உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னி வாசம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




அக்னி வாசம்

மேலாண்மை பொன்னுச்சாமி

கங்கை புத்தகநிலையம்

23, தீனதயாளு தெரு,
தியாகராயநகர், சென்னை - 600 017

முதற் பதிப்பு : டிசம்பர், 2009
உரிமை : ஆசிரியருக்கு
கங்கை வெளியீடு
விலை : ரூ.75.00
Title AGNI VASAM
Author MELAANAMAI PONNUSAMY
Language Tamil
Subject Short Stories
Edition First Edition, Dec - 2009
Pages 288
Published By Gangai Puthaga Nilayam
23, Deenadayalu Street,
T.Nagar, Chennai-600 017.
Ph: 24342810/24310769
Price Rs : 75.00

Laser Typeset by: Sivaa Graphics, Ph: 9884712091
Printed at: Novena Printers, Chennai.

சமர்ப்பணம்

அது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்தாம் வருடம். பத்தாண்டு காலத்து வறுமை, பஞ்சம், பரிதவிப்பு, நாதியற்ற அவலம். அவமானம், கம்மங் கஞ்சிக்கு கடித்துக் கொள்ள வெங்காயமும் வாங்க முடியாத அவலம். அவமதிப்பின் மனக்கொதிப்பு. மீண்டும் கடையைத் துவக்க வேண்டும் என்கிற வைராக்யம். பணம்? ஏதுமற்ற எங்களுக்கு யார் நம்பி, கடன் தருவார்? முரட்டுத் துணிச்சலுடன் ஒருவரிடம் போய் தலையைச் சொறிந்தேன். ஆச்சரியம், வக்கு இல்லாத என்னை நம்பி ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கித் தந்தார். அவர் ஏற்றிய சுடரில் ஏற்றப்பட்ட கடைத்தீபம். எங்கள் குடும்பம் அதன் ஒளியில் கண் மலர்கின்றது. அந்தக் கருணை மகான் பெரியதம்பி என்கிற அமரர் த.செண்பகப்பெருமாள் அவர்கள் நினைவிற்கு...

முன்னுரை

அமெரிக்கா ராணுவ ஆயுதப் பொருளாதார நாடு, இந்தியா விவசாயப் பொருளாதார நாடு. இந்திய மக்களில் எழுபது சதவிகிதத்தினர் மண்ணோடும், மண்சார்ந்த உழவுத்தொழிலோடும் பின்னிக்கிடக்கின்றனர். நிலமுள்ள உழவர்களும், நிலமில்லா கூலி மக்களும் நிலம் சார்ந்த விவசாய உற்பத்தி வாழ்க்கை நடத்துகின்றனர். இந்தியாவுக்கு உணவும், உபயோகப் பொருட்களும் வழங்குகின்றனர். ஹார்லிக்ஸ் குடிக்கிறவர்களின் தொண்டைக் குழிக்குள் கம்பு விவசாயிகளின் வியர்வையும் சேர்ந்து இறங்குகிறது. தேய்க்கிற தேங்காயெண்ணெயில் தென்னை விவசாயிகளின் ரத்தம் கலந்திருக்கிறது.

இந்தியாவின் உயிரும் உடம்பும் எதிர்காலமும் உழவர்களின் வியர்வையை நம்பியிருக்கின்றன. உழவு செழித்தால் இந்தியா செழிக்கும். உழவு மெலிந்தால், இந்தியப் பொருளாதாரமும் தடுமாறித் தத்தளிக்கும்.

“இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது" என்று மகாத்மா காந்தி இதனால்தான் சொன்னார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

– என்ற வள்ளுவரின் குறளுக்குப் பதவுரைதான், மகாத்மா காந்தியின் சொற்கள்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்- வீணில் :உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்

என்று புதிய தீர்ப்பை தாட்சண்யமில்லாமல் முன் வைக்கிறார், மகாகவி பாரதி.

இவையெல்லாம் காகிதங்களில் காணப்படுகின்ற எழுத்து இந்தியா. காகிதங்களைத் தாண்டிய பொதுவெளியில் எழுத்துக்கப்பால் மண்ணில் நடக்கிற இந்தியாவின் நிஜம் என்னவாக இருக்கிறது?

இந்திய நகரங்கள் செழிப்பும் சிங்காரமுமாக சிரித்துக் கொண்டிருக்க... இந்திய ஆன்மாக்களான கிராமங்கள் நோயுற்று வீழ்ந்து கிடக்கின்றன.

இந்தியத் தொழில்களிலேயே நட்டம் நிச்சயமாக வருகிற தொழில் எது என்றால், விவசாயம்தான் என்று எல்லோருக்கும் தெரியும்.

விவசாயப் பொருளாதார நாட்டில் விவசாயம் நிச்சயமான நட்டத் தொழிலாக வீழ்ந்து கிடப்பதுதான் அவிழ்த்தெடுக்க இயலாத முரண்முடிச்சாகக் கிடக்கிறது.

விவசாயத்தை நம்பி வாழ்ந்த கூலிக்காரர்கள் கொய்யாப்பழ வியாபாரத்துக்கும், சிவகாசி சித்தாள் வேலைகளுக்கும், திருப்பூர் கட்டிட வேலைகளுக்கும் தப்பித்தோடிக் கொண்டிருக்கின்றனர். நிலமுள்ள விவசாயிகளே நிலங்களையும் நட்டத்தையும் விட்டோடிக்கொண்டிருக்கின்றனர்.

விளைநிலங்களெல்லாம் விலை நிலங்களாக முளைக்கிற அவலம். செம்மண் பரப்புகளில் சுண்ணாம்புக்கற்கள்.

விவசாயத்தையும், விவசாயிகளையும், கிராமங்களையும் எப்படிக் காப்பாற்றுவது என்று எந்த விஞ்ஞானியும் யோசிப்பதில்லை. எந்தப் பொருளாதார நிபுணரும் சிந்திப்பதில்லை. எந்த ஆளும் கட்சித் தலைவர்களும் நினைப்பதில்லை. எந்த எழுத்தாளரும்கூட கிராமங்களைப்பற்றி எழுதுவது இல்லை. நகர்சார்ந்த மனித மனநெருக்கடிகளையே கதைப் பொருளாக்கி, நாலு காசைப் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றனர். இந்திய விவசாயிகளைப்பற்றி கதையெழுதக்கூட யாரும் முன் வருவதில்லை. இப்படி சகல துறையினர்களாலும் சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றில் நான் வாழ்வதாலும்... நிகழ்நிலவரத்துக்கு முரண்பட்டுப் போராடுகிற மார்க்ஸிஸ சித்தாந்தத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டிருப்பதாலும்... நான் கிராமங்களைப்பற்றியே சிறுகதைகள் எழுதி வந்தேன், வருகிறேன்.

எளிய மக்களின் வியர்வையையும் கண்ணீரையும் கனவுச் சிதைவுகளையும் கருப்பொருளாக்கி சிறு கதைகள் எழுதி வந்தேன். சகலராலும், சகலதுறையினராலும் புறக்கணிக்கப்பட்டு, வளர்ச்சியற்று, சுரண்டல்காரர்களின் சுதந்திரமான வேட்டைக் காடாக்கப்பட்ட கிராம மக்களின் அவலங்களையே கதைகளாக்கினேன். ஆக்குகிறேன்.

புறக்கணிக்கப்பட்ட கிராமங்களைப்பற்றி எழுதினால், நானும் புறக்கணிக்கப்படுவேன் என்ற சந்தேகம் எனக்குள் வரவில்லை. தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடக நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளக்கூட இயலாமல், தொலைதூரத்து கிராமத்திற்குள் புதைய வேண்டியிருக்குமோ என்ற பயமும் வரவில்லை.

எளிய மக்களைப்பற்றி... ஏழை விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதைப் பற்றி... எளிய சாதி மக்கள் அவமதிக்கப்படுவதைப்பற்றி... இந்திய கிராமங்கள் அலட்சியப்படுத்தப்படுவதைப்பற்றி... எளிய மொழியில் இலக்கியமாக்குவதுதான் எனது இலக்கு. இந்திய கிராமங்களின் வலிகளை, ரண அதிர்வுகளை - இந்தியர்களின் மனசாட்சியை உலுக்குகிற மாதிரி இலக்கியமாக்குவதுதான் எனது லட்சியம்.

‘இனி’ நாவலை வாசித்துவிட்டு, சர்வதேச விருதுகள் பலபெற்ற பத்திரிகையாளரான சாய்நாத் என்னை நேர்காணல் செய்துவிட்டு எழுதிய பேட்டிக் கட்டுரைக்கு அவர் வைத்த தலைப்பு, “கிராமங்களுக்கு வாழ்க்கைப்பட்ட எழுத்தாளர்.”

ஆமாம், கிராமங்களுக்கு வாழ்க்கைப்பட்ட எழுத்தாளனாக உண்மையாக இருந்தேன். எதையும் எதிர்பார்க்காத நேர்மையுடன் லட்சியத்தில் இயங்கினேன். எளிய கிராமங்களைப்பற்றி எளிய மொழியில் யதார்த்தவாதமாக தொடர்ந்து எழுதி வந்தேன். அதிநவீன இலக்கிய அறிவுஜீவிகளின் பரிகசிப்புக்கும் ஏளனத்துக்கும் ஆளானேன்.

ஆனால், மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது, அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் “மாட்சிமைப் பரிசு” என்ற விருது உட்பட பல விருதுகள் என்னை வந்தடைந்தன.

இந்த விருதுகள், எனக்குக் கிடைத்த மகுடங்களல்ல; சகல துறையினர்களாலும் புறக்கணிக்கப்பட்ட கிராமவிவசாய மனிதர்களுக்கு அரசு செய்திருக்கிற முதல் மரியாதை. என் கதை மாந்தர்களுக்குக் கிடைத்திருக்கிற முதல் கௌரவம். என் கதை உயிர்களின் அழுக்கு மேனியில் அரசு அளித்திருக்கிற முதல் சால்வை.

அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் பல்வேறு பெயர்களில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களின் நிர்வாகத்தில் தனித்தனியாக இயங்குகின்றன. இந்தச் சங்கங்கள் யாவும் ஒருங்கிணைந்த ஓர் அமைப்புதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. அந்தப் பேரவையின் மாட்சிமைப் பரிசு என்ற விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. விசா கிடைக்காத சிக்கலின் காரணமாக, நிச்சயிக்கப்பட்ட அமெரிக்கப்பயணம் சாத்தியமற்றுப் போயிற்று.

ஆனால், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் செயலாளர் “ஆக்ஸஸ்” பால்பாண்டி அவர்களும், தலைவர் தேவ் அவர்களும் சென்னைக்கே வருகைதந்து, மிகப்பெரிய விழா நடத்தி... பாராட்டிப் பேசி... எனக்கு விருதும், 2000 டாலர் மதிப்புள்ள தொகையும் வழங்கப்பட்டது.

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையே சென்னைக்குத் தேடிவந்து, எனக்கு விருதும் வெளிச்சமும் தந்து விட்டுப் போனது, தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் கிடைத்த மகத்தான கௌரவமாகும்.

ஆச்சரியம் என்னவென்றால்... இத்தனை புகழ்மிகு கௌரவிப்பு நிகழ்ந்ததைத் தமிழ் ஊடகங்கள் அவ்வளவாக பொருட்படுத்தவில்லை. சுத்தமாக கண்டு கொள்ளவேயில்லை. நாளிதழ்களில்கூட ஒருவரிச் செய்தியாக வரவில்லை. இது நிகழ்ந்தது, 2005ல்.

ஆனால், எனது ‘மின்சாரப் பூ’ சிறுகதைத் தொகுப்புக்காக 2008ம் ஆண்டிற்கான மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது எனக்கு அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் தனது சொந்த வீட்டு வைபவத்தைப்போலக் கொண்டாடி மகிழ்ந்தன. அத்தனை தொலைக்காட்சிகளின் கவனிப்புக்கும், காட்சிக்கும் இலக்காயிற்று எனது சிறிய குக்கிராமம் - விருது நகர் மாவட்டத்தின் கடைக்கோடி விளிம்பில் - இரண்டு இடுக்கில் சிக்கிக்கிடக்கும்-மேலாண் மறைநாடு என்ற சின்னஞ்சிறு கிராமம், ஊடக முற்றுகையில் திணறித் தவித்தது.

அனைத்து தொலைக்காட்சிகளின் கேமராக்களும், நாளிதழ்களின் நிருபர்களும், வார இதழ்களின் பேட்டிக் கேள்விகளும் எனது கிராமத் தெருக்காற்றை நிரப்பிற்று. கோடை பண்பலை, ஆஸ்திரேலிய வானொலித் தமிழ்ப் பிரிவு, தென்கிழக்காசிய வானொலி, போன்ற ஏகப்பட்ட வானொலிகளில் எனது குரலும் என்னைப்பற்றிய விவரிப்புகளும் ஒலித்தன.

ஒளி, ஒலி, எழுத்து என்று அனைத்து ஊடகங்களும் ஒற்றுமைப்பட்ட உணர்வெழுச்சியுடன் இதை ஒரு சொந்த விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தன; மகிழ்வித்தன.

ஓர் எழுத்தாளருக்குரிய அறிவு ஜீவி அடையாளங்களோ... மிகப் பெரிய கல்விசார் பட்டங்களோ... செல்வாக்கும் செல்வமும் நிறைந்த கெளரவமான உத்தியோக அந்தஸ்தோ எதுவுமேயில்லாத கிராமத்துப் பாமரனாகிய எனக்கு - எளிய விவசாயிகளின் விவசாயக் கூலிகளின் வியர்வையையும், கண்ணீரையும், கனவுகளையும், போராட்டங்களையும் எளியமொழியில் இலக்கியமாக்குகிற எளிய மனிதனான எழுத்தாளனுக்கு - இந்த உயரிய விருது கிடைத்ததை, உண்மையிலேயே ஊடக நண்பர்கள் உற்சாகத்துப் பேரெழுச்சியுடன் வரவேற்றார்கள்; உளப்பூர்வமான ஒப்புதல்களோடு வாழ்த்தினார்கள். தங்களுக்கே கிடைத்த “எந்த ஒரு தீர்க்கதரிசியும் சொந்த ஊரில் கனம் பெற மாட்டான்” என்று ஏசுநாதர் கசந்த மனதுடன் சொன்ன வேதனை வார்த்தைகள் பைபிளில் உண்டு.

ஆனால்... எங்கள் கிராமத்தில் என்னை வாழ்த்தி புகைப்படத்துடன் டிஜிட்டல் பேனர்கள் ஏற்றினார்கள். கிராமத்தின் அனைத்து சமுதாயத்தினரும் ஒருங்கிணைந்து உள்ளூரில் மிகப்பெரிய விழா நடத்தினர். இயக்குநர்கள் சசி, மூர்த்தியுடன் அப்போதைய மாவட்டாட்சியர் திருமிகு ரகுபதி அவர்களும் விழாவில் கலந்து, மூன்று மணி நேரத்துக்கும் மேல் பங்கெடுத்துச் சிறப்பித்தார். சொந்த ஊரின் பாசமிகு கொண்டாட்டப் பரவசம்.

விருதுகளை எதிர்பார்க்காமல், எளிய மனிதனுக்குரிய தன்னடக்கத்துடன் வியர்வை மக்களின் விசாரங்களையும், விமோசனங்களையும் பற்றிய லட்சியப்பற்றுறுதியுடன் எளியமொழியில் இலக்கியமாக்குகிற நேர்மைக்கும் உண்மைக்கும் விருதுகளும் வெளிச்சமும் தந்து கௌரவித்திருக்கிறது, இந்தியாவும், தமிழ்ச் சமூகமும்.

சாகித்ய அகாதமி விருது மட்டுமல்ல... மக்கள் தொலைக்காட்சியின் “மனிதநேய இலக்கியப் படைப்பாளி” என்ற விருதும், இமயம் தொலைக்காட்சியின் ‘சாதனையாளர்’ விருதும் வந்து கூடுதல் வெளிச்சம் தந்தது. நக்கீரன் இணையதளத்தின் வீடியோ பேட்டியின் விரிவான பரப்பு, உலகம் முழுமையும் தமிழர்களிடம் சென்று சேர்த்தது.

இந்த விருதுகளும், வெளிச்ச விழாக்களும், நேர்காணல்களும், பாராட்டு விழாக்களும், பரவசப் பெருக்குகளும் என்னை மகிழ்வித்திருக்கிறது, சத்தியமாக. ஆனால்–

எனது இலக்கியக் கோட்பாடு, எளிய மக்களை, எளிய மொழியில் எதார்த்தமாக சித்தரிப்பது என்கிற எனது இலக்கியப்பாதை எந்தத்திசை மாற்றத்துக்கும் வேறு வகையான சலனங்களுக்கும் ஆளாகவில்லை என்பதற்கும்... எனது பயணம் எனக்கான மார்க்ஸீயப் பாதையில் தொடர்கிறது என்பதற்கும் இந்த ‘அக்னிவாசம்’ சிறுகதைத் தொகுப்பே சாட்சியமாகும்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள்பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. தம்மைத்தாமே வெளிக்காட்டிக் கொள்ளக் கூடிய தெளிவும், திராணியும் என் கதைகளுக்கு உண்டு. எனது கதைகளே தம்மைப்பற்றி சொல்லிச் செல்லும், உங்கள் வாசிப்பனுபவத்தில் ஒரு புதிய வெளிச்சம் தரும்.

கிராமத்தின் அடித்தட்டு மாந்தர்களே வேனாக் கொதிக்கிற வெயிலில் அலைந்து கொண்டும், மண்ணோடும் வாழ்க்கையோடும் மல்லுக்கட்டிக் கொண்டும் கதைகளின் வழியாக உங்களிடம் வருகின்றனர். பயங்கரவாதியாகக் கருதுகிற ராவுத்தரை மனிதராக மட்டுமே பார்க்கிற அருஞ்சுனை... வெள்ளாமையை அழிமானம் செய்கிற பறவைகளுக்கும் தாய் மனம் காட்டுகிற சூரியப் பெண்கள்... காட்டான்களிடமும் காதலுணர்வு அரும்பிவிட்டால், கண்ணியம் பூக்கிற தருணங்கள்... ஆட்டுச்சளிகளிலும், சாணமூத்திர வாசத்திலும், வெயில் வெளிகளிலும், வனாந்தரத் தனிமைகளிலும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிற போர்க்குணப் பேச்சிகள்... என்று வகை வகையான ஏழை ஜீவன்கள், வாழ்க்கை தந்த வலிகளையும், காயங்களையும் சீழ் நாற்றத்தையும் கதைகளின் வழியாக உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

‘கோகுலம் கதிர்’ இதழ் கேட்டு, நான் அனுப்பிய கதையான ‘ஆதி காலத்தீ’ என்ற கதையின் கையெழுத்துப் பிரதியை வாசித்து, மனம் லயித்துப் போன ஓவியர் ஷ்யாம், தனது வேலைச் சுமைகளுக்குமிடையில் எனது அலைபேசி எண்ணை தேடிப் பெற்று... கதையைப் பாராட்டி ஒரு மணி நேரமாக பேசிப் பரவசப்பட்டு, பரவசப்படுத்திய அனுபவம், மிகவும் வித்தியாசமானது.

‘அக்னி வாசம்’ மிகவும் வித்தியாசமானது.

இந்தத் தொகுப்பை அழகாக அச்சிட்டு... கச்சிதமான வடிவமைப்போடு வெளியிடுகிற கங்கை புத்தக நிலையம் திருமிகு இராமநாதன் அவர்களுக்கும், முகப்போவியம் வழங்கிய புகழ்மிகு ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கும், வாழ்க்கைப் பயணத்தில் உயிர்ப்பலமாகத் திகழ்கிற எனது துணைவி பொன்னுத்தாய் அவர்களுக்கும், என் தம்பி கரிகாலனுக்கும், தொகுப்புக்கான கதையைப் பாதுகாத்து, சேகரித்து, கத்தரித்து, ஒழுங்குபடுத்துவதில் உதவிகள் செய்த மகள் தென்றல், மகள் ராஜஅன்னம் ஆகியோருக்கும், 'தொகுப்பு போடலியா, தொகுப்பு போடலியா' என்று தொடர்ந்து கேட்டு என்னைத் தூண்டி சுடரேற்றிய எனது மூத்த மகள் திருமதி வைகறைச் செல்வி சந்திரமோகனுக்கும், எனது மகன்கள் வெண்மணிச்செல்வன், இளவேனில் ஆகியோருக்கும், ‘தாத்தா புஸ்தகத்துலே எங்க பேரு ஏன் வரல்லே’ என்று உரிமையுடன் நச்சரிக்கிற எனது பேத்திகள் இளந்திங்கள் கத்யூஸா, அமிர்த நிதி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் என்றென்றும் உரித்தாகும்.

வாசித்து முடித்து மௌனத்தில் உறைந்து விடாமல் ஓர் அஞ்சலட்டை எழுதுங்கள். உங்கள் பாராட்டுப் பூக்கள் என்னை உற்சாகப்படுத்தி வளர்க்கும், விமர்சன வார்த்தைகளும் என்னைச் செதுக்கி நெறிப்படுத்தும்.

நன்றிகள்!

என்றும் உங்கள்,
மேலாண்மை பொன்னுச்சாமி
27.9.09

மேலாண்மறைநாடு
626127
இராஜபாளையம் வழி,
விருதுநகர் மாவட்டம்.
04562-271233
9942610700

"https://ta.wikisource.org/w/index.php?title=அக்னி_வாசம்&oldid=1817704" இலிருந்து மீள்விக்கப்பட்டது