பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அர்த்த பஞ்சகம்


(திருவாய். 1.1:7), சீவான்மா உடலினுள்ளிருந்து அதனை நிர்வகித்து வந்தாலும், அந்த உடலுக்குள்ள இளமை முதுமை முதலிய வேறுபாடுகள் அந்தச் சீவான்மாவைத் தொடமாட்டா. அதுபோலவே, எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாகவுள்ள ஈசுவரனுக்கு அந்தச் சேதந அசேதநங்கட்குள்ள குற்றங்கள் வாரா. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகைப் பொருள்களையும் உயிர்கட்குத் தந்து அவற்றின் புகலிடமாக இருப்பவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.

தனிமாப் புகழே னஞ்ஞான்றும்
நிற்கும் படியாய்த் தான்தோன்றி
முனிமாப் பிரம்ம முதல்வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வம்
- திருவாய் 8-10:7

என்று பேசுவர் நம்மாழ்வார்.

எம்பெருமானுடைய குணங்களுக்கு அளவில்லை. ஒரு பொருளுக்கு உளதாகக் கூறப்பெறும் குணமானது தன்னைப் பெற்றிருக்கும் பொருளுக்கு மற்றொரு பொருளைக் காட்டிலும் ஒரு வேற்றுமையைக் காட்டுவதால் அக்குணம் விசேஷணம் எனப்படும். இத்தகைய விசேஷணம் சொரூப நிரூபிக விசேஷணம் என்றும், நிரூபித சொரூப விசேஷணம் என்றும் இரு வகைப்படும். ஒரு பொருளின் சொரூபத்தை எந்தக் குணத்தையுடையதாகக் கூறிய விளக்கினாலன்றி அந்தப் பொருளின் சொரூபத்தை அறிய முடியாதோ அந்தக் குணம் 'சொரூப நிரூபிக விசேஷணம்' எனப்படும். ஒரு பொருளின் சொரூபத்தை விளக்கியபின் அதன் பெருமை புலப்படுவதற்கு எந்தக் குணங்கள் வெளியிடப்பெறுகின்றனவோ