பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ திட்டம்

42

1968ஆம் ஆண்டு நிறைவுபெறும் தறுவாயில் அமெரிக்கா மனிதர்களைச் சந்திரனில் இறக்க வேண்டும் என்ற அந்நாட்டுக் குறிக்கோளின் அருகே சென்றுவிட்டது. மிகவும் பாராட்டுதற்குரிய செய்தியாகும். அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்கள் தாம் பூமியின் இழுவிசையினின்றும், விடுபட்டு அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கி வீட்டுலகம் செல்லும் ஆன்மாக்கள் போல் எங்கும் பரந்து கிடக்கும் அகண்ட பெருவெளியில் பூமிக்கு அணித்தாகவுள்ள மற்றோரு துணைக்கோளின் அருகே சென்ற முதல் மனிதர்களாவர். இந்த ஆண்டின் இறுதியில்[1] மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்கள் கென்னடி - முனையினின்றும் சாட்டர்ன் - 5 என்ற மாபெரும் இராக்கெட்டின் உதவியினால், அப்போலோ - 8 இல் தம் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினர். மனிதர்கள் அம்புலிக்கு அருகில் சென்ற முதற் பயணம் இதுவேயாகும். அவர்கள் அம்புலிக்குக் கிட்டத்தட்ட நூற்றுப் பன்னிரண்டு கி. மீட்டர் தொலைவிலிருந்த வண்ணம் பத்து முறை அத் துணைக்கோளை வலம் வந்தனர். பயணம் தொடங்கிக் கிட்டத் தட்ட 147 மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் காற்று மண்டலத்திற்குள் திரும்பவும் நுழைந்தனர். பசிபிக் மாகடலில் ஏற்கெனவே குறிப்பிடப்பெற்றிருந்த சரியான இடத்தில் மிகவும் பாதுகாப்பாக அவர்கள் வந்திறங்கினர். இந்த மூன்று விண்வெளி வீரர்களும் நல்ல உடல் நலத்துடனேயே காணப் பெற்றனர். அப்போலோ . 8 பயணத்தின் முழு விவரங்களையும் அடுத்த இயலில் விரிவாகக் காண்போம்.


  1. 1968ஆம் ஆண்டு திசம்பர் 21-ஆம் நாள்.