பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்

ஆன் ஆண்செய்யுளில் நன்கு வலியுறுத்தியுள்ளார். முல்லை முதலிய அனைத்திணைகளையும் அவற்றிற்குரிய அகத் துறைகளையும் தாங்கிய செய்யுட்களையே கம்பர் சான்றோர் ஆவி எனக் குறிப்பிடுகின்றார் அன்பின் ஐந்திணை நெறியும் அவற்றிற்குரிய அகத்துறைகளும் தாங்கிய பாட்டுக்கள் தமிழ் இலக்கியத்தில் சங்கப்பாட்டுக்களே யன்றி வேறு பாட்டுக்கள் யாவை? சான்றோர் என்னும் பெயருக்கு இலக்கானவர்களும் சங்கப் புலவர்களே என்பது அறிஞர்கள் பலரும் நன்கு அறிந்ததே. ஒன்பான் சுவையும் தன் பால் ஒருங்கே அமைத்துத் தாம் பாடிய இராமாவதாகப் பெருங்காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தியாம் கம்பரே இங்ஙனம் போற்றிப் புகழ்கிறா ரென்றால் இப்பாட்டுக்களின் சிறப்பினைப் புலப்படுத்த வேறு கூறவும் வேண்டுமோ! தமிழ்மொழிக்கே சிறப்பியல்பான அகப்பொருட்டுறைகள் அமைந்த இப்பாட்டுக்ககளின் சுவையைத் தமிழ்மக்கள் யாவரும் நுகர்ந்து பயன்பெறற்கு இத்தகைய மாநாடுகள் இன்றியமையாதனவாகும்

இதற்கு முன்னர் இக்கழகச் சார்பில் நடந்த மாநாடுகளெல்லாம் தக்க தலைவர்களைக் கொண்டும் மிக்க புலமை யாளரைச் சொற்பொழிவாளராகக் கொண்டும் செவ்விதின் நடைபெற்றுள்ளன. இப்பொழுது தடைபெறும் இம்மாநாடும் சீரிய புலமையான சான்றோர் ஐவரைக் கொண்டு நடைபெறுகின்றது ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரது பனுவலுக்குப் பேரிலக்கியமாகத் திகழும் இவ்வைங்குறுநூறு பற்றிய மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் தகுதியும் புலமைமையும் எனக்கில்லை என்பதனை நான் நன்குணர்வேன். எனினும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம், மதுரைத் திருவள்ளுவர் கழகம் ஆகிய இரு தமிழ்க் கழகங்களின் விருப்பினைத் தகைய இயலாது ஒருவாறு

இப்பணி தலைமேற் கொண்டேன். இப்பிழையைப் புலவர்குழாம் பொறுத்தருள்க.