பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பயணத்தின் பயன்

97

நாளடைவில் மனித குலத்திற்கு என்னென்ன நன்மைகள் விளையக்கூடும் என்பதை முன் கூட்டியே யாவர் தாம் அறிதல் கூடும்?

அம்புலித் தரையில் விண்வெளி விமானிகள் சிறிது. நேரமே தங்குகின்றனர். அக்குறுகிய காலத்தில் அவர்கள் சேகரிக்கும் அறிவியல் தகவல்கள் அந்தப் பாழ்வெளியில் அடங்கிக் கிடக்கும் அறிவுக் களஞ்சியத்தின் 'கைம்மண் அளவே'யாகும். இதன் பின்னர் அம்புலிக்குச் செல்வோர் இன்னும் அதிக நேரம் அங்குத் தங்குவர் ; மேலும், பல சிக்கலான சோதனைகளை மேற்கொள்வர். அண்மையில் மேற்கொள்ளப் பெற்ற அப்போலோ-12 பயண விண்வெளி வீரர்கள் ஏழு மணிநேரம் அங்குத் தங்கினதையும் அணுவாற்றலால் இயங்கக்கூடிய பல பொறியமைப்புகளை நிறுவி வந்ததையும் கண்டோம். வருங்காலத்தில் இத்தகைய கருவி அமைப்புகளும் நுட்பங்களும் இன்னும் செம்மையுறும் என்பதற்கு ஐயமில்லை. இன்று நாம் ரைட் சகோதரர்கள் பறந்து சென்ற பொறியை எங்ஙனம் கருதுகின்றோமோ, அங்ஙனமே இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து அப்போலோ-11 கருதப்பெறும் என்பது எள்ளளவும் மிகையாகாது.

ரைட் சகோதரர்களின் அன்றைய சாதனையும் விமான அகத்தின் தோற்றமுமே இன்றைய விண்வெளிப் பயண வாய்ப்பினை நல்கியுள்ளன. பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தான் மனிதன் சின்னஞ்சிறு செயற்கைத் துணைக்கோள்களால் விண்வெளிக்குக் கை நீட்டினான். எட்டு ஆண்டுகட்கு முன்னரே முதன்முதலாக அவன் விண்வெளிக்கு நேரில் சென்றான், அப்போது அவன் சென்ற தொலைவெல்லாம் பூமியின் வளி மண்டலப் போர்வைக்குச் சற்று மேலாகத்தான். ஆனால், இன்று மனிதன் அம்புலித் தரையில் நிமிர்ந்து நிற்கும் நிலைக்கு ஆயத்தமாகியுள்ளான். இதனால் என்னென்ன விளையும் என்பது எவரும் அறியாத புதிராகவே உள்ளது. அப்போலோ-10 விண்வெளிக் கலத்தின் தலைமை விமானி தாமஸ் ஸ்டாஃபோர்டு கூறிய கருத்து இவ்விடத்தில் சிந்தித்தற்குரியது. அவர் கூறியது: "இனி நாம் எவ்வளவு தூரம்

அ-7