பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை

திராவிடர், திராவிடம் என்னும் பெயர்களின் இழியாமையை உணராது இக்காலத்து நம்மவர்களே இப்பொறுப்புகளை ஏற்றுத் திராவிடர், திராவிடம் என்று வழங்குவது மிகவும் வருந்ததக்கதாம். தமிழர்கள் பண்பாட்டினையும், வாழ்க்கை முறைகளையும் சீர்திருத்தஞ் செய்தற்கு இக்காலத்து முனைந்து நிற்கும் தமிழறிஞர்களும் பெரியவர்களும் தமிழரது தொன்மைத் தன்மைக்கும் பெருமைக்கும் இழுக்காக இப்போது வழங்கும் இப்பெயர் வழக்குகளை அறவே நீக்கித் தமிழர் தமிழ் என்னும் பெயர் வழக்குகளே நாட்டில் தலைசிறந்து விளங்குவதற்கும் வழங்குவதற்கும் முயல்வதே தக்க செயலாகும்.

ஐந்திணை

பன்னெடுங் காலம் மலைவாணராயிருந்த தமிழ் மக்கள் தங்களுக்குச் சிறந்த உணவாகப் பருகத் தேனைப் பெருகத் தரும் குறிஞ்சித் தருக்களை அம்மலை மிகுதியாகக் கொண்டிருந்தமை பற்றித் தாங்கள் வாழ்ந்த அவ்விடத்தைக் குறிஞ்சி எனப் பெயரிட்டழைத்தனர். பின்னர் மலைசார்ந்து நிலம் படிப்படியே தோன்ற மலைவாணருட் சிலர் அந்நிலப் பகுதியிலும் குடியேறுவாராயினர். அந்நிலம் அம்மலையின் புறம்பாக இருந்தமையால் புறவு எனவும், அதனுள் நறுமலர் முல்லைச் செடிகள் செழித்து வளர்ந்தமையின் முல்லை யெனவும் அந்நிலப் பகுதியைப் பெயரிட்டழைத்தனர். அவர்கள் மலைகளிலிருந்து தாம் கொணர்ந்த ஆநிரை முதலியவற்றை வளர்த்துப் பேணி அவற்றின் பயன்கொண்டு வாழ்க்கை புரியலாயினர். இதுவரை மலையில் காய்கனி கிழங்கு முதலியவற்றையே உண்ட இவர்கள், பின்னர் முல்லை நிலத்தில் உழுது பயிரிட்டு உணவினை விளைத்து உண்டு வாழவும் அறிந்தனர். இந்நிலத்து வாழ்ந்த இம்மக்கள் தங்கள் ஆநிரைகளைப் பிறவுயிர்களால் தீங்கு வராமல் அரணமைத்துக் காக்கும் தொழில்புரிந்து வந்த பயிற்சி வயத்தால் மக்களுள் தலைமை பூண்டு அவர்களைக் காக்குந் தொழிலும் கைவரப் பெற்றனர். பின்னர் ஒருசிலர் அம்