பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றுள்ளது. இறந்த வீட்டில் முதல் பத்து நாட்களில் இதை வாசித்து எல்லாரையும் கேட்கச் செய்வர், இதைக் கேட்டாவது அவர்கள் திருந்தட்டுய் என்று. இந்தக் கருட புராணத்தை எழுத ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? ஒரு சுலோகம்; “நாராயணன் என்னும் சொல் இருக்கிறது. அதைச் சொன்னால் உய்யும் வழி என்றும் தெரிகின்றது நம்மவர்க்கும் நம் சொற்படி வார்த்தைகளை உச்சரிக்க வல்லது - (வியாதி முதலியவைகளால் நலிவுறாமல்). ஆனாலும், மாந்தர்கள் நரகத்தில் உழலுகின்றார்கள். என்ன விசித்திரம்!" என்கிறது. உபாயங்கள் தெரிந்தும் அவற்றில் ஈடுபாடு இல்லாமல் சோம்பல், மற்றக் கவைக் குதவாத விஷயங்களில் கவனம்.

இவற்றையெல்லாம் நீக்க மனிதன் பகுத்தறிவு உள்ளவனாக, அதாவது விவேகம் உள்ளவனாகத் தன்னையும் மற்றவர்களையும் வாழ்வித்து, உய்வித்து உயரும் வகையில் கடைத்தேற ஆறு வழிகள் "ஷண் மதங்கள்" என்ற பெயருடன் சங்கராசாரிய சுவாமிகள் ஸ்தாபித்தார்கள். அதில் வழிபடு கடவுளர் அறுவர் ; கணபதி, சூரியன், சக்தி, சிவன், குமரன், விஷ்ணு என்பவர்கள்.

இப்படி விஷ்ணுவைப் பரமான தெய்வமாகக் கருதி வழிபடும் வைணவ சமயத்தில் தான் இந்நூலில் விரிவாக உரைக்கப்படும் 'அர்த்த பஞ்சகம்' வருணிக்கப்பெறுகின்றது. அந்தந்த சம்பிரதாயங்களையும் தத்துவங்களையும் நன்கு அறிந்து அவற்றின்படி வழிபடுவோமே யானால், இறைவன் பதமாகிய முக்தி எளிதில் கிட்டும், ஈண்டு ஒரு வரலாறு நினைவு கூரத் தக்கது.

திரௌபதி, மான சம்ரட்சணத்துக்குப் பின்னர், ஒரு சமயம். கிருஷ்ண பகவானிடம் மிகவும் கோபமாக, “கண்ணா ! நீ மிகவும் பொல்லாதவன். துச்சாதனனிடம் சிக்கித் தவித்து உன்னைத் துதித்தால் நீ மிகவும் தாமதமாக வந்து என்னை மிகவும் சோதித்து விட்டாய்." என்கிறாள்.