பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஈர்ப்பு ஆற்றல்

49

அடையப் புறப்பட்டபொழுது அக்குழுவில் மலையேறுவோர் பதின்மூன்று பேரும் அவர்களுக்கு உணவு, தேவை யான பிறபொருள்கள் இவற்றைச் சுமந்து செல்ல மூட்டை முடிச்சுக்களைத் தூக்குவோர் பேரெண்ணிக்கையிலும் இருந்தனர். இம்முறையில் தான் 24,000 அடி உயரத்தில் நன்முறையிலமைந்த பாடிவீடு அமைப்பதற்கு அவர்கட்கு இயலுவதாக இருந்தது. அந்த இடத்திலிருந்து மூவர் மட்டிலும் ஒரு சிறு அளவு உணவினையும் தளவாடத்தையும் சுமந்து கொண்டு 27,900 அடி வரை சென்று அதன்பிறகு கைவிட்டனர். ஹில்லாரியும் டென்சிங்கும் இவற்றை எடுத்துக்கொண்டு தம்மைத் தளராதிருக்கச் செய்துகொண்டபடியால் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருந்து எவரெஸ்டு உச்சியினை அடைந்தனர். அவர்களும் தமக்கு வேண்டிய பொருளையும் தளவாடத்தையும் சுமந்து செல்லும்படி நேரிட்டிருந்தால் அவர்கள் எவரெஸ்டின் உச்சியினை அடைந்திருத்தல் இயலாது. இதனைப் படம் (படம்-21) விளக்குகின்றது.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் பல நிலை இராக்கெட்டு அமைந்தது. ஒரு சிறு இராக்கெட்டு ஒரு பெரிய இராக்கெட்டின்மீது அமைக்கப்பெற்றது; இப்பெரிய இராக்கெட்டு இதனை விடப் பெரிய இராக்கெட்டின்மீது அமைக்கப்பெற்றது. கொள்கையளவில் எத்தனை நிலைகள் தாம் அமையவேண்டும் என்பதற்கு எல்லைக்கோடு ஒன்றும் இல்லை. ஆனால், மூன்றடுக்கு இராக்கெட்டின் பருமனே நமக்கு ஓரளவு அச்சந்தரும் நிலையிலுள்ளது.

இ-4