பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

11

சிறப்பும் அவளுக்கு நல்ல அணிகளாக அமைந்திருந்தன. அவள் முகம் ஒளிவீசும் எழிற் பூ; அவள் விழிகள் குறு குறுக்கும் கருவண்டுகள்; அவள் நெற்றி புது நிலவின் வில் தோற்றம்; அவள் உதடுகள் சாறு நிறைந்த கனிச் சுளைகள்; அவள் கன்னங்கள் கண்ணாடி; அவள் பேசினால் கவிதை ஒலிக்கும்; சிரித்தால் அருவியின் கலகலப்பு கேட்கும். திட்டங்களிடும் சூது மதியோ, கள்ளம் பயிலும் உள்ளமோ பெற்றிராதவள் அவள். அதை அவள் விழிகள் கூறும்; குழந்தைச் சிரிப்புக் குமிழியிடும் இதழ்கள் சொல்லும்.

தென்றலென ஓசையின்றி வந்த அன்னக்கிளி பெரியவளின் பேச்சை எதிர்நோக்கி நின்றாள்.

'அந்தக் கடிதத்தை அவரிடம்தானே கொடுத்தாய் அன்னக்கிளி?’ என்று அமுதவல்லி கேட்டாள்.

‘ஊங்’ என்று தலையசைத்தாள் அன்னம்.

'அப்போது இளமாறன்கூட யார் யார் இருந்தார்கள்?'

'ஒருவருமில்லை அம்மா. அவர் தனியாகத்தான் இருந்தார். அவர் தனியாக இருக்கும் வேளை பார்த்து, அவர் கையிலேயே அதைக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லி அனுப்பியபடியே செய்தேன் அம்மா' - என்று இளையவள் தெரிவித்தாள்.

'அவர் ஒன்றுமே சொல்லவில்லையாக்கும்?'

'இல்லை, அம்மா.அவர் ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்து நான் நின்று கொண்டிருந்தேன். ஏன் நிற்கிறாய்? நீ போகலாமே என்று அவர் என்ன அனுப்பி விட்டார்'.