பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

“அண்ணே, நம் கூட்டாளிகள் குறட்டை விடுவதைப் பார். கிழவனும் தூங்கிக்கொண்டிருக்கிறான்” என்றான் ஒரு திருடன்.

“ஆமாம், கிழவன் இப்போது சாக்கிரதையாக இருக்கிறான். இடுப்பில் உள்ள பணத்தை எடுக்க முடியாது" என்றான் மற்றவன்.

“அது கிடக்கட்டும், அண்ணே. நான் இன்னொரு பெரிய திட்டம் சொல்லுகிறேன். இந்தத் திட்டம் நம் இரண்டு பேருக்குள்ளே இருக்கட்டும். என்ன, தெரிஞ்சுதா?” என்றான் முதலில் பேசிய திருடன்.

“என்ன அப்படிப் பெரிய திட்டம்?”

“அதுதான், கிழவன் குடிசைக்குள்ளே புகுந்து திருடுவது. நம் இரண்டு பேருக்குள்ளே ரகசியமாக இருக்கட்டும்."

இந்தச் சமயத்திலே கடக்கிட்டி முடக்கிட்டி தூங்குகிற திருடர்களில் ஒருவன் காலை மெதுவாக நக்கிற்று. அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான். எழுந்திருக்கவில்லை. கடக்கிட்டி முடக்கிட்டி தூங்கும் மற்றொருவனுடைய காலிலும் அப்படியே செய்தது. அவன் விழித்துக்கொண்டான். விழித்தவன் அப்படியே படுத்துக்கொண்டு முதலில் கிழவனைப் பார்த்தான். பிறகு, தன் கூட்டாளிகளில் இரண்டு பேர் ரகசியமாகப் பேசுவதைக் கவனித்தான். ‘என்ன அப்படி ரகசியமோ?’ என்று கண்களை மூடிக்கொண்டு படுத்தபடியே உற்றுக் கேட்கலானான்.