பக்கம்:ஆண் சிங்கம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


தனது கொள்கைகளில் பிடிவாதமான பற்றுதலும், குறைபாடுகளை மன்னிக்க முடியாத சுபாவமும், உயர்ந்த பண்புகள், சுத்தம் சுகாதாரம் இவற்றில் தீவிர மோகமும் கொண்டிருந்தார் அவர். சகல குண நலன்களும் படைத்த பெண் எவளும் கிடைக்க மாட்டாள்; குறைகள் உடையவளை மணந்து கொண்டால்தான் தனது இஷ்டம்போல் வாழ முடியாது; அத்துடன் தன் மகிழ்வும் பாழ்பட்டுவிடும் என அவர் நம்பினார், அதனால் அவர் கல்யாணம் செய்யாமலே காலம் கழித்தார்.

முதலில் மனோகரமாகத் தோன்றிய இந்த நிலைமை காலப் போக்கில் அவருக்கு வெறுமை உணர்வு அளிக்க லாயிற்று அலுவல்களும் படிப்பும் தனிமைச் சூழலில் உலா போய் வருவதும் போதுமான திருப்தியை – மன நிறைவை – அளிக்கத் தவறின. பிறரிடம் சகஜமாகக் கலந்து பழகுவதற்கு அதுநாள் வரை அவர் தமக்குத்தாமே அமைத்துக் கொண்டிருந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் கனத்த வேலியாக நின்று தடை செய்தன.

வரவர அவர் உள்ளம் ஏக்கத்தை வளர்த்தது. தனது வாழ்விலே சிரிப்பும் இனிமையும் தோழமையும் வறண்டு கிடந்ததை உணர்ந்த இஷ்டவிங்கம் பிள்ளை அவற்றைப் பெற வேண்டும் என்று தவித்தார். முன்பு அவரால் ஒதுக்கப் பெற்ற அவை எல்லாம் இப்போது அவர் பிடிக்குள் அகப்படாத நிழல்களாக அவரை விட்டு ஒதுங்கியே சென்றன. அவருடைய மனப் புழுக்கம் அதிகரித்தே வந்தது.

இதே எண்ணத்தோடு தான் அன்றும் இஷ்டலிங்கம் பிள்ளை தனிவழி உலாவில் ஈடுபட்டிருந்தார். சித்தம் எங்கெங்கோ சஞ்சரிக்க, கால்கள் வழக்கமான தடத்தில் மெதுவாக நடந்தன. ஆற்றங்கரையை நோக்கித்தான். அழகும் அமைதியும் கொலுவிருக்கும் அருமையான இடம் அது. தினந்தோறும் அவர் அங்குதான் செல்வார்.

அன்று வழியில் ஒருவன் வேர்க்கடலே வாங்குங்களேன், சாமி என்றான்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/94&oldid=1072858" இலிருந்து மீள்விக்கப்பட்டது