உள்ளடக்கத்துக்குச் செல்

அக்னி வாசம்/017

விக்கிமூலம் இலிருந்து


17. சட்டைத்துணி

தீக்கட்டையால் நெஞ்சுக்குள் சொருகினமாதிரி, மனசெல்லாம் கிடந்து, 'திகுதிகு' வென்று காந்தியது. தோள்பட்டையில் வெட்டுக்காயமாகத் துடித்தலறுகிற வலி.

இமைதட்டாத வெறித்த பார்வை எங்கோ குத்திக் கிடந்தது. நிலைகொள்ளாமல் அலைபாய்ந்து வருகிற எண்ணப்பிரளயம். நினைவுக் கொந்தளிப்பு. தகிக்கிற நெஞ்சு விம்மிவிம்மித் தணிய விசும்புகிற சுப்புத்தாய்.

“இனிமே உசுரு வைச்சிருக்கக் கூடாது... நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதான்” என்று வாளிக்கயிறை வெறியோடு அவிழ்க்கிறாள்.

முதல் விசும்பலே ஒரு உடைப்பாக மாற... பொத்துக் கொண்டு பீறிட்டுப் பாய்கிற கண்ணீர். அடிவயிற்றிலிருந்து பொங்கிக் கொண்டு வருகிற குமுறல், “ஐயய்யோ.... அடியாத்தா” என்ற கதறலாக வெடித்துச் சிதறுகிறது.

‘கோ... குலை’யென்று கத்திப் புலம்புகிற சுப்புத்தாயின் கண்ணீர்ப் பெருக்கு. சாத்திய கதவின் உட்பக்கம் சாய்ந்துகொண்டு, தலையில் அடித்து அழுகிறாள். ரெண்டு கைகளாலும் முன்னந்தலையில் ‘மடேர்’, மடே’ ரென்று அடித்துக் கொள்வதில்... தலைமுடியெல்லாம் பஞ்சு பஞ்சாக அலைகிறது.

சுப்புத்தாய் பத்துநாளாக கூலிவேலைக்குப் போகவில்லை. சூடு சுரணையுள்ளவள். ரோஷமும் மானமுமாக தலைநிமிர்ந்து வாழ நினைக்கிறவள்.

பதிவாக நடராஜன் புஞ்சைகளில்தான் கூலிவேலை. கிணற்றுப் பாசன நஞ்சைகள்; பம்ப்ஷெட் மோட்டார் மாட்டிய இறவைத் தோட்டங்கள் என்று மூலை மூலைக்கு நிலங்கள். போதாக் குறைக்கு சமுத்திரப்பரப்பாக மானாவாரிக் காடுகள்.

தினம் தவறாமல் ஏதாச்சும் விவசாய வேலை இருக்கும். சாயங்காலமானால் சம்பளம். ரெண்டுநாள் தப்பினாலும், மூன்றாம் நாள் மொத்தச் சம்பளம். ஒரே பெண்பிள்ளை. பள்ளிக் கூடம் போய்விடுவாள்.

திருப்பூர் பக்கம் சித்தாள் வேலைக்குப் போன புருஷன். அங்கேயே ஒரு பெண்ணைச் சேர்த்துக் கொண்டு, இவளை நட்டாற்றில் விட்டுவிட்டான். நடராஜன் புஞ்சை வேலையில் வருகிற கூலியில்தான், ரெண்டு வயிறு குளிருகிறது.

அன்றைக்கு... மக்காச் சோளத்துக்குள் களைவெட்டு நடந்தது. இவள்தான் பொழியோரத்து நீரைபிடித்து வெட்டிக் கொண்டிருந்தாள். முழங்கால் உயரம், பயிர்கள்.

நடராஜன் செருப்புச் சத்தம், பொழிப்புல்லில் நடந்துவருகிற அவசரம். இவளருகில் சற்றே தேங்கினான்.

“சுப்பு...”

“என்னசாமி?”

“வீட்லே போயி... சாப்பாடு வாங்கிக்கிட்டு...பம்ப்ஷெட் ரூமுக்கு கொண்ணாந்து குடுத்துட்டுப்போ.”

சட்டென்று நிமிர்ந்தாள். ஏறுவெயில், நெற்றியிலும், முகத்திலும் வழிகிற வியர்வையில் பட்டு எரிந்தது. மனசின் அதிர்வு.

“நா... இதுவரைக்கும் போனதில்லியே... என்னை இந்த வேலை சொல்ல மாட்டீகளே?”

“சொன்னதுல்லே. அதனாலேதான் இப்பச் சொல்லுதேன்... சொல்லுற வேலையை நல்ல மனசோட செய்.”

“இல்லே சாமி... அதுக்கு வேற ஆளைப் பாருங்க.”

அவன் சொற்களுக்குள் பதுங்கியிருந்த கபட அர்த்தம், ஓரப்பார்வையில் வழிந்த ஓநாய் எச்சில். அதையறிந்து இவளும் உள்ளடங்கிய சீற்றத்துடன் உதறிச் சொன்ன மறுப்பு.

வெறுப்பும் கோபமுமாக “வேற ஆளைப் பாருங்க” என்று எகிறிப் பாய்ந்த சொற்களின் செருப்படி, அவனுக்குள் விழுந்தது.

வீட்டில்போய் சாப்பாடு வாங்கி விட்டு வருகிறவள், நிரை பிடித்து களை வெட்ட வேண்டியதில்லை. விலக்கு. பம்ப்ஷெட் ரூமுக்குக் கொண்டு போய் கொடுப்பவள்.. சட்டென்று வந்து விட முடியாது. சோறு பரிமாற வேண்டும். தண்ணீர் பாட்டில் திறந்து தர வேண்டும். சாப்பிட்டு முடித்த பாத்திரங்களைக் கழுவியெடுத்து வர வேண்டும்.

சாப்பாடு பரிமாறுவதற்கு முன்பு - கொண்டு வந்தவள், சாப்பாடாக வேண்டும். அவள் ருசிக்குப் பிறகுதான்... அவள் பரிமாறுகிற சோறு தொண்டைக்குள் இறங்கும்.

இது யாரும் பார்க்காத ரகசியம். எல்லாருக்கும் தெரிந்த ரகசியம்.

அதனால்தான்... சுப்புத்தாய் சட்டென்று மறுத்துவிட்டாள், சண்டாளக் கோபத்துடன். தன்னிடம் எச்சியைக் காட்டிவிட்டாரே என்ற ஆங்காரம்.

சாயங்காலம் -

சைக்கிளில் வந்து சுப்புத்தாய் வீட்டுமுன் காலூன்றி நின்றான், நடராஜன்.

“சுப்பு... சுப்பு...”

குடிசையின் வாசலுக்கேற்ப குனிந்து வெளியே வந்தாள். முற்றத்தில் உட்கார்ந்து நோட்டுகளையும் புத்தகங்களையும் பரத்தி வைத்து வீட்டுப் பாடம் எழுதுகிற மகள்.

“என்ன சாமி...?” உயிர் உலர்ந்து வறண்ட குரல்.

“இந்தா... சம்பளம் எத்தினி நா சம்பளம்?”

“இன்னியோட நாலுநா.”

வாங்கினாள். மிச்ச ரூபாயை மேல் சட்டைப்பையில் சொருகிக் கொண்டே இவளை வெறுப்பும் கடுப்புமாகப் பார்க்கிற அவன். அதே அழுகையும் வருத்தமுமாய் நிமிர்ந்து பார்க்கிற சுப்புத்தாய்.

“சாமி... நா நாளையிலேயிருந்து வேலைக்கு வரல்லே.”

“ஏன்...?”

“ஒடம்பை நம்பி ஒழைச்சு... உப்புப் போட்டு கஞ்சிகுடிக்கிற சாதி மான்கன்னு, நா. ஒடம்பை வைச்சுப் பொழைக்கிற ஈனச் சாதி, நா இல்லே... உழைப்பை நம்புறவளுக்கு தேவுடியாபுத்தி வராது.”

“ம்ம்ம்...”

“என்னைச் சாப்புடுற ஆசை வந்துருச்சு, ஒங்களுக்கு. இனிமே ஒங்ககிட்டே வேலை பார்க்குறது, மரியாதையில்லே. நா, வரலை”

“எப்ப வருவே?”

என்னச் சாப்புடுற ஆசையை வுட்டுட்டு, வூடுதேடிவந்து கூப்புட்டா... புஞ்சை வேலைக்கு வாரேன்.."

பத்துநாளாக ஆள்வரவில்லை. மற்றவர்கள் புஞ்சைக்கு, யாராச்சும் கூப்பிட்டால் போகலாம் என்றிருந்தாள். யாரும் கூப்பிடவில்லை. வலியப் போய்... ‘வரட்டா’ என்று கேட்கவா முடியும்? அது அசிங்கமில்லையா? அவமானமில்லையா?

ஒரே ஒருத்திதான் கூப்பிட்டாள். அவளும் சீரில்லாதவள். புஞ்சைவேலைக்கு ஆள்களைப் கூப்பிட்டுப் போய்... புஞ்சைக் காரருக்குக் ‘கூட்டிவிடுகிற’ வேலையைத்தான் சாமர்த்திய சாகசமாய் செய்கிறவள். ஒழுக்கமில்லாப் பிழைப்பால்... நகைநட்டு... வட்டிவாசி என்று கொழிக்கிறவள்.

“என்ன... சுப்பு, எங்க மோலாளி புஞ்சைக்கு வேலைக்கு வாரீயா?” கொக்கிபோட்டு இழுக்கிற வலைச் சொற்கள்.

“வேலைக்கு மட்டுந்தானா?” அர்த்தபூர்வமான வினயக்கேள்வி.

“எல்லாந்தான்” வெட்கமில்லாமல் வாயிளித்த அந்தச் சண்டாளி. ‘உதிர்த்தின கழுதை ஊருக்குப் பெரிய கழுதை’ என்கிற மாதிரி செருக்குடன் அதிகாரமாய்ப் பேசுகிற அவள்.

“நா வல்லேம்மா...”

“கஞ்சிக்கு என்ன செய்யப் போறே?”

“என்னத்தையோ ஒரு வழி பாத்துக்கிட மாட்டேன்?”

“புருஷன் இல்லாம நாதியத்துப்போய்... ஏதுமத்துப்போய் நிக்குறே. என்னத்துக்கு இம்புட்டுச் சீரழியணும்? வைக்கப்படப்பா? புடுங்கப் புடுங்க குறையப்போவுது? ஒடம்புதானே? செழிச்சு நிறையும்லே?”

குழைந்து குழைந்து பேசிய அவள். வசியம் பண்ணப்பார்க்கிற சொக்குப் பொடி வார்த்தைகள். இங்கிதமான சொற்கள்.

சுப்புத்தாய்க்கோ கோபத்தில் நாசி நுனி துடித்தது. விரிந்த கண்ணில் நெருப்புக் கீறல். ஆவேசக்குரலில் அவள்.

“இந்தா... போய், ஒஞ்சோலியைப்பாரு, மானமரியாதையோட சூடுசுரணையோட பொழைக்குறதுதான், மனசுப் பொழைப்பு. வேர்வையை நம்பி வாழ்ற வாழ்க்கைதான், எங்களுக்குத் தெரியும். ஒன்னை மாதிரி ஓடைக்காட்டுப் பன்னிகளுக்கு மானரோஷத்தைப்பத்தி என்ன தெரியும்?” கல்லெறி வாங்கிய நாயாக ஊளையிட்டுக்கொண்டே போய்விட்டாள் அவள்.

அன்றைக்கு... சுப்புத்தாய் கடைக்குப் போயிருந்தாள். இடுப்பில் சிறிய நார்ப்பெட்டி. சரக்கு வாங்கினாள். கணக்கு முடிக்கிறபோது.

கடைக்காரரின் கடுத்த பார்வை.

“என்னம்மா... கையிலே துட்டில்லியா?”

“பாக்கியிலே சேத்துக்கோங்க...”

“சேத்துக்கிட்டே போனா... நா எப்படி சரக்கு வாங்குறது? எதை வைச்சு கொள்முதல் பண்றது?”

“........”

“ரெண்டொரு நாள்லே கணக்கு முடிக்குற வழியைப் பாருமா.” குரலின் கண்டிப்புத் தொனியில் ஓர் உறுதி இருந்தது. இவளுக்குள் குலை கிடந்து பதறியது. வரப்போகிற நாளை நினைத்து ஒரு நடுக்கம், பதற்றம்.

கடைக்காரரும் கைவிரித்துவிட்டால்... யாரிடம் எதை வாங்கித் திங்க? வேறு புகலில்லையா? சோற்றுக்கு வேறு வழியில்லையா? சாப்பாட்டுக்காக... நடராஜனுக்கு சாப்பாடாவதா? த்தூ!

மறுநாள்-

வீட்டுமுற்றத்தில் உட்கார்ந்திருந்தாள். ஏறு பொழுது பத்துமணியிருக்கும். தெருவில் ஓர் ஈகுஞ்சுகூட இல்லை. எல்லாரும் காடுகரைகளில் உயிரைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊருக்குள் நாய், கோழிதவிர ஒரு சுடுகுஞ்சுகூட இல்லை. தனிமையில் முற்றத்து வாகைமர நிழலில் உட்காந்திருந்தாள். கடைக்காரரின் கண்டிப்பான தொனி, அடிவயிற்றை அறுக்கிறது. நடராஜனின் ஓரப்பார்வையில் வழிந்த ஓநாய் எச்சில் 'வைக்கப்படப்பா? கொறைஞ்சா போகும்?' என்று வெட்கமில்லாமல் வசியம்பண்ணிய அந்தச் சிறுக்கி.

இன்னைக்கு சோத்துக்கு என்ன செய்ய?

“யம்மா... சோறு வைம்மா” என்று வந்து நிற்கப்போகிற மகளுக்கு என்ன பதில் சொல்ல?

மனசெல்லாம் முள்குத்தல்களாக கேள்விகள். ரணப்படுத்துகிற உணர்வவஸ்தைகள்.

அப்போது-

தடதடத்து வந்த மோட்டார் பைக்கில் வெள்ளைச்சட்டை வெள்ளைவேட்டியாக வருகிற ஃபைனான்ஸ்காரர். வார வட்டிக்காரர். கண்டிப்பான ஆள்.

“அய்யா... கொஞ்சம் நில்லுங்க.”

எழுந்து நின்று கையசைத்தாள். வண்டி வேகம் குறைந்து, மூச்சடங்கியது. காலை ஊன்றிய நிலையில் கேட்டார்.

“என்னம்மா?”

“ஒரு... ஐந்நூறு ரூவா வேணும்.”

“அம்பது அம்பதா... பன்னெண்டு வாரம் தரணும். தவணை தப்பாம தந்துருவீயா?”

இருட்டுக்குள் நிற்கிற மனசுக்குள் ஒரு முரட்டுத் தைர்யம். குருட்டு வீர்யம்.

“தந்துருவேன்யா...”

வண்டியின் பெட்டியிலிருந்து சிறிய நோட்டை எடுத்தார். சுற்றுமுற்றும் ஒரு பார்வை. ஆளில்லாத வனாந்திரம்போன்ற தெரு. கேட்க நாதியில்லாத சூழல். இப்படி ஒரு சூழலில் பணம் கேட்கிற ஒரு பெண். வசியம் பண்றாளோ... நம்மளை வளைக்கப் பாக்குறாளோ... கடன் கேட்கிறமாதிரி கூப்பிட்டு ஆளை உள்ளிழுத்து சொக்குப்பொடி போடுவாளோ...

அவருக்குள் ஓடுகிற ஆம்பளைப் புத்தி. சபல எச்சில், ‘நல்ல... திரேகக்கட்டுதான். கட்டுவிடாத திரேகந்தான்.’ கையில் நோட்டுடன் முற்றத்துக்கு வந்து, இவளைக் கடந்து வீட்டு வாசலுக்குள் குனிந்து நுழைகிற அவர்.

அவளுக்கு அதிர்வு. திகைப்பிருட்டு.

“வாம்மா... இந்தா... வாங்கிக்க.”

“வீட்டுக்குள்ளே என்னத்துக்கு?”

“கையெழுத்துப் போடணும்லே?”

அரைமனசு. தயங்குகிற உணர்வு. திகைப்பும் குழப்பமுமாக வாசலை நெருங்குகிற சுப்புத்தாயின் தோள்பட்டையில் கையை அழுந்தப் பதிக்கிற ஃபைனான்ஸ்.

“வா... வெருசா...”

கைபதிந்த தோள்பட்டையில் வெட்டுண்ட மாதிரியிருந்தது, சுப்புத்தாய்க்கு. உயிரின் ஆணிவேர் வரைக்கும் அக்கினிப் பரவல்.

“காரியத்தை முடிச்சிட்டு... நா கலெஷனுக்குப் போகணும்லே?” துரிதப்படுத்துகிற அவரின் முகப்பதற்றம். கண்ணில் ஓநாய் மூஞ்சி. நா உலர்வில் தடுமாறுகிற சொல்.

தோள்பட்டையில் அழுத்திய கையுடன் சட்டென்று உள்ளிழுத்த வேகம். தடுமாறிய சுப்புத்தாய், சுதாரித்து, திமிறி... தெறித்தோடி முற்றத்துக்கு வந்து விட்டாள்.

“ச்சீ... பொறுக்கி நாயே!... போடா வெளியே... வட்டி வாங்கித்திங்குற நாய்ப்புத்தியை ஏங்கிட்டே வைச்சுக்காதே. விளக்குமாறு பிய்ஞ்சி போகும்.”

பெண் வேங்கையாக சீறிச்சினந்த சுப்புத்தாய். ஒடுங்கிய வாயை இடுக்கிக் கொண்டு ஓடிப்போன அந்த நாய். அவளுக்கே அவள் அசிங்கமாக... அசூயையாக...தோன்றுகிற அவலம்.

வீட்டுக்குள் வந்து... கதவைச் சாத்திக் கொண்டு சரிந்து உட்கார்ந்தாள். தலையில் தலையில் அடித்துக் கொண்டு கதறுகிற சுப்புத்தாய்.

“இனுமே... இந்தப் பூமியிலே உசுரு வைச்சு இருக்கவே கூடாது... நாண்டுக்கிட்டு தொங்கிர வேண்டியதுதான்.” வாளிக்கயிறை ஆவேசமும் வெறியுமாக அவிழ்க்க முனைந்த அவள், பதற்றத்தில் கை பரபரத்தது. முடிச்சவிழ மறுத்த கயிறு. பதறிப்பதறி அவிழ்க்கிற விரல் பதற்றம். வாளியின் பக்கத்தில் மகளின் சட்டைத் துணி. இன்றைக்கு கழற்றிப் போட்டு விட்டுப் போன சட்டைத்துணி.

“யம்மை... யம்மா... யம்மா...” என்று அந்தச் சட்டைத் துணி கூப்பிடுகிற மாதிரியோர் பிரமை.

“என்னை வுட்டுட்டு நீ போறீயாம்மா? நீயே தோத்துப் போய் செத்துட்டா... நா எப்படிம்மா வாழ்றது?” என்று கேட்கிற சட்டைத்துணி. வாழ்வின் அழைப்பு.

அவளுக்குள் வேறுவிதமான உடைப்பு. பாசத்தில் நனைந்த மனவரப்பின் உடைப்பு. பொங்கிப் பெருகி, இவளையும் இழுத்துக் கொண்டு பாய்கிற பாசப்பெருக்கு. ஒன்றைப் பத்தாக்குகிற தாய்மைப் பாசப்பெருக்கு.

“ஐயோ... ஐயய்யோ... ஆத்தா...” என்று வாய்விட்டுக் கதறியழுத அவள், “பெத்தபுள்ளையை ஒத்தையிலே பரிதவிக்க வுட்டுட்டு... புத்தியழிய இருந்தேனே... எனக்கும் இக்கதியா? என்ன பாவம் செய்ஞ்சேன்...நா ? அடக்... குருட்டுப்பய தெய்வமே...”

வெடித்துக் கதறியழுதாள். ஒரு பாட்டம் அழுது ஓய்ந்தாள். மனசின் குமுறலெல்லாம் வழிந்து வெளியேறிய அழுகை. தெளிந்த மனசின் நினைவாக வியர்வை வைராக்கியம்.

“வேர்வையை நம்புறவளுக்கு தேவடியாபுத்தியும் வராது. நாண்டுக்கிடுற புத்தியும் வரக் கூடாது. வேர்வையோட பலத்துலே மல்லுக்கட்டணும். வாழ்க்கையோட கட்டிப்புரளணும். நின்று போராடி ஜெயிச்சுக் காட்டணும்.”

உணர்ச்சியின் வேகமெல்லாம் வடிந்து ஓய்ந்தநிலையில் “எப்படி” என்ற கேள்வியின் மலை மறித்துக் கொண்டு நின்றது.

‘வேர்வை சிந்துறதுன்னு... முடிவாயிட்டா... அது யாரு புஞ்சையாயிருந்தா... என்ன? வந்து கூப்புட்டுறவுகளுக்குத் தான் போகணுமா? யாரும் வரலேன்னா... சாகணுமா? ‘வரட்டா’ன்னு நா போய் புஞ்சைக்காரவுககிட்டே கேட்டா... என்ன! வலிய கேட்டா... கேவலமா? வேர்வை சிந்தத்தானே, வலிய போய் கேக்கப் போறோம்? அதுலே என்ன கேவலம்?’

அழுகைவெள்ளம் வடிந்து ஓய்ந்து தெளிவுகண்ட மனவெளியின் நினைவலைகள், ஒளிப்புள்ளிகளாக நினைவுகள்.

மல்லுக்கட்டுகிற மனவலிமையோடு... சிதறிக்கிடந்த தலை முடியை ஒழுங்குபண்ணி, கோதி முடிந்துகொண்டாள். இறுகி நிதானப்பட்ட பெருமூச்சுடன் வெளியே வந்தாள்.

உச்சிமதிய வெயிலில் நிழல், காலடியில் பதுங்கிக்கிடந்தது, நாய்களைப்போல. வெயிலைத் துணிவுடன் ஏறிட்டுப் பார்த்தாள், சமூகத்தையே பார்க்கிறமாதிரி.

பாதையில் போன ராஜையாப் பெரியவரிடம் வலியப்போய்க் கேட்டாள்.

“உங்க புஞ்சை வேலைக்கு நா வரட்டா?”

-ராணி வார இதழ், 2009

"https://ta.wikisource.org/w/index.php?title=அக்னி_வாசம்/017&oldid=1817687" இலிருந்து மீள்விக்கப்பட்டது