பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அம்புலிப் பயணம்

கூடும். எரிமலைக் குழம்பு மாதிரிகளில் கோளியல் அறிஞர்கட்குப் பேரரர்வம் உண்டு. இவர்கள் பூமியும் அம்புலியும் உட்படப் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின என்று ஆய்வுகளை மேற்கொள்பவர்கள். அம்புலி தோன்றிய காலம் முதல் இன்றுவரை அஃது எத்தகைய மாற்றங்களை அடைத்தது என்பதை அறிய இப்பொருள்கள் துனை செய்யும்.

மேற்குறிப்பிட்ட 'டார்ஸ்-லிட்ராவ்' என்ற இலக்கு 'அமைதிக் கடல்' (Sea of Serenity) என்னும் அம்புலிப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அம்புலி ஆய்வுகளின் மூலம் இப்பகுதி ஒரு 'மாஸ்கான்' (MassConcentration) எனக் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. அஃதாவது, இப் பகுதி மிகுந்த பொருண்மைச் செறிவு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இங்கு உலோகத் தனிமங்கள் இருக்கக் கூடும். இத் தனிமங்கள் அம்புலியைச் சுற்றிவரும் செயற்கைக் கலங்களின் வட்டப் பாதையைப் பாதிக்கும் வகையில் ஈர்ப்பு விசையைச் செலுத்துபவை என்று கருதப் பெறுகின்றன. அப்போலோ - 17 இந்த இலக்குக்கு மேலே பறந்து சென்றபோது 'மாஸ்கான்கள்' பற்றியும், அவை செயற்கைக் கலங்கள் மீது உண்டாக்கும் விளைவுகள் பற்றியும் துணுக்கமான ஆய்வுகள் நடத்தப்பெற்றன்.

செர்னானும் ஸ்கிமித்தும் மின்விசை மோட்டார் வண்டியில் அம்புலித் தரையில் மூன்று முறை சுற்றி வந்தனர். அப்போது அவர்கள் செய்த முக்கியமான பணிகளுள் ஒன்று நிலாத் தரையில் ஆய்வு நிலையம் அமைத்ததாகும். இந்த ஆய்வு நிலையம் பலவகையான கருவித் தொகுதிகளைக் கொண்டது. இக் கருவிகள் தாமாகவே இயங்குபவை ; தம்மில் பதிவாகும் தகவல்களைத் தாமே நெடு நாட்களுக்கு ஒலிபரப்பிப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதற்கு - முன்னர்ச் சென்ற ஐந்து அப்போலோ கலங்களும் நிறுவிவந்த ஐந்து ஆய்வு நிலையங்களும் அறிவியல் தகவல்களை இன்றும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன.