பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அன்னக்கிளி

கொற்கைப் பட்டினத்தின் கடலோரம் கலகலப்பும் தனி அழகும் நிறைந்ததாய் விளங்கியது. கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்த மரக்கலங்களும், வெளி நாடுகளுக்கு வாணிபப் பொருள்களைச் ஏற்றிச் செல்லும் வணிகப் பெரு மக்களின் நாவாய்களும், ஒயிலாக மிதக்கும் அன்னங்கள் போல் காட்சி தந்தன துறைமுகத்திலே. முதலைகள் போல் மிதந்தன. சில கலங்கள். அவற்றிலே பல நாட்டுக் கொடிகள் பட்டொளி வீசின.

மனித இனத்தின் பல ரகத்தினரும் அங்கு கூடி நடந்து பிரிந்து கொண்டிருந்தனர். நானாவித இசைக் கருவிகளின் ஒலிக்கூட்டம் போலும் அங்கு பல்வேறு மொழிகளும் மோதிக் குழம்பிக்கொண்டிருந்தன. முத்து வாங்க வந்த பிற நாட்டு மனிதர்களும், பொழுது போக்க அலைந்த உள் நாட்டு உல்லாசிகளும் அந்த இடத்தின் கலகலப்பை மிகுதிப்படுத்தினர்.

அப்போது மாலை நேரம். பாண்டி நாட்டு முத்துக்களுக்கு ஈடாகத் தனது பொற்செல்வத்தைக் கொடுக்க மனமில்லாத கஞ்சன் மாதிரி, செஞ்ஞாயிறு தன் கதிர்களை அள்ளி அவசரம் அவசரமாக மேல் திசைப் பெட்டியில் பதுக்கும் வேளை. கதிரவனின் அம் முயற்சியில் சிந்திய ஒளிர் கற்றைகள் கொற்கையின் உயர்ந்த கட்டிடங்களையும்,துறைமுகக்கொடி மரத்தின் உச்சியில் மின்னிய மீனக்கொடியையும், கடலோரத்தையும் பொன் மயமாக மாற்றின.

துறைமுகத்தருகே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பாதைகளில் நின்றவர்கள் விலகி ஒதுங்கினர். அவர்கள் கண்கள், அவ்வழி வந்த இரு குதிரை வீரர்கள் மீது மோதின; நிலை பெற்று நின்றன.