பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்னக்கிளி

 இறங்கினாள் அவள். கால் தவறிக் கீழே விழுந்து விடுவதும் சாத்தியமே என்று அஞ்சித் தயங்கவும் நேரமில்லை அவளுக்கு. ஆந்தை தொடர்கிறானோ என்று திரும்பிப் பார்க்கவும் மனமில்லை.'கண் மூக்கு தெரியாமல் ஒடுவது' என்பார்களே அப்படி விழுந்தடித்து ஓடிய பாவையின் கீழாடை விளிம்பு இசைகேடாக ஒரு காலில் சிக்கித் தடை செய்யவே அவள் ஒரு படியில் நிலைகுலைந்தாள். தடுக்கி விழுந்தாள்.

தலைக்குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டிருக்க வேண்டியதுதான். ஆனால், --

இருளோடு உள்ளே புகுந்த ஆந்தையை வழிமறிக்க முயன்று போராட நேர்ந்ததால் அன்னக்கிளி முதலிலேயே திறந்த கதவை அடைக்கவுமில்லை; தாளிடவுமில்லை. அவள் கோபத்தோடு, கொதிப்போடு ஆந்தையைத் தாக்க வேண்டும் எனும் வேகத்தோடு வாள் எடுத்து மேலே செல்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தி நின்றதால், திறந்த கதவு திறந்தே கிடந்தது. தோப்பின் பக்கமிருந்து ஓர் உருவம் மெதுவாக நகர்ந்து வந்து சுவரோரமாக ஒண்டி ஒதுங்கி முன்னேறி, திறந்த வாயிலின் வ்ழியாகத் தாராளமாய் உட்புகுந்தது. உயரே நடக்கும் குழப்பத்தை உணர்ந்து தனக்குரிய வேளை வரும் என்று பெரிய கதவின் பின் செறிந்திருந்த கனத்த இருளில் மறைந்து நின்றது. இப்போது அதற்கும் ஒரு வேலை வந்தது!

வேரற்ற மரம்போல் நிலைகுலைந்து விழுந்து கொண்டிருந்த அன்னக்கிளியை, வேகமாக முன்வந்து பாதுகாப்பாக ஏந்திக் கொண்டன இரண்டு கைகள்.

தரையில் விழப் போகிறோம் என்று பதறிய யுவதி எவருடைய அணைப்பிலோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தாள். உண்மையான பயத்தால் அலறினாள்.