சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/வெற்றி வீரர்

விக்கிமூலம் இலிருந்து
27. வெற்றி வீரர்


சோழ நாட்டைச் சேர்ந்த திருவெண்காடு என்னும் கிராமம் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி நரசிம்மவர்மர் அன்று அந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்யப் போகிறார்; தம் ஆருயிர்த் தோழரான வீர தளபதி பரஞ்சோதியையும் அழைத்து வரப்போகிறார் என்னும் செய்தி வந்ததிலிருந்து அந்த ஊரார் யாரும் பூமியிலேயே நிற்கவில்லை. இரண்டு நாளைக்கு முன்பு பாண்டிய சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் கொள்ளிடக் கரையில் நடந்த பெரும் போரைப் பற்றி அந்தக் கிராமவாசிகள் கேள்விப்பட்டிருந்தார்கள். பாண்டியன் ஜயந்தவர்மன் தோல்வியடைந்து புறமுதுகிட்டு ஓடியதைப் பற்றியும் அறிந்திருந்தார்கள். அந்த யுத்தத்தின் காரணமாக, கொள்ளிட நதியின் தண்ணீர்ப் பிரவாகம் இரத்த வெள்ளமாக மாறி ஓடியதை நேரில் பார்த்தவர்கள் வந்து அவர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். பாண்டிய சைனியம் பல்லவ சைனியத்தைவிடப் பெரியது என்பதும், மாமல்லர், பரஞ்சோதி இவர்களின் வீர சாகஸச் செயல்களினாலேயே பாண்டிய சைனியம் தோல்வியடைந்து சிதறி ஓடியது என்பதும் எல்லாரும் அறிந்த விஷயங்களாயின.

அப்பேர்ப்பட்ட வீராதி வீரர்கள் வருகிறார்கள் என்றால், அந்தக் கிராமவாசிகள் தலை தெரியாத ஆனந்தத்தில் மூழ்கியிருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? ஏற்கெனவே அந்தக் கிராமவாசிகளுக்கு இன்னொரு வகை அதிர்ஷ்டம் கைகூடியிருந்தது. பத்துத் தினங்களுக்கு முன்பு திருநாவுக்கரசர் பெருமான் அவ்வூருக்கு விஜயம் செய்து சைவத் திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். ஆலயப் பிராகாரங்களில் அப்பெரியார் தம் திருக்கைகளினால் புல்செதுக்கும் திருப்பணியை நடத்தியதுடன், மாலை நேரங்களில் ஆலய மண்டபத்தில் தம் தேனிசைப் பாசுரங்களைச் சீடர்களைக் கொண்டு பாடுவித்து வந்தார்.

அவ்விதம் சிவானந்தத்திலும் தமிழின்பத்திலும் ஆழ்ந்திருந்தவர்களுக்கு, சக்கரவர்த்தி திருக்குமாரரும் அவருடைய வீர தளபதியும் வரப்போகும் செய்தி மேலும் குதூகலத்தை உண்டாக்கிற்று. திருநாவுக்கரசரைத் தரிசிப்பதற்காகவே மாமல்லரும் பரஞ்சோதியும் வருவதாக ஒரு வதந்தியும் பரவியிருந்தது. ஆனால், நமசிவாய வைத்தியர் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் உண்மையில் அவர்கள் வருகிற காரணம் இன்னதென்று தெரிந்திருந்தது. பரஞ்சோதியின் அருமைத் தாயார் அந்த வீட்டிலேதான் இருந்தாள். பரஞ்சோதிக்கு வாழ்க்கைப்படுவதற்காகக் காத்திருந்த பெண்ணும் அந்த வீட்டிலேதான் இருந்தாள். அப்படியிருக்கும்போது, தளபதி பரஞ்சோதியும் அவருடைய தோழரும் திருவெண்காட்டுக்கு வருவதற்கு வேறு காரணம் எதற்காகத் தேட வேண்டும்? எனவே, அந்தக் கிராமத்தில் மற்ற எந்த வீட்டையும் விட நமசிவாய வைத்தியரின் வீட்டிலே குதூகலமும் பரபரப்பும் அதிகமாயிருந்ததென்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

சாதாரணமாய்ச் சாந்த நிலையில் இருப்பவரான நமசிவாய வைத்தியர் அன்று வீட்டுக்குள்ளிருந்து வெளியிலும் வெளியிலிருந்து உள்ளேயும் நூறு தடவை போய் வந்து கொண்டிருந்தார். அவருடைய மனையாள் தன் மகள் உமையாளை ஆடை ஆபரணங்களால் அலங்கரிப்பதில் அன்று காட்டிய சிரத்தை அதற்குமுன் எப்போதும் காட்டியதில்லை. உமையாளின் தம்பியும் தங்கைகளும் அவளைப் பரிகாசம் செய்வதில் மிகவும் தீவிரமாயிருந்தார்கள். உமையாளின் உள்ளமோ, பெரும் புயல் அடிக்கும் போது கொந்தளித்து அலை வீசும் கடலை ஒத்திருந்தது. பரஞ்சோதியின் அன்னை கண்ணீரும் கம்பலையுமாய்த் தன் ஏக புத்திரனை எதிர்பார்த்த வண்ணமிருந்தாள்.

இங்கு இப்படி இருக்க, திருவெண்காட்டுக்கு ஒரு யோசனை தூரத்தில் வந்து கொண்டிருந்த மாமல்லர், பரஞ்சோதி இவர்களுக்குள்ளே மாமல்லரிடமே உற்சாகம் அதிகம் காணப்பட்டது. பரஞ்சோதியின் முகத்தில் சோர்வு அதிகமாயிருந்ததுடன் அவருடைய குதிரை அடிக்கடி பின்னால் தங்கியது. அவரை மாமல்லர் அவ்வப்போது பரிகாசம் செய்து விரைவுபடுத்தினார். 'இது என்ன தளபதி! உம்முடைய குதிரை ஏன் இப்படிப் பின்வாங்குகிறது? உம்முடைய அவசரம் அதற்குத் தெரியவில்லையா, என்ன? குதிரைகளை வேணுமானால் மாற்றிக் கொள்ளலாமா?' என்றார். உம்முடைய முகம் ஏன் இவ்வளவு பிரகாசமாயிருக்கிறது? இதென்ன, நீர் உம்முடைய காதலியைக் காணப் போகிறீரா? அல்லது கொலைக் களத்துக்குப் போகிறீரா? பயப்படாதீர்! நான் நல்ல வார்த்தை சொல்லி உமையாள் உம்மை அதிகமாகக் கண்டிக்காமல் பார்த்துக் கொள்கிறேன்' என்று கேலி செய்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக் கடைசியில் பரஞ்சோதியால் பொறுக்க முடியாமல் போகவே, அவர் கூறியதாவது; "ஐயா என்னுடைய மன நிலையை அறிந்து கொள்ளாமல் புண்ணில் கோலிடுவதுபோல் பேசுகிறீர்கள். உண்மையாகவே எனக்கு இங்கு வருவதற்கு விருப்பம் இல்லை. நீங்கள் வற்புறுத்திய போது இணங்கிவிட்டேன். ஏன் இணங்கினோம் என்று இப்போது வருத்தமாயிருக்கிறது. உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும், இப்போதாவது நான் திரும்பிப் போவதற்கு அனுமதி கொடுங்கள். தாங்கள் எனக்காகச் சென்று என் தாயாரைப் பார்த்து, நான் சௌக்கியமாயிருக்கிறேன்; ஆனால், அவருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றமுடியவில்லை. ஆகையால், அவரைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு வராமல் நின்றுவிட்டேன் என்று சொல்லிவிடுங்கள்!"

இவ்விதம் உணர்ச்சி ததும்பிய குரலில் பரஞ்சோதி கூறியதைக் கேட்டு மாமல்லர் சிறிது திடுக்கிட்டார். 'தளபதி! உம்முடைய தாயாருக்கு நீர் என்ன வாக்குறுதி கொடுத்தீர்? அதை ஏன் நிறைவேற்ற முடியவில்லை?' என்று கவலை கொண்ட குரலில் வினவினார். "பிரபு! எதற்காக நான் பிறந்த ஊரையும் வீட்டையும் விட்டுக் கிளம்பினேன் என்று தங்களுக்குச் சொன்னேனே, அது ஞாபகமில்லையா? என்னுடைய மாமன் நமசிவாய வைத்தியர் தம்முடைய மகளை, கல்வி கேள்விகளில் சிறந்த உமையாளை - நிரட்சரகுட்சியான எனக்குக் கட்டிக் கொடுக்கப் பிரியப்படவில்லை. அதற்காக, கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகருக்குப் போய் வாகீசப் பெருமானின் திருமடத்தில் சேர்ந்து படித்துச் சகலகலா வல்லவனாகத் திரும்பி வரும் எண்ணத்துடன் புறப்பட்டேன்; ஆனால், நடந்தது என்ன? போனது போலவே நிரட்சரகுட்சியாகத் திரும்பி வந்திருக்கிறேன். திருநாவுக்கரசர் பெருமானைக் கண்ணாலேகூடப் பார்க்கவில்லை...." என்று பரஞ்சோதி சொல்லி வந்தபோது, நரசிம்மவர்மர் கலகலவென்று சிரித்தார். "பல்லவ குமாரா! தங்களுடைய சிரிப்பு என் உள்ளத்தில் நெருப்பாய் எரிகிறது! வடக்குப் போர் முனையிலிருந்து சக்கரவர்த்தி என்னைத் தங்களிடம் அனுப்பியபோது தங்களை எனக்குக் கல்வி கற்பிக்கும்படியாகச் சொல்லியனுப்பினார்! ஆனால், தாங்கள் எனக்குக் கல்வி கற்பிக்கவும் இல்லை; நானாக ஏட்டைக் கையில் எடுப்பதற்கும் விடவில்லை; எப்போதாவது சிறிது நேரம் கிடைத்தால், அந்த நேரத்தில் ஆயனரின் குமாரியைப் பற்றிப் பேசிப் பொழுது போக்கிவிட்டீர்கள்! ஆ! இராஜ குலத்தினரைப்போல் சுயநலக்காரர்களை நான் கண்டதில்லை!' என்று சோகம் ததும்பிய குரலில் பரஞ்சோதி சொல்ல, அதைக் கேட்ட குமார சக்கரவர்த்தி இன்னும் உரத்த சத்தத்துடன் சிரித்தார்.

மாமல்லரும் பரஞ்சோதியும் திருவெண்காட்டை அடைந்த போது கிராமத்தின் முகப்பில் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்புக் காத்திருந்தது. அப்போது மாமல்லருக்கு முன்னொரு நாள் மண்டபப்பட்டுக் கிராமத்தில் நிகழ்ந்த வரவேற்புக் காட்சியும், அன்று ஆயனரும் சிவகாமியும் முக்கியமாக வரவேற்புக்குரியவர்களாக இருந்ததும், தம்மை இன்னாரென்று தெரிவித்துக்கொள்ளாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதும் ஞாபகம் வந்தன. ஆஹா! அதற்குப் பிறகு எத்தனை எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன! இதற்குள்ளாகக் கண்ணபிரான் மண்டபப்பட்டுக் கிராமத்துக்குச் சென்று, கொள்ளிடக்கரைச் சண்டையைப் பற்றியும் பாண்டியன் புறமுதுகிட்டு ஓடியதைப் பற்றியும் சொல்லியிருப்பான். சிவகாமி எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்! எவ்வளவு ஆர்வத்துடன் தம்முடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்? இந்தத் தடவை அவளும் மற்றக் கிராமவாசிகளுடனே வந்து தம்மை வரவேற்பாளா? மாமல்லர் இத்தகைய மனோராஜ்ய பகற்கனவுகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில், "குமார சக்கரவர்த்தி நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க!" "கங்க மன்னனையும் மதுரைப் பாண்டியனையும் போரில் புறங் கண்ட வீர மாமல்லர் வாழ்க!" "வீராதி வீரர் தளபதி பரஞ்சோதி வாழ்க!" என்பது போன்ற ஆகாசமளாவிய கோஷங்கள் அவருடைய பகற் கனவுகளைக் கலைத்துத் திருவெண்காட்டுக் கிராமத்துக்கு அவர்கள் வந்து விட்டதைத் தெரியப்படுத்தின.