பக்கம்:ஆண் சிங்கம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்



அன்றும் அப்படித்தான். சந்திரபிம்பம் ஸ்பெஷல் டிரஸ் அணிந்து நின்று சந்திரன் வேஷக்காரனுக்கு எண்ணெய் தேய்க்க மறுத்து விட்டாள். அந்தக் காட்சியை எதிர்பார்த்துக் காத்துப் பழி கிடந்த ரசிக மகாஜனங்கள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. விளைவு? தகரக் கொட்டகை மீது மலைப் பிஞ்சுகள் சோனா மாரி பொழிந்தன. ஆரவார இடி இடிக்கலாயிற்று.

நாடகக் கண்ட்ராக்டருக்குத் திடீர் யோசனை தோன்றியது. அவர் ‘அண்ணாச்சி! நீங்கதான் காப் பாத்தனும்’ என்று அழுது கொண்டு, சிங்காரம் பிள்ளையைச் சரணடைந்தார். ‘உங்களை விசேஷமாகக் கவனிக்கிறேன்’ என்றும் மந்திரம் முனு முனுத்தார்.

அவ்வளவுதான். பிள்ளை ஒரு குதி குதித்து பெஞ்சு மீது ஏறி நின்றார் விரலை வளைத்து, உதடுகளுக்கிடையில் வைத்து, வீஈஈல்–மெய் சிலிர்க்க வைக்கும் சீட்டி அடித்தார். மீண்டும் அடித்தார். ‘டேய் பையன்களா? யாருடாது கொட்டாயிலே கல் எறியிறது? யாருலே அது? காலித்தனத்தை ஸ்டாப் பண்ணுங்க. அட் ஒன்ஸ் ஸ்டாப்! நிறுத்துங்க ஒன்–டூ–த்ரீ! என்று கூவீனார். கூவிக் கொண்டே இருந்தார்.

கூச்சலும் குழப்பமும் படிப்படியாகக் குறைந்து தேய்ந்து ஒய்ந்தது. ‘நவ், ஆர்மோனியஸ்ட், கோ ஆன் ஸாங்! என்று தமது இங்கிலீசு ஞானத்தை ஒலிபரப்பினார் பிள்ளை.

குமாரி சுந்தரவதனா அவர் பக்கம் முகம் திருப்பி, பளிச்சென முல்லைச் சிரிப்புச் சிரித்தாள். ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு கும்பிடு போட்டாள். பாட்டுப் பாடினாள்.

சிங்காரம் பிள்ளைக்கு உச்சந்தலையிலே ஐஸ் கட்டி வைத்தது போலிருந்தது. ‘இவரு யாரு? ஆம்பிளைச் சிங்கமில்லே, ஹே, சும்மாவா!’ என்று அவர் மனக் குறளி கொக்கரித்தது. ––

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/115&oldid=1072245" இலிருந்து மீள்விக்கப்பட்டது