ்க்கையில் வெறுப்பும்; நிலையுள்ளதும், இன்பம் நிறைந்ததுமான வீடுபேற்றில்-மோட்சத்தில்-விருப்பமும் உண்டாகின்றன. இங்ஙனம் மோட்சத்தை-முக்தி நிலையை-அவாவி நிற்பவர்களைச் சமய நூலார் ‘முமுட்சுகள்’ என்று குறிப்பிடுவர். துன்பம் கலவாத இன்பம் எதுவோ அதுவே ‘மோட்சம்’ அல்லது ‘முத்தி நிலை’ என்று வழங்கப் பெறும். முத்தி என்பது உரவு நீராகிய கடலில் தோன்றும் ஒரு பெரும் முத்துப் போன்ற சிறப்பினையுடைய தென்னும் பொருளில் ‘முத்தி’ என வந்தது. முத்து நீருள் தோன்றுவது போன்று முத்தியும் திருவருளாகிய நீருள் தோன்றுவது. முத்து குளிர்ந்து இன்பம் தருவதுபோன்று முத்தியும் அருள் இன்பம் பயப்பதாகும். இந்த இன்பம் ‘ஆன்மாநுபவம்’[2], ‘ஈசுவராநுபவம்’ ஆகிய இரண்டிலும் உண்டாகின்றது. இந்த இரண்டனுள் ஆன்மாநுபவத்தில்

.


  1. * திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் 75ஆவது நினைவு மலரில் (1973) வெளிவந்தது.
  2. 1. உலகத்தில் ஆழங்கால் பட்டிருப்பவர்கள் ‘புபுட்சுகள்’ எனக் குறிப்பிடப்பெறுவர்,