பக்கம்:ஆண் சிங்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


அவர் போன பிறகும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் கிருஷ்ணபிள்ளை. ஊம். கொடுத்து வைக்கவில்லை! நான் சுவையாகச் சொன்ன நிகழ்ச்சியை யெல்லாம் நானே என் வாழ்வில் அனுபவிக்கக் கொடுத்து வைக்க வில்லை! என்றோ ஒரு நாள் ரயில் வண்டியில், பெஞ்சு அடியில் கண்டெடுத்த காகிதப் பொட்டலத்தில் இருந்தது இந்தச் சங்கிலி. எந்தச் சிறு பெண் அணிந்ததோ? அறுபட்டு மறதியாக யாரால் விடப்பட்டதோ? உமா என்ருெரு விளையாட்டுப்பெண் என் வாழ்வில் குறுக்கிட் டிருந்தால், என் வாழ்க்கை இன்னும் இனிமை மிக்கதாக - பசுமை நிறைந்ததாக- வளமுற்றிருக்கக் கூடும். காலம் தான் வஞ்சித்து விட்டதே! என்று முணுமுணுத்தார்.

அவருக்குச் சிரிப்பு எழுந்தது. ‘நாராயணன் நம்பி விட்டான்! ஆளுக்குள்ளே ஆளு என்பது போல, கிருஷ்ண பிள்ளையின் உள்ளே புதிரான, மர்மமான ஆளு மறைந்திருப்பது நமககு இத்தனை நாட்கள் தெரியாமல் போய் விட்டதே என்று எண்ணுவான். வேண்டியவர்கள், தெரிந்தவர்களிடம் எல்லாம் இதைச் சொல்லுவான். நாமும் எல்லோரிடமும் இதே பிளேட்டை வைக்க வேண்டியது தான். அங்கிங்கே சுவை சேர்க்கும் நகாசு வேலைப்பாடுகளைக் கூட்டிக் கொண்டால், இன்னும் ரசமாக இருக்கும்!’ என்று அவர் எண்ணினார்.

கிருஷ்ண பிள்ளைக்குக் கை கொஞ்சம் நீளம் தான் - பிறர் பாக்கெட்டில் போட்டு வெற்றிகரமாக வெளியே எடுக்கிற அளவுக்கு அல்ல! தன்து முதுகில் தானே தட்டிக் கொள்கிற அளவுக்கு நீளம்!

நாளடைவில், உமா என்றொரு காதலி அவருக்கு நிஜமாகவே இருந்தாள், அவள் அவர் வாழ்வின் சிறு பகுதியை இன்ப வசந்தமாக மாற்றி விட்டு, திடீரென்று மறைந்து போனாள் என்று கிருஷ்ண பிள்ளையே நம்ப ஆரம்பித்து விடுவார். அதுவும் அவர் ஆற்றலுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும்.

*

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/134&oldid=1072884" இலிருந்து மீள்விக்கப்பட்டது