பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈசுவரனின் இயல்பு

15


என்ற திருவாய்மொழிப் பாசுரப் பகுதியில் இத்திவ்விய மங்கள உருவம் காட்டப் பெற்றுள்ளது. மற்றும் ஓர் திருவாய்மொழியில் (2-5:1 முதல் 7 பாசுரத்தில்) அவனுடைய உருவம் முழுவதும் வருணிக்கப்பெற்றுள்ளது. இந்த விவரங்கள் யாவும் 'பாஞ்ச ராத்திரம்' போன்ற வைணவ ஆகமங்களில் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன.

இந்த லீலாவிபூதிக்கு3 மேலானது நித்திய விபூதி4 பூ மண்டலத்தை விட மூன்று மடங்கு பெரிது. ஆதலால் அது 'திரிபாத் விபூதி'5 என வழங்கப்படும். அது 'ரைசை' என்னும் அமுத ஆற்றுக்கு அக்கரையிலுள்ளது. உருத்திரன் நான்முகன் ஆகியோருக்கும் எட்டாதது; சனகாதி முனிவர்களுக்கும் நெஞ்சால் நினைப்பதற்கும் நிலமல்லாதது. காலம் என்ற தத்துவம் அங்கு நடையாடாது; அது. சுத்தசத்துவமயமானது.

பலகோடி சூரியர் ஒரே காலத்தில் உதித்தாற் போன்ற பேரொளியுடையது. அங்கு இந்த உலகில் உள்ள பஞ்ச பூதத் தொடர்பில்லாத மலர்கள் நிறைத்த சோலைகளும், கற்பகப் பொழில்களும் சூழ்ந்திருக்கும் தன்மையது. அந்த மலர்களில் வெள்ளமிடும் திவ்வியமான தேனைத் தெய்வ வண்டுகள் மட்டுமே படிந்துண்ணும்.

அந்தத்திவ்விய தேசம் பற்பல மதில்களால் சூழப்பட்டு விளங்கும். அங்குத் திவ்வியமான திருமாமணி மண்டபம் ஒன்றுள்ளது. இரு விபூதியிலுள்ள அனைவரும் ஒருங்கு


3. லீலாவிபூதி-இந்த உலகம்; அதாவது இறைவன் விளையாடுமிடம்.

4. நித்தியவிபூதி-பரமபதம், விபூதி-செல்வம்; இருப்பிடம்.

5. திரிபாதம்-மூன்று கால் பங்கு. விபூதி-இறைவனுக்கு உரிமையாக உள்ள இடம்.