பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அம்புலிப் பயணம்

முடியாது, எனினும், அங்குள்ள மலைகளைக் குடைந்து பெரிய பெரிய குகைகளை உண்டாக்கலாம் என்றும், அவற்றினுள் செயற்கை முறையில் தயாரிக்கப் பெறும் உயிரியத்தை (Oxygen) நிரப்பி வாழலாம் என்றும் அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். காற்று வெளியேறாமல் குகை வாயில்களை மூடிய கதவுகள் காக்கும், அணுவாற்றல் தரும். மூலப் பொருள்கள் அம்புலியில் உள்ளன என்றும், அவற்றைக் கொண்டு மின்னாற்றலை உற்பத்தி செய்யலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். அஃது இயலாது போயினும் பகலவன் ஒளியினின்றே மின்னாற்றலை அளிக்கவல்ல மின் கலங்களைத் (Solar batteries} தயாரித்து இந்த ஆற்றலைப் பெறலாம். மின்னாற்றலை இருப்பின் பல தொழிலகங்கள் தோன்றி செயற்படத் தொடங்கிவிடும்.

தொழிலகங்களுள் மிகவும் முக்கியமானது உணவுத் தொழிற்சாலையாக இருக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம். அம்புலியிலுள்ள பாறைகளிலிருந்து உயிரியம், நீரியம் (Hydroger), மந்தவாயு (Nitrogen), கரி, கந்தகம், பாஸ்வரம் போன்றவற்றைப் பிரித்தெடுத்து, பிறகு அவற்றைப் பல்வேறு விகிதங்களில் இணைத்து வேதியியல் முறையில் புரதம், கொழுப்பு, சருக்கரை, மாப்பொருள் ஆகியவற்றைத் தயாரிக்கலாம். இதனால் அங்கு உணவுப் பஞ்சமே இல்லாமல் செய்யலாம். சந்திரனில் சுரங்கங்கள் வெட்டி அதன் அகட்டில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளைக் கொணர்ந்து உருக்கித் தண்ணீர்த் தட்டுப்பாடும் இல்லாது செய்யலாம். செயற்கை ஒளியின் கீழ் சில தாவரங்களையும் பயிர் செய்யலாம்.

மருத்துவத் துறையிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பலவீனமான இதயம் படைத்தவர்கள் சந்திர மண்டலத்தில் சுகமாக வாழலாம். ஏனெனில், அங்கு ஈர்ப்பு ஆற்றல் குறைவானதால் உடலுக்கு அதிகமான ஆயாசம் ஏற்படுவதில்லை. ஆயினும், சந்திரனைச் சென்றடையும் பயணத்தைத் தாங்குவது பலவீன இதயம் படைத்தவர்கட்குச் சாத்தியமா என்பதுதான் ஐயத்திற்கு இடமாக உள்ளது!