பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அரசன்:-புலவருக்கு எவ்வளவு கோபம் பாருங்கள்! எங்களிடம் கூலி வாங்கிப் பிழைத்த ஒருவனை என் முன்னிலையிலேயே புகழ்கிறார். உண்மையாம்! வீரமாம்! இவர்களையெல்லாங்கூடத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்ட மலையமான் மிகவும் பொல்லாத வகைத்தான் இருக்கவேண்டும். சரி, இனி அவனைப் பற்றி என்ன பேச்சு? ஒழிந்தான்! அவனுக்குப் பிறகு அவன் பெயரைச் சொல்லயாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பூண்டோடு நாசமாகி விட்டது அவன் குலம்.

மந்திரி:-(கனத்துக்கொண்டு) அரசே அவனுக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்களாம்.

அரசன்:-(திடுக்கிட்டு) ஆ என்ன? பிள்ளைகளா? அவனுக்கா? அப்படி இருப்பதாக நான் கேள்விப் படவில்லையே! இருந்திருந்தால் அவர்களும் போரில் தலைகாட்டியிருப்பார்களே!.

மந்திரி:-அவர்கள் இளங்குழந்தைகளாம்.

அரசன்:-அப்படியா? (சிறிது யோசிக்கிறான்).....அட, அப்படியானல் நான் நினைத்தபடி அவன் குலம் நாச மாகவில்லையா? மழை விட்டும் தூவானம் விடவில்லை போலும்!...அமைச்சரே, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அப்படிச் செய்யலாமா?

மந்திரி:-அரசர்பிரான் ஆணையிடட்டும்.

அரசன்:-அவர்கள் சிறு குழந்தைகள் என்று சொல்கிறீரே. குழந்தைகளாக இருந்தாலும் நாளைக்குப் பெரியவர்களாகிவிட்டால் அவர்கள் தகப்பனப்போல அரசர்களுடைய அச்சத்துக்குக் காரணமாய் இருக்கக்கூடும். குட்டியாக் இருந்தாலும் பாம்பு பாம்புதான். சிறிய பாம்பானாலும் பெரிய தடி-