அங்கும் இங்கும்/லெனினும் காந்தியும்

விக்கிமூலம் இலிருந்து



6. லெனினும் காந்தியும்

'மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே ! எப்படித்தான் விளைந்ததோ இந்நிலை?' என்று வியந்தோம். அந்த 'அற்புத'த்தைக் கண்டு திகைத்தோம். யார் சென்று கண்டாலும், இப்படியே வியக்கத்தான் வேண்டும் ; திகைக்காமல் இருக்க முடியாது.

மெய்யாக இது 'அற்புத'மா? 'அற்புத'மாயின், அதற்காகக் காலமெல்லாம் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்படிப் பல முறை குழம்பினோம். சில நாள் களுக்குப் பின், தெளிவு பிறந்தது.

சோவியத் ஒன்றியத்தில், கல்விக்கூடந்தோறும், லெனின் படமே அங்குச் செல்வோரை, முதன் முதல் வரவேற்கும், அப்படமும் பெரிய அளவில் இருக்கும். அதைக் கண்ட பிறகே, உள்ளே செல்ல இயலும். நாங்களும், ஒவ்வொரு கல்விக் கூடத்திலும் அப் பெரியாரின் படத்தைப் பார்த்துவிட்டே உள்ளே சென்றோம். அப்படத்தின் அடியில் அவர்கள் மொழியில் பளிச்சென்று எழுதியிருப்பதைப் பார்த்தோம். ஒரு முறையன்று. பலமுறை பார்த்தோம். எழுதியிருப்பது என்ன என்று கேட்கவில்லை. லெனினது பெயரையோ, அவரது சிறப்புப் பெயரையோ எழுதியிருப்பார்கள் என்று நினைத்தோம். அது என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எழவில்லை. 'கடா கன்று போட்டது என்று கேட்டதும், கட்டி விடுகிறேன' என்று பணிவிலே பழக்கப்படுத்தப்பட்ட அரசினர். ஊழியர்கள் அல்லவா. நாங்கள் ? நாள்கள் சில சென்றன.

ஒருபோது, எங்கள் குழுவில் ஒருவராகிய அம்மையார் லெனின் படத்தைக் காட்டி, அதன் அடியில் எழுதியிருப்பது என்ன என்று திடீரெனக் கேட்டுவிட்டார். பதில் வந்தது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தது என்ன தெரியுமா? படியுங்கள்! படியுங்கள்! மேலும் மேலும் படியுங்கள் லெனின் படத்தின் அடியில் எழுதியிருந்தது இதுவே.

சோவியத் புரட்சி வீரர் லெனின் எத்தனையோ பேசியிருப்பார்! எத்தனையோ எழுதியிருப்பார்! பொதுஉடமைக் கொள்கைகளைப் பலமுறை விளக்கியிருப்பார்! அவற்றிலே ஒன்றை-ஒரு மந்திரத்தை-ஒரு முழக்கத்தை-ஒர் ஊக்க ஒலியைப் போடாமல்-இதை எழுதிப் போட்டிருப்பது ஏன் ? கல்விக்கூடங்களுக்கு இதுவே பொருத்தம் என்பதாலா? பொது உடைமைப் பால் ஊட்டுவதற்கு பதில், பொறுப்புள்ள தொடக்கநிலை ஆசிரியர் கொடுக்க வேண்டிய தண்ணிரையா கொடுப்பது? இவ்வையங்களையெல்லாம் கொட்டிவிட்டோம். அது நல்லதாக முடிந்தது. சோவியத் ஒன்றியத்தில் கண்ட கல்வி 'அற்புதத்தின் ஆணிவேரை, கப்பை, கிளையைக் காணும் வாய்ப்புக் கிட்டிற்று.

எங்களுக்கு அன்று கிடைத்த, பதிலின், விளக்கத்தின் சாரம் இதோ .

'இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்' என்ற முறையிலே ஜார் ஆட்சி இரஷியாவில் நடந்து வந்தது. அக்காலத்தில், உழுது விதைத்து, அறுப்பார்க்கு உணவில்லை. உணவில்லாவிட்டால், என்ன ? பிணிகள் உண்டு. குளிருக்கு உடையில்லை. ஆயினும் என்ன ? உறைந்து விறைத்துப் போனால், பிறவித் துன்பம் அன்றோடே அகன்றது. இந்நிலையைக் கண்டு பொங்கி எழுந்தனர் பலர்; திட்டம் தீட்டினர் தலைவர்கள்; மன்னராட்சியைக் கவிழ்க்க வழி வகை ஆய்ந்தனர்; சோவியத் ஆட்சியை நிறுவ முயன்றனர்; அத்தகைய முயற்சி, எடுத்ததும் வெற்றி பெறவில்லை. முதன் முறை தோல்வி, பலருக்குத் தண்டனை அடுத்தடுத்து இப்படியே, போராட்டம், தோல்வி, தண்டனை, தலை மறைவு. ஆகவே, நாடு முழுவதும் இதைப் பற்றிய எண்ணம், குசுகுசுப் பேச்சு.

'வல்லமை பொருந்திய பேரரசைப் படிப்பாளிகள் சிலரது தலைமையில் பாமரர் பலர் எதிர்த்துக் கவிழ்ப்பது எளிதான செயலா ? இப்போராட்டத் திட்டங்களுல் பல இரகசியமாகத் தீட்டப்பட்டன. இரகசியத் திட்டங்களைத் தீட்டியவர்களில் லெனினுக்கே தலைமை இடம்.

"மன்னராட்சியைக் கவிழ்க்கும் புரட்சியில் மக்கள் பங்கு என்ன ? பலதுறைப் பாட்டாளிகளும், பலவூர்ப் பொது மக்களும். இரகசியமாக லெனினோடும் அவரது சகாக்களோடும் தொடர்பு கொண்டனர். இரகசியக் கட்டளைகளைப் பெற்றனர். மற்றவர்களைப் போல, மாணவ சமுதாயமும் இரகசியத் தொடர்பு கொண்டது; புரட்சிப் பணியில் தங்களுக்கும் பங்கு கேட்டது. எங்கெங்கே, என்னென்ன வேலைகளை எவ்வப்போது செய்து முடிக்க வேண்டுமென்று, ஆணை கேட்டது. பொது மக்களில், பல பிரிவினருக்குப் பல வகையான போராட்டங்களைக் கிளர்ச்சிப் பணிகளை, உயிர் கொடுக்கும் பணிகளைக் கொடுத்த லெனின், மாணவர்களுக்கு விறுவிறுப்பில்லாத் பணியையே கொடுத்தார். என்ன பணி அது ?

"படியுங்கள்: படியுங்கள் ! மேலும் மேலும் படியுங்கள்!" வகுப்பாசிரியரிடம் எதிர்பார்க்க வேண்டிய இவ்வறவுரையை வீரர் லெனினிடம் எதிர்பார்க்கவில்லை. இது மாணவர்களுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

புரட்சி என்ன எளிதான முயற்சியா ? ஒரு முறைக்குப் பல முறை தோற்ற வினையல்லவா ? பல்லாயிரக்கணக்கானவர்களைப் பலி கொண்டும் தோற்றதல்லவா ? புரட்சி. வலிமை மிக்க ஜாராட்சியைக் கவிழ்க்க, எல்லாரையும் எல்லாவற்றையும், கிடைத்தவர்களையெல்லாம், கிடைத்தவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாவா ? இக்கேள்விகள், புரட்சித் தலைவர் லெனினுக்கு எட்டின.

"புரட்சி மிகக் கடுமையானதே ! அது வெற்றி பெறப் பல ஒத்திகைகள் தேவைப்படலாம். அவற்றில், பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் விளையலாம். எத்தனை விலையானாலும், அதைக் கொடுத்து, ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்புறம் ? புதிய சமதர்ம ஆட்சியை நிலைபெறச் செய்ய, கட்டிக்காக்க, வளப்படுத்த. வலுப்படுத்த, பல்லாண்டுகள் ஆகுமே! சோவியத் ஆட்சித் தந்தைகளான முதியவர்களே, காலமெல்லாம், உயிரோடிருந்து, காக்க முடியுமா ? இளைய பரம்பரையன்றோ முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்? ஜார் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பைவிடச் சோவியத் ஆட்சிக்கு உள்ள எதிர்ப்பு, தொடக்க நிலையிலாவது அதிகமாக இருக்கும்; பல ஆண்டுகளுக்கு இருக்கும். உலக எதிர்ப்புக்கிடையில் சோவியத் ஆட்சி முறையைக் காத்து, வளர்க்க வேண்டிய இளைஞர்களை-மாணவர்களைப் புரட்சி நெருக்கடியில் இழுத்து விட்டால், நாளை சமதர்ம ஆட்சியைத் திறம்பட நடத்தப் போதிய அறிஞர்கள். விஞ்ஞானிகள், விற்பன்னர்கள், மேதைகள் பஞ்சம் வந்துவிடுமே. ஆகவே மாணவர்களை மாணவர்களாகவே விட்டுவைப்போம்.

படிப்பிலேயே ஊக்குவோம் முதியவர்களாகிய நாம் மற்றவற்றைப் பார்த்துக்கொள்வோம். இரஷியாவின் நீண்ட எதிர்காலத்தின் நன்மைக்காக, இளைஞர்களை இப்படிக்காத்து ஆகவேண்டும். மேலும் மேலும் கற்க வைத்தாக வேண்டும் என்று லெனின் கண்டிப்பாக இருந்தார்.

"கற்பதே, மேலும் மேலும் கற்பதே. மாணவர்கள் ஆற்ற வேண்டிய நாட்டுத் தொண்டு ; புரட்சிப் பணி' என்று லெனின் அறவுரையும் அறிவுரையும் கூறியதோடு நில்லாமல், தாமும் தம் கட்சியும் அன்றும் பின்னும் அக் கொள்கையை வழுவாமல் காத் திராவிட்டால், சோவியத்தின் ஒன்றியத்தின் அறிவியல். பொறி இயல், தொழில் இயல் வெற்றிகளை-இந்த அளவிற்குப் பெற்றிருக்க முடியாது. தலைவர் லெனினது நல்லுரைகளில், இவ்வுரையே. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இளைஞர்களுக்குத் தேவையானது. ஆகவே இதை லெனினது படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறோம்.’’ இப்படி எங்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.

"அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்பதைப்போல் இப்போதைக்கு-சமதர்ம ஆட்சிக் காலத்திற்கானதை அப்போதே-ஜார் ஆட்சிக் காலத்தின்போதே அறிவுறுத்தி, விதை நெல்களான மாணவர்களைக் கட்டிக் காத்ததால் அன்றோ, உலகம் வியக்கத்தக்க, முன்னறியாப் பெரும் செயல்களையெல்லாம் அருஞ் சித்துக்களையெல்லாம் செய்ய முடிகிறது சோவியத் ஒன்றியத்தால். வான வெளியிலே உலகத்தைச் சுற்றிய கருவிகளையும், நிலா உலகிற்குச்சென்று இறங்கிய கருவிகளையும் செய்து தந்த தொழில் மேதைகளும்; வழி வகைகளை வகுத்துத் தந்த விஞ்ஞானிகளும், கணித மேதைகளும் எங்கிருந்தோ குதித்து விட்டார்களா ? நிலம் வெடிக்க மேதைகளாக வெளி வந்தவர்களா ? லெனின் காலத்து மானவர்கள் அல்லவா படித்துப் படித்து, மேலும் மேலும் படித்து, உலகத் தலைமை நிலையை எட்டிப் பிடித்து விட்டார்கள். வளர வேண்டிய நாமும், நம் மாணவர்களை மாணவர்களாக வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டாமா ? இதோ என் கல்லூரி மாணவப் பருவம் நினைவிற்கு வருகிறது. ஆண்டு. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து எட்டு. நான் படித்தது சென்னை மாநிலக் கல்லூரியில். படித்த வகுப்பு இண்டர் மீடியட் அப்போது மாநிலக் கல்லூரியிலும் இண்டர் மீடியட் வகுப்பு உண்டு. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசினர் ஒரு குழுவை இந்தியாவிறகு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் பல நகரங்களுக்குச் சென்று, இந்தியாவிலுள்ள பல பெரியவர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னர், இந்தியர்களுக்கு எந்த அளவு தன்னாட்சி உரிமை கொடுக்கலாம் என்பதை அக்குழு பரிந்துரைக்க வேண்டும். இந்த ஆணையோடு வந்த குழுவிற்குப் பெயர் சைமன் குழு.

சைமன் குழு அமைக்கப்பட்டதும் பொங்கி யெழுந்தார் நாட்டின் தந்தை. உரிமைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவர், மகாத்மா காந்தி. 'எங்கள் உரிமையைப் பறித்தது அநீதி, எவ்வளவு உரிமை கொடுக்கலாமென்று விசாரிக்க வருவது அவமானப்படுத்துவதாகும். ஆகவே சைமன் குழுவை பகிஷ்கரியுங்கள்' என்று கட்டளையிட்டார் காந்தியார். கட்டளையை நிறைவேற்ற துடித்தனர் நாட்டுப்பற்றுடையோர். பகிஷ்காரக் கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் நாடு முழுவதிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நிய அரசு சும்மா இருக்குமா ? கட்டவிழ்த்துவிட்டது அடக்குமுறையை. கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடைகள், அலைமேல் அலையாக வந்தன. கடல் பொங்கினும் கலங்காத ஜவகர்லால் நேரு, அலகாபாத்தில், சைமன் குழுவே திரும்பிப் போ என்று முழங்கிக்கொண்டு, தலைமை தாங்கிப் பகிஷ்கார ஊர்வலத்தை நடத்தினார். வேடிக்கையா பார்க்கும், ஞாயிறு மறையாத சாம்ராஜ்யம் ? நேரு கைது செய்யப்பட்டார்.

இச் செய்தி நாடு முழுவதும் பரவிற்று; விரைந்து பரவிற்று. சென்னைக்கும் வந்தது. மக்கள் கொதித்தனர்; மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். வேலை நிறுத்த ஏற்பாடு செய்தன; கல்லூரிகளுக்குச் செல்லாமல், வேலை நிறுத்தமும் செய்தனர் எல்லாரும் அல்ல ; ஏராளமானவர்கள்.

வேலை நிறுத்தத் தலைவர்கள்-மாணவர்களே-தந்தி கொடுத்தனர் மகாத்மா காந்திக்கு. கல்லூரி மாணவர்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். நேருவை நிபந்தனையின்றி விடுதலை செய்யும்வரை மாணவர் வேலை நிறுத்தம் தொடரும். அதற்குத் தங்கள் ஆசி தேவை.' இதுவே தந்தி.

பதில் தந்தி வந்தது. 'தேசத் தொண்டர்கள் ஆகும் பொருட்டுக் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறி விடுங்கள். இல்லையேல் மாணவர்களாக இருந்து கல்லூரிக் கட்டுப்பாட்டிற்கு அடங்கி படியுங்கள்.' ஆசிச் செய்தியா இது ? ஆதரவா இது ? பதிலைப் பார்த்ததும், துடித்தனர். திட்டினர் சிலர் ஆனாலும் அடுத்த நாளே திரும்பிவிட்டனர் கல்லூரிகளுக்கு.

"ஆங்கில ஆட்சியினர் நடத்தும் கல்விக்கூடங்களை விட்டு வந்துவிடுங்கள். ஆங்கிலக் கல்வி நமக்குத் தேவையில்லை" என்று உபதேசம் செய்யும் காந்தியார், இப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கக் கூடாதா ? இதை சாக்காக வைத்தாவது ஆங்கிலக் கல்வியை ஒட்டையாக்கி யிருக்கலாமே!" இப்படி அங்கலாய்த்தனர், மாணவ மணிகள்.

மாதங்கள் பல சென்றன. மகாத்மா காந்தி தென்னகம் வந்தார். பல இடங்களுக்குச் சென்றார். பொதுக் கூட்டங்களில் பேசினார். மக்களுக்கு உணர்ச்சியூட்டினார். அந்த சுற்றுப் பயணத்தில், வேலூரில், மாணவர் கூட்டமொன்றிற்கு அறிவுரை வழங்கினார். கேள்விச் சீட்டொன்று அவரிடம் சேர்ந்தது. ஆங்கிலக் கல்விக் கூடங்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லும் தாங்கள். நேரு கைதானதைக் கண்டிக்கும் பொருட்டு, சென்னைக் கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தஞ் செய்ததை, ஆதரிக்க வில்லையே, ஏன்?. 'ஆம்; ஆங்கிலக் கல்வி ஆகாது. அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு வந்து, நாட்டுத் தொண்டு செய்வது நல்லது. ஆனால், இக்கொள்கையில் நம்பிக்கையில்லாதவர்கள். ஆங்கிலக் கல்வி பெற விரும்பும் மாணவர்கள். அக்கல்விக் கூடங்களின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மதித்து, அவற்றிற்கு அடங்கி நடப்பதே முறை ஒரே நேரத்தில், அரசியல் ஊழியராகவும். மாணவராகவும் இருப்பது முடியாது'-இதுவே மகாத்மாவின் பதில். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கலாமா ?

ஆகவே, சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொரு கேள்விச்சீட்டு சென்றது. அக்கேள்வியென்ன ? 'மாணவர்களில் பலருக்கு நாட்டுப் பற்று உண்டு. இப்போதே நாட்டுத் தொண்டில் ஈடுபடாவிட்டால், அப்பற்று அடியோடு பட்டுப் போகுமே ! மாணவப் பருவம் முடியும்வரை நாட்டுப்பற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், அவர்கள் தேசத் தொண்டர்களாவது எப்படி ?'

இக்கேள்விக்குக் காந்தியார் பதில் கூறினார். சாரம் இதோ :

ஆங்கிலக் கல்வி கற்பதனால் நாட்டை மறக்க வேண்டா ; வெறுக்க வேண்டா. நாட்டுப்பற்றைப் பசுமையாக வைத்துக்கொள்ளுங்கள். படிப்புக்குப் பங்கம் இல்லாமல் பணியாற்றுங்கள். வார. பருவ விடுமுறைகளின்போது, சிற்றுர்களுக்குச் செல்லுங்கள். தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, கதர் உடுத்தல், சமூகத் துப்புரவு ஆகிய ஆக்கப் பணிகளைச் செய்யுங்கள். இவை, சிறந்த நாட்டுத் தொண்டு’ என்றார்.

'எதைப் பெறவேண்டுமானாலும் அதற்குரிய வழியிலே, அதற்குரிய வகையிலே பெற வேண்டும், ஆங்கிலக் கல்வி ஆகாதென்று தாம் கருதினாலும், அதைப் பெற விரும்பு கிறவர்கள், அதற்குரிய இடத்திலே, அதற்குரிய ஒழுங்கிலே கட்டுப்பாட்டிலே, ஒருமை ஈடுபாட்டிலே, பெறவேண்டும் என்று தெளிவுபடுத்தினார் மகாத்மா காந்தி.

ஆயுதப் புரட்சி வீரர் லெனின் மந்திரம், 'மாணவர்கள் மாணவர்களாயிருக்கட்டும்.'

அமைதிப் புரட்சி வீரர், சாந்தத்தின் திருவுருவம் காந்தியடிகளாரின் மூல மந்திரம், 'மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும்.

இரு வேறு வகையான உலக வழிகாட்டிகளின் மாணவர்களுக்கான மந்திரம் ஒன்றே. மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும் என்பதே. இந்த ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும் ? வருமா? வரவிடுவோமா ? வந்தால் கல்வி நம்மோடு நின்று விடாதே எல்லோருக்கும் சென்று விடுமே !

மகாத்மாவையே சுட்டுக் கொன்றுவிட்டோமே ! அவர் அறிவுரையை இருட்டடிக்கவா முடியாது ? மாணவர்களை திசை திருப்பவா தெரியாது ? இப்படிக் கனவு காண்போர் கணக்கற்றோர்.