பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அம்புலிப் பயணம்

நாள் பயணமே. அப்பயணத்தின் தலைவராகப் பணியாற்றியவர் இந்த போர்மன் என்பவரே. எடையற்ற நிலையில் நீண்ட நாள்கள் இருக்க நேரிடினும் மனிதன் அலுப்புச் சலிப்பு இன்றி அதனைத் தாக்குப் பிடித்து உழைக்க முடியும் என்று மெய்ப்பித்த வீரர் இவரே. இவர் தொடர்ந்து 330 மணி 35 நிமிட நேரம் பூமியைச் சுற்றி 206 தடவைகள் வலம் வந்தவர். இவர் நகைச்சுவையுடன் உரையாடும் திறனுடையவர். ஜெமினி - 7இன் விண்வெளிப் பயணத்தின் பொழுது இரண்டு வாரம் முகச் சவரம் செய்து கொள்ளவும் இல்லை; குளிக்கவும் இல்லை. அவற்றிற்கு நேரம் ஏது ? இந் நிலையில் அவர் பூமிக்குத் திரும்பியபொழுது உயர் அதிகாரிகள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க அவரை நெருங்கினர். அவர்களை நோக்கி நீட்டிய கரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே ”சகிக்க முடியாத அளவுக்கு என் உடலில் அழுக்கேறியுள்ளது” என்றார் போர்மன். ”ஆமாம், சிறிது அழுக்கடைந்துதான் காணப்படுகின்றீர்கள்” என்று அநுதாபத்துடன் சொல்லிவைத்தனர் அந்த அதிகாரிகள். உடனே அதற்கு அவர் ”ஆனால் இந்த அழுக்கு உண்மையான உழைப்பின் விளைவாக எழுந்த தூய்மையான அழுக்காகும் இதை மறந்து விடாதீர்கள்” என்று நகைச் சுவையுடன் மறு மாற்றம் அளித்த வித்தகர்.

அப்போலோ - 8 பயணம் இவருக்கு இரண்டாவது விண்வெளிப் பயணமாகும். இதுகாறும் விண்வெளியில் ஒரு தடவைக்கும் அதிகமாக உலவித் திரும்பியவர்கள் எண்மர். அவர்களுள் எழுவர் அமெரிக்கர் ; ஒருவர் இரஷ்யர். கோமரோவ் (Komarow) என்ற பெயர் கொண்ட இந்த இரஷ்ய வீரர் இரண்டாம் முறை சென்றபோது எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போனர். இப்பொழுது போர்மன் ஒன்பதாவது மனிதராகின்றார்.

இதுகாறும் விண்வெளியில் பயணம் செய்தவர்களுள் மூன்று முறை சென்று திரும்பியவர் வால்ட்டீர் ஷிரா என்ற அமெரிக்கர் ஒருவரே. இப்போது அப்போலோ - 8 இல் பயணம் செய்த ஜேம்ஸ் ஏ. லோவெல்லும் இந்தப் பெருமையை