பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xvi

கண்ணன் தனக்கே உரிய மாயச் சிரிப்புடன், "திரெளபதி: நான் அங்கேயே இருந்தேன். 'கிருஷ்ணா!' என்றோ நீ அழைத்திருந்தால், அங்கேயே உனக்கு உடன் உதவி செய்திருக்க முடியும். ஆனால் நீயோ துவாரக வாசா!? என்று கூவி அழைத்தாய். ஆகவே, உனக்காக ஒருமுறை துவாரகை சென்று திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிறிது கால தாமதமாய் விட்டது" என்கின்றான். பரம பாகவதையான திரெளபதியின் கதியே இப்படி என்றால் நம் போன்றவர்களின் கதி என்னாவது? ஆகவே, அந்தந்த தத்துவங்களைச் சரிவர நன்கு புரிந்து கொண்டு அவ்விதமே அநுட்டித்தால் விரைவில் பலன் கைகூடும் என்பது முக்காலும் உண்மை.

இந்நூலில் நுவலப்படும் 'அர்த்தபஞ்சக ஞானம்’ என்பது சம்சாரியான சேததன் தத்துவஞானம் பிறந்து உய்யும்போது தோன்றுவதாம். இது (1) ஈசுவரனது இயல்பு, (2) ஆன்மாவின் இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைவதற்குரிய வழிகள், மற்றும் (5) அப்பயனை அடைய வொட்டாமல் தடுக்கும் இடையூறுகள் இவை ஆகும். இவற்றைப் பேராசிரியர்ரெட்டியார் அவர்கள் இந்நூலில் மிக விரிவாக, ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களிலிருந்து தெளிவான மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார்கள்.

திங்கட்கிழமையன்று அமாவாசை வந்தால் அன்று அரசமரத்துக்கு (அசுவத்த நாராயணனுக்கு) விசேஷ பூசை செய்வர். தின்பண்டங்களையோ பழங்களையோ மற்றும் சீப்பு, கண்ணாடி முதலிய உபயோகமான பொருள்களில் 108 கணக்கிட்டு வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறை அரசை வலம் வந்ததும், மேற்கூறிய பொருள்களில் ஒன்றை எண்ணிக்கைக்காக உபயோகித்து 108 உம் முடிந்ததும் அந்தப் பொருள்களைப் பூசையில் படைத்துப் பிறகு அவற்றை மற்றவர்கட்கு இலவசமாக விநியோகித்து மகிழ்வர்.