அண்ணாவின் நாடகங்கள்/கண்ணீர்த்துளி
கண்ணீர்த் துளி
அரசியல் நாடகம்
காட்சி 1
இருப்போர்:—திராவிடர் கழகத் தோழர், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர், காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து,
நேரம்:—வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.
தி.க: ஏ ! கண்ணீர்த் துளி! காமராஜர் மீது பகை கக்கிக் கொண்டிருக்கும் கபோதியே! காமராஜரை நாங்கள் ஆதரிக்கும் காரணத்தை விளக்கி, பெரியார் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தாயா?
தி.மு.க: படித்தேன், நண்பரே, ஆர்வத்துடன் படித்தேன்.
தி.க: அடுக்காதே; படித்த பிறகு?
தி.மு.க: சிந்தித்தேன்; வாதத் திறமையின் நேர்த்தி கண்டு மகிழ்ந்தேன். தி. க : ஆனால், திருந்தவில்லை......!
தி. மு. க : அறிக்கை யாரையும் திருத்துவதற்காக எழுதப்பட்டதாகவே எனக்குப் படவில்லை. திருப்திப் படுத்த, எழுதப்பட்டதாகத் தெரிகிறது; திருப்தி பெறவும் எழுதி இருக்கிறார் போல் தோன்றுகிறது.
தி. க : வக்கணை பேசுவாய், வேறென்ன தெரியும் உனக்கு. சரி திருத்தவோ, திருப்திப் படுத்தவோ, எதற்கோ எழுதினார்; கிடக்கட்டும்; அதற்குப் பதில் என்ன சொல்லப் போகிறாய்?
தி. மு. க : யார்? நானா? காமராஜர் அல்லவா, பதில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது, அறிக்கையைப் பார்த்தால்.
தி. க : உன்னோடு பேசுவதும், வீண். கொஞ்ச நஞ்சம், சந்தேகம் கொண்டோருக்கும், அந்த அறிக்கை, தெளிவு தருகிறது. காமராஜரிடம் நாம் ஆதரவு காட்டுவதால், நமக்குத்தான், திராவிடருக்குத்தான் இலாபம், தெளிவாகத் தெரிகிறது.
தி. மு. க : அறிக்கை அவ்விதம் தான் இருக்கிறது.......
தி. க : காமராஜரிடம் பேசின நமது தோழர்களெல்லாம், பெரியார், சொல்கிறபடிதான், பெருமையாக, சந்தோஷத்துடன் சொந்தம் கொண்டாடிக்கொண்டு, புகழ்ச்சியாகச் சொல்கிறார்கள் தெரியுமா?
தி. மு. க : உனக்கு அந்தப் பாக்யம் கிடைத்ததில்லை போலும்.....
தி. க : இந்தக் கிண்டல் பேச்சு வேண்டாம்...தெரிகிறதா...
தி. மு. க: சரி, உனக்குக் கோபம் குறையட்டும்—நான் வருகிறேன்—அதோ, காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து வருகிறார்.
தி. க : காத்தமுத்துவா? வா, வா என்ன நீ இந்தச் சதிகாரக் கும்பலுடன் கூடிக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன்.....
காத்தமுத்து: என்னய்யா, துப்பறியும் இலாகா போல இருக்கிறது பேச்சு.....என்ன சொல்கிறீர்தி. க : காமராஜர் எதிர்ப்புக் கோஷ்டியின் மகாநாட்டுக்குச் சென்றீராம்.
காத்த : ஆமாம் தவறென்ன? என்ன பேசிக்கொள்கிறார்கள், அவர்கள் வாதம் என்ன? இரு கோஷ்டிகளிலே, காங்கிரசுக்கும், தேசத்துக்கும் நன்மை எதன் மூலம் கிடைக்கும் என்று கண்டறிய வேண்டாமா? அதனால்......
தி. க : அதாவது, வேடிக்கை பார்க்க என்பது பொருள்.......
காத்த : வேவு பார்க்க என்றுதான் சொல்லேன்......
தி. க : எப்படியோ இருக்கட்டும்; காத்தமுத்து! காமராஜர் கவிழ்க்கப்படக்கூடாது—அதுதான் எங்கள் கவலை.....
தி. மு. க : ஏன் காத்தமுத்துவுக்கு மட்டும் வேறு எண்ணமா இருக்கும்!
காத்த : காமராஜ் எதிர்ப்பு என்று பெயரிடப்பட்டுவிட்டிருக்கிறதல்லவா ஊழியர் மகாநாட்டுக்கு; அதற்கு நான் சென்றதால், நண்பருக்கு அந்தச் சந்தேகம். ஆனால், ஒன்று: நண்பருக்குக் காமராஜ் மட்டும்தான் கவிழக்கூடாது; எங்கள் நோக்கம், காங்கிரசும் கவிழ்க்கூடாது என்பது.
தி. க : அதுபற்றி இப்போது பேசுவானேன். காமராஜ் சம்பந்தப்பட்ட மட்டில், நாம் ஒன்று, சரிதானா.....
காத்த : காமராஜ் பற்றி, அவரோடு 'வாழ்விலும் தாழ்விலும்' ஒன்றாக இருந்து வந்துள்ள எங்களுக்குத் தெரிவதைவிட அதிகமாகவே நண்பருககுத் தெரியும் போலிருக்கிறது......
தி. மு. க : ஏன், அவ்விதம் இருக்கக்கூடாது. மேலும், காமராஜர் ஏன், புதிய கருத்துள்ளவராகி இருக்கக்கூடாது......
தி. க : சொல்லு, சொல்லு,
காத்த : நீங்கள், தீனா முனா கானா தானே.
தி. க : கண்ணீர்த் துளிதான்! என்றாலும், நாங்கள் புட்டுப் புட்டுச் சொன்ன பிறகு, காமராஜர் நல்லவர் நம்மவர் என்பதை உணர்ந்து கொண்டு வருகிறார்.......
காத்த: நம்மவர்!......அதென்னய்யா, நம்மவர்.....எந்த அர்த்தத்தில், சொல்கிறீர்.
தி.மு.க: ஏன்! திராவிடர் என்ற பொருளில்தான் சொல்கிறார்.காத்த: நீங்களாக ஒரு முடிவு செய்து கொள்கிறீர்கள்......
தி. மு. க: இல்லையே! என் நண்பர், பழகிப் பார்த்துத்தான், காமராஜர் 'நம்மவர்' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்; என்னைக்கூடத் திருத்தப் பிரயாசை எடுத்துக்கொண்டிருக்கிறார்.....
தி. க: நிச்சயமாக, விரைவில் திருந்திவிடுவாய்......காமராஜரூக்கும் திராவிடர் கழகத்துக்கும் உள்ள 'நேசம்' நியாயமானது என்பதை இப்போதே ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுதான் இருப்பாய்..... . தி. மு. க: அறிக்கையாலே, என்கிறாயா?
காத்த: என்ன அறிக்கை......?
தி. க: இந்தப் பயல்களுக்கு விளக்கம் தருவதற்காகப் பெரியார்.....வெளியிட்டிருக்கிறார்......படிக்கவில்லையா......
காத்த: என்ன எழுதியிருக்கிறார்?
[காத்தமுத்துவிடம் அறிக்கை தரப்படுகிறது.
படிக்கும்போது முகம் சில இடங்களில் சுளிக்கிறது. காத்தமுத்து முகம் சுளிக்கும்போது தி. மு. க; தி. க. வைக் கவனிக்கிறார்.
தி. க.சிறிது கோபமடைகிறார்; சமாளித்துக் கொள்கிறார்.
தி. க: எப்படி, விளக்கம்......
காத்த: உங்களுக்குத் தந்திருக்கிறார்.
தி. க: இதைப் பார்த்த பிறகுதான் இந்த கண்ணீர்த் துளிக்கு இலேசாக மனம் மாறி வருகிறது...
காத்த: எனக்கே, கொஞ்சம் மனம் மாறி வருகிறது.....
தி. க: பலே! பலே! வெற்றி,வெற்றி.....
தி. மு. க. காத்தமுத்து இனி கழகம்தான்......ஏன், அப்படித்தானே.
காத்த: ஏனப்பா, வீணாக, துரும்பைத் தூணாக்கிப் பேசுகிறீர்கள்? இந்த அறிக்கை, எனக்குக் குழப்பத்தைத்தான் தருகிறது......காமராஜர் யார், எப்படிப்பட்டவர் என்பதே இப்போது புரிய மாட்டேனென்கிறது......தி. மு. க: உனக்குக்கூடவா? எனக்கும் அதே சங்கடதான்......ஆனால் என் நண்பர், தி. க, வுக்கு நன்றாகப் புரிகிறது......
காத்த: உங்களுக்கு, அவர் போக்குத் தெரியாது; ஆமாம், தெரிந்து கொள்ளவும் முடியாது......
தி. மு. க: காமராஜர், எங்களை ஏமாற்றுகிறார், என்கிறீரா?
காத்த: இல்லையானால், எங்களை ஏமாற்றுவாரா?
தி. மு. க: அதுவும் இல்லை, நம் எல்லோரையும் ஒன்றாக்குகிறார், என்று எண்ணிக்கொள்ளக்கூடாதா?
தி. க: அதேதான்......அதுதான்.
காத்த: அது எப்படிச் சாத்தியம்? நீங்கள், திராவிடநாடு விட்டு விட்டீர்களா......நேரு ஆட்சியை ஏற்கிறீர்களா......காங்கிரஸ் மகாசபையை எதிர்க்காமலிருக்கிறீர்களா......
தி. மு. க: சரி, சரி......ஏதேது, கதர் கட்டுவீர்களா, இந்தி படிப்பீர்களா, என்று அடுக்குவார் போலிருக்கிறதே, காத்தமுத்து.....
தி. க: அவருடைய ஆசை அது; நம்முடைய கொள்கையை நாம் எப்படி விட்டுவிடுவோம்?
காத்த: உங்கள் கொள்கை காமராஜரை ஆதரிப்பது அல்லவா......
தி. க: ஆமாம்
காத்த: அப்படியானால் காமராஜர் எந்தெந்தக் கொள்கைக்குக் கட்டுப்பட்டவரோ, எந்தெந்தக் கொள்கையால் அவர் வளர்க்கப்பட்டாரோ, உருவாக்கப்பட்டாரோ அவைகளுக்கு நீங்கள் அழிவு தேடலாமா......
தி. மு. க: நியாயமான வாதம்......
தி. க: வாதமா அது, பிடிவாதம்.....
காத்த: காமராஜர் வேண்டும், அவர் கொள்கைகள் வேண்டாம் என்பது என்ன வாதமோ! விசித்திர வாதம்......
தி. மு. க: இதிலென்ன விசித்திரம்? முட்டையை உடைப்பது முட்டை அடை செய்வதற்குத்தானே......அதுபோல இது ஒருமுறை.......காமராஜருடன் உறவாடுவது, காங்கிரசை அழிக்க; ஏன் நண்பரே! அப்படித்தானே......காத்த: அதுதான் எங்கள் சந்தேகம்......
தி. க: பார்த்தாயா, உன் வேலையைக் காட்டிவிட்டாயே......எங்களுக்குள் எரிச்சல் உண்டாக்கி வைக்கிறாயே......
தி. மு. க: ஐயயோ! அப்படிச் சொல்லிவிடாதே நண்பா......நான் விவரம் தெரியாமல், தவறாக வாதம் செய்து விட்டேன் போலிருக்கிறது......
காத்த: என்னமோ, என் குழப்பம் வளருகிறது; நான் அவரிடமே போய்த் தெளிவு பெறப் போகிறேன்.
தி. மு. க: பெரியாரிடமா......
காத்த: காமராஜிடம்......
தி. மு. க: ஆமாம். இந்தக் காத்தமுத்துப் போன்றவர்களிடம் எல்லாம், காமராஜர் தாராளமாகவா பேசுவார்? என்ன பேசுவார்கள்?
தி. க: என்ன பேசும், இதுகளெல்லாம்......ஏதாவது உதவி கேட்கும்......இவ்வளவு என்ன......நாளைக்கு வீட்டுக்கு வாயேன். காத்தமுத்து என்னென்ன பேசினான் என்பதை ஒரு எழுத்து விடாமல், நான் சொல்கிறேன்.
தி. மு. க: அது எப்படி? காத்தமுத்து வந்து சொல்வானா?
தி. க: அவனைக் கேட்டால் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியுமா......காமராஜர் ஆபீஸ் 'ப்யூன்' என் பக்கத்து வீடுதானே......சேதி பூராவும் சொல்லுவான். பெரியார் என்றால் உயிர் அந்த ஆசாமிக்கு......ஒரு கூட்டம் தவற மாட்டான்......காட்சி 2
இருப்போர்:—காமராஜர், அவர் நண்பர், காங்கிரஸ் ஊழியர் காத்தமுத்து.
நேரம்:—வெள்ளிக்கிழமை மாலை 5 மணி.
காமராஜர்: வரச்சொல்லு! வரச்சொல்லு! அடா, அடா! பொழுதுபோனால் பொழுது விடிந்தால், பெரிய தொல்லையாகி விட்டது, வந்து என்ன பேசவேணுமோ, அதைச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லு.
நண்பர்: முகத்தை இப்படிச் 'சிடுசிடு' என்று வைத்துக் கொண்டிருந்தால், வருகிறவருக்கு எப்படி இருக்கும்? ஏன், உங்களுக்கு, வரவர, இவ்வளவு கோபம் வருகிறது.
காம: நீ வேறே, தத்துவம் பேச ஆரம்பித்து விடாதே......வரச் சொல்லு முகத்தை என்ன பவுடர் போட்டுப் பளபளப்பு ஆக்கிக்கொள்ளணுமா......போய்யா, போயி.......
நண்: இதோ, அவரே, வந்து விட்டார்.
காம: வாய்யா! வா, வா! என்ன விசேஷம்? போன மாதம்கூட வந்தயாமே......நேரம் இல்லை, பார்க்க......கடிதம் போட்டதாகக் கக்கன் சொன்னார்.....திருச்சியிலே இருந்து வருகிறாப் போலே இருக்கு......
காங்கிரஸ் ஊழியர்: ஆமாம்.......போயிருந்தேன் சும்மா, பார்க்க, என்ன பேசுகிறாங்கன்னு கேட்க.....
காம: அதுசரி, அதுசரி......இதுபோல வேடிக்கை பார்க்க, பொழுதுபோக்க நீங்களெல்லாம் போறிங்க....அந்த ஆசாமிக, இதெல்லாம் ஆதரவுன்னு எண்ணிக்கொண்டு தப்புக் கணக்குப் போடுகிறானுங்க...சரி...என்ன ஒரே வீராவேசமான பேச்சுத்தானா
ஊழி: பேசினாங்க....கோபம் மட்டும்தான் என்று சொல்லி விடுவதற்கில்லை, வருத்தமும் இருக்கு...
காம: இருக்கும், யார் இல்லை என்கிறா; எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியுமா.......முடியல்லே.......கேட்டதைக் கொடுக்காவிட்டா, எள்ளும் கொள்ளும் வெடிக்குது.ஊழி: தப்பாவே, எடுத்துக்கொள்றீங்களே ஏதாவது கேட்டுப் பெறுவதுன்னா, உங்களோடு சிநேகமா இருந்தா கிடைக்காதா? பத்துக்கேட்டா, ஒண்ணாவது கிடைக்குமே........விரோதித்துக்கொண்டு, என்ன இலாபம்?
காம: வேறே என்னய்யா இப்ப இவங்களுக்குக் கவலை வந்துகுத்துது சொல்லு, கேட்போம். நான் படாத பாடுபட்டு பக்குவமாப் பேசி, உள்ளத்துக்கு உள்ளே இருப்பதை வெளியே தெரிய ஒட்டாதபடி சாமார்த்தியம் காட்டி, ஒரு பெரிய தொல்லையை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறேன்...இந்தத் தேர்தல் நேரத்திலே இது எப்படிப்பட்ட இலாபகரமான காரியம்...ஒரு பெரிய பட்டாளமே, இப்ப, நம்மோட வம்புதும்புக்கு வாராமே, வாழ்த்தி வரவேத்துகிட்டு இருக்குது...இலேசான ஆசாமிகளா, நெருஞ்சி முள்ளு மாதிரி, சதா சுருக்குச் சுருக்குன்னு குத்திகிட்டே இருக்கும்...அப்படிப்பட்ட ஆசாமிக, இப்ப, எவ்வளவு அன்பா, நேசமா இருக்கறாங்க......இந்தக் காரியத்திலே, இப்படிப்பட்ட 'ஜெயம்' கிடைக்கும்னு நானே, எதிர்பார்க்கவில்லை. எப்படியோ நம்மோட 'ஜாதக பலன்' என்றுதான் சொல்லோணும், வெற்றி கிடைச்சுது...பெரிய தொல்லை விட்டுதுண்ணு நம்ம ஆளுங்க மத்தக் காரியத்தைக் கவனிக்காமபடிக்கு......அவங்களோட சவகாசம் எதுக்கு? என்று கேட்டு, கொட்டிகிட்டே இருந்தா, எனக்குச் சங்கடமா இராதா......?
ஊழி: நாங்க சொல்கிறபடிதான் காமராஜர் நடக்கிறார், எங்களோட ஆள் ஆயிட்டார்—நாங்கதான் இப்ப ராஜ்யமே ஆளுகிறோம் என்றெல்லாம், அவங்க பேசறது கேட்டா, நம்ம ஆளுங்களுக்குச் சங்கடமா இராதா...?
காம: புத்தி எங்கேய்யா போச்சுது...நம்ம ஆளுங்க, கவனிச்சுப் பார்க்கவேணாமா...? எந்தக் காரியத்திலே, நான் விட்டுக் கொடுக்கறேன், எந்தக் கொள்கையிலே வளையறேன், சொல்லு கேட்பம் இந்தியான்னு வேண்டாம், திராவிடம் வேணும்னு எதாச்சும் பேசறனா.....நேத்துகூட, தனிநாடு கேட்கறது பைத்யக்காரத்தனம்னு நான் பேசி இருக்கறேன்.....
ஊழி: ஆமாமாம், நாங்ககூட பேசிக் கொண்டோம். இதைப் படிச்சா அவரு உங்களைத் தாக்குவாருன்னு கூட எண்ணிக் கொண்டோம்...
காம: போய்யா, அதுக்கு அவருக்கு நேரமே கிடையாதபடி நான் செய்து வைத்திருக்கறேன்...திராவிடநாடு கேட்கறது என்னோட கடமை—அது கூடாது என்கிறது காமராஜரோட கடமைன்னு, அவர் பேசறாரு, எழுதறாரு......இன்னும் என்னய்யா வேணும்.....திராவிட நாடாவது வெங்காய நாடாவதுன்னு கூட அவர் வாயாலேயே வந்திருக்குது தெரியுமேல்லோ...
ஊழி: அதெல்லாம் படிக்கிறபோது சந்தோஷமாகத்தான் இருக்குது...ஆனா, இராமனை கொளுத்தறது...
காம: கொளுத்தறபோது, நானென்ன சிவகாசி வத்திபெட்டி குரோஸ் குரோசா வாங்கிக் கொடுத்தனா? கொளுத்தவே விடலே...தெரியுமா......இராஜகோபாலாச்சாரி இருந்தபோதாவது, பிள்ளையாரை, தெருத் தெருவாப் போட்டு உடைச்சாங்க...இராமர் படம் கொளுத்தினா, ஜெயில்தான்னு சொன்னேன் துணிச்சலா...அது அவரோட கடமை அதுக்காக அவர் பேரிலே கோபம் கொள்ளாதிங்கன்னு அவர், அவரோட ஆளுகளுக்குச் சமாதானம் சொன்னாரு......அவ்வளவு பக்குவமாக நிலைமை இருக்குது......
ஊழி: உத்யோக விஷயத்திலே எல்லாம்......
காம: என்ன......? என்னய்யா குடி முழுகிப் போச்சி.....? எல்லாம் அவங்க கட்சி ஆளுகளுக்குத் தூக்கி கொடுத்துவிட்டமா...?
ஊழி: அப்படிச் செய்யல்லேன்னாலும் எங்க ஆளுக! எங்க ஆளுகன்னு அவங்கச் சொல்லிக் கொள்றாங்க.....
காம: அது அவங்க இஷ்டம்....உனக்கென்ன நஷ்டம், சொல்லு..இதோ பாருய்யா ஒரு வேடிக்கை...இவரு இருக்காரே, இராஜரத்தினம்......
ஊழி: ஆமா, போலீஸ் ஐ.ஜி.....
காம: அவர்தான்......அவர் ஐ.ஜி. ஆன உடனே, என்ன பேசிக் கொண்டாங்க...?
ஊழி: எங்க ஆசாமின்னு அவங்க பேசிக் கொண்டாங்க...
காம: நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி தெரியுமாய்யா, டிராமா கம்பெனி...
ஊழி:தெரியுமே...சம்பூர்ண இராமாயணம் நடத்தினாங்க...
காம: அந்த டிராமாவிலே, இந்த ஐ.ஜி. தலைமை வகித்தார்—என்ன பேசினாரு தெரியுமா...தெய்வானுகூலம்—தெய்வீக சக்தின்னு எதுவும் கிடையாதுன்னு சில பைத்யக்காரர்கள் பேசறாங்க. அது சுத்த தப்பு. எனக்கு ஐ.ஜி. வேலை கிடைச்சதுகூட தெய்வானுகூலத்தாலேதான்னு, பேசினாரு தெரியுமா... ஊழி: அப்படியா...அடே...அவரா...?
காம: ஆமா! பேப்பரிலே பார்க்கலையா? இப்ப, சொல்லய்யா, அவர் எங்க 'ஆளு'ன்னு அவங்கப் பேசிக்கொள்றதிலே, அர்த்தம் ஏதாச்சும் இருக்கா...
ஊழி: ஆமா...எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்..?
காம: கல்வி இலாகாவிலே, சுந்தரவடிவேலு இருக்காரேல்லோ...
ஊழி: ஆமாம்...அவரு முழுக்க முழுக்க அவங்க ஆளாம்...
காம: யாரு சொல்றது? அவங்கதானே......! பைத்யக்காரத்தனமா, நீயும் நம்பறயா? இதோ பாரய்யா. இராஜகோபாலாச்சாரி ஆட்சியின்போது, இந்த ஆசாமி, கல்வி இலாகாவிலேதான் பெரிய வேலையிலே இருந்தாரு......அப்ப கல்வித் திட்டம் வந்துதேல்லோ.....
ஊழி: நாமெல்லாம்கூட எதிர்த்தமே...
காம: ஆமாய்யா...பெரியார் கட்சியும் பலமாகத்தானே எதிர்த்துது...மறியல் நடத்தல்லே...
ஊழி: ஆமாம்...அடே அப்பா, ஊரையே ஒரு கலக்கு கலக்கி விட்டாங்களே...
காம: கலக்கினாங்களேல்லோ.....அப்ப, இதே சுந்தரவடிவேலுதான், ஊரூருக்குப் போயி ஆச்சாரியாரோட கல்வித்திட்டம் சிலாக்யமானது, அதை எதிர்க்கிறவங்க விவரம் தெரியாதவங்கன்னு பேசினவரு...தெரிஞ்சுக்கோ...
ஊழி: இவரா...ஆச்சாரியாரையா ஆதரிச்சாரு...
காம: ஆதரிக்காமே, என்ன பண்ணுவாரு? ஏன்யா, உத்யோகஸ்தரையெல்லாம், உன் ஆளு என் ஆளுன்னு கட்சிகள் பேசிக் கொள்ளலாமே தவிர. அவங்க எப்பவும் 'எஜமான் சொல்படி'தானே...
ஊழி: அப்படித்தான் இருக்குது...
காம: இப்படிப்பட்டவங்களுக்கு உத்யோகம் கொடுத்து விட்டதிலே, நமக்கென்னய்யா நஷ்டம்....அதனாலே என்ன முறை, தலைகீழாக மாறிப் போச்சு? என்ன திட்டம் வந்து நம்மைக் குத்துது, குடையுது.....பெரியவரு, என்னை தற்குறி, தன்மானமத்தவன், கங்காணி, அப்படி இப்படின்னு ஏசிப்பேசி வந்தாரு... இப்ப, தமிழ் மகன், தடியாலே அடிச்சாலும், ஜெயிலிலே போட்டாலும், நான் அவர் பேரிலே கோபம் கொள்ளவே மாட்டேன். அது அவரோட கடமை...என்றல்லவா பேசறாரு...பார்க்கறயேல்லோ அவங்க பேப்பர்லே...
ஊழி: ஆமாமாம். நம்ம பத்திரிகைகள் போட மறந்துட்டாகூட, இப்ப நம்ம சேதியை அவங்கதான் வெளியிடறாங்க...ஒண்ணாயிடணும்னுகூட யாரோ, அவங்க ஆசாமி பேசினாருன்னு, பார்த்தேன்...
காம: ஆமாமாம்...இரண்டொரு உத்யோகம்...இதனாலே, நமக்கு, கட்சி என்கிற முறையிலே, எவ்வளவு பெரிய இலாபம்னு கவனிச்சயா...எத்தனை விதமான இலாபம்...
ஊழி: ஓட்டு, நமக்குத்தான் போடணும்னு...
காம: அடிச்சிப் பேசறாங்கய்யா...இன்னும், நாம், எலக்க்ஷன் பிரசார கூட்டம் போடவே இல்லை; நம்ம வேலையை அவங்க ஆரம்பச்சி 'ஜரூரா' செய்துகிட்டு, வாராங்க, ஊரூரா...
ஊழி: காங்கிரசுன்னா, வேப்பங்காயா இருக்கும்...எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க, அவங்க...
காம: ஆகுமா...அது முன்னே!...இப்ப, எல்லாம்...சரியாகுது...கசப்பு மருந்து தேனிலே குழைச்சி சாப்பிடுவது இல்லையா...அது போலன்னு வைச்சிக்கய்யே... 'ஓட்டு' வாங்கித் தர, அவங்களோட தயவை, நான் ஒண்ணும் கேட்கல்லே...தானா வருகிற சீதேவியை வேணாம்னு சொல்றதா? கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு வந்து கொடுக்கும் என்பாங்களே, அது போல! இதைத்தானே, இராஜதந்திரம்னு சொல்லணும்...
ஊழி: ஆமா, பெரியவரோட கட்சி ஆசாமிக, இதை எல்லாம் அலசிப் பார்க்கமாட்டாங்களா...
காம: நேரம் ஏது? ஏன்யா, அவரு என்ன சாமான்யப் பட்டவரா...காமராஜர் சங்கதி கிடக்கட்டும், இராமன் சமாசாரத்தைப் பார்க்கலாம் வாங்கன்னு அழைச்சிகிட்டுப் போயிட்டாரே...இப்ப, அவங்களோட கவனம், மெட்ராசிலேயா இருக்குது....அயோத்தியா பட்டணம் போயாச்சி...
ஊழி: ஒரு விதத்திலே, அது நமக்குச் சௌகரியமாப் போச்சு...காம: ஒரு விதத்திலேயா......நீங்க இதை எல்லாம், சரியா, அலசி ஆராய்ந்து பார்க்கறது கிடையாது....பெரியவரு, இப்ப இராமர்—சீதைபத்திப் பேசறதும் எழுதறதும், கிளர்ச்சி செய்யறதும், பார்த்தா, அவங்க ரெண்டு பேரும் இப்ப, எதிரே இருந்து கொண்டு இருப்பதுபோல தெரியுதேல்லோ...அவ்வளவு தீவிரமாத்தானே எதிர்க்கிறாரு...
ஊழி: ஆமாம்...அது தவிர, வேறே பிரச்சினையே கிடையாதுன்னு நினைக்கிற மாதிரித்தான் தோணுது.
காம: அப்பேற்பட்ட எதிர்ப்புச் சக்தியைக் கிளப்பி, ஓயாம ஒழிச்சலில்லாமெ பாடுபட்டு, படை திரட்டி கிளர்ச்சி செய்யக் கூடியவர்னு தெரியுதேல்லோ...
ஊழி: ஆமாமாம்...அது எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே...
காம: அப்படிப்பட்ட சக்தியை இப்ப என்னோட சிநேகிதம் மட்டும் இல்லேன்னா, ஆட்சியின் பேரிலே தானே ஏவி இருப்பாரு...திக்குமுக்காடிப் போயிருக்கணுமே...அந்தத் தொல்லையைச் சமாளிக்கிறது தவிர வேறே ஒரு வேலைக்கும் நேரம் கிடைக்காதே...ஏன்யா மிரட்டறேன்னு நினைக்கறியா...நான் சொல்றது சரியா இல்லையான்னு நீயே, யோசிச்சுப்பாரு, புரியும் தேவி குளம் பீர்மேடு விஷயமிருக்கே, எப்பேற்பட்ட தலைவலி...
ஊழி: பெரிய தலைவலிதான்...இன்னும் தீரலிங்களே...
காம: மலைமலையா ஆதாரமிருக்குது, தேவிகுளம் இதெல்லாம் தமிழனுடையதுதான் என்பதற்கு......கிடைத்தாகணும், நியாயப்படி பார்த்தா...ஊரே திரண்டுது...எல்லாக் கட்சிக்காரனும் 'ஒண்ணா' கூடிகிட்டானுங்க...
ஊழி: ஆமா, பெரியவருகூட காரசாரமாக எழுதினாரு...
காம: எப்படி எழுதாமே இருக்கலாம்? நாமேகூடத்தானே பேசினோம். சட்டசபையிலே தீர்மானம் போட்டோம்...
ஊழி: டில்லியிலே, நம்ம மனுவைத் தள்ளி விட்டாங்க...
காம: ஏன்யா, பூசி மெழுகறே......நம்மோட மூக்கை அறுத்து முகத்திலே கரியைப் பூசி அனுப்பி விட்டாங்க.....பெரியவருமட்டும், என்னோட சினேகிதமா இல்லாமெ இருந்தா தூள் பறந்திருக்குமே, துரோகி ஒழிக! வடநாட்டுக் கூலி ஒழிக! கங்காணி ஒழிக! மானங்கெட்ட மந்திரிசபை மண்ணாய்ப் போக!..... என்று நாள் தவறாமல், போடுபோடுன்னு போட்டபடி அல்லவா இருந்திருப்பாரு, சும்மாவா விட்டுவைப்பாரு, எத்தனை கண்டன நாள்—எவ்வளவு கிளர்ச்சி—மறியலு—ஏ, அப்பா! ஊர் அமளிகுமளியாயிருக்குமே......இராமர் படமா எரிச்சிகிட்டு இருப்பாரு.....போட்டுக் கொளுத்து நேரு படத்தை என்பாரே!
ஊழி: செய்திருப்பாரு.....ஆமா.....
காம: தடியடி, துப்பாக்கி, ஜெயிலு எல்லா ரகளையும், இங்கே, பம்பாய் மாதிரித்தானே நடந்திருக்கும்.....?
ஊழி: உண்மைதான்.......ஊரே நாறிப்போயிருக்கும்...
காம: இப்போ? கப்சிப்! எவனாவது, மத்தக்கட்சிக்காரனுக, தேவிகுளம் பீர்மேடுன்னு பேசினா, இப்ப, நான்கூடப் பதில் சொல்லத் தேவை கிடையாது. அவரே, சரிதான் வாயை மூடுங்கடா..........தேவியும் குளமும்......மானங்கெட்ட சீதையையும் மரியாதை கெட்ட இராமனையும் கொளுத்திச்சாம்பலாக்காமெ. அந்த ஊரு வேணும் இந்த ஊரு வேணும்னு, வம்பு பேசறிங்களே, ஈனப்பிறவிகளே! இழி ஜாதி மக்களே!—அப்படி இப்படின்னு தாக்குதாக்குன்னு தாக்கறாரு......வடக்கெல்லையிலே, நமக்கு நியாயம் கிடைக்கல்லே, வாயைத் திறக்கறாரா, பார்த்தயா? தேவிகுளம் பீர்மேடு, எப்படியும் தமிழனுக்குத்தான், கூச்சல் போடாதிங்க, கிளர்ச்சி செய்யாதிங்க, நாங்களே வாங்கிக் கொடுக்கறோம்னு, நாம,காங்கிரஸ் கூட்டத்திலேயும் சொன்னோம், சட்டசபையிலும் பேசினோம்—நேரு நம்மோட மூக்கை அறுத்து விட்டாரு...இப்ப எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற சினேகிதம் இல்லைன்னா, வெளுத்து வாங்கி இருப்பாரே பெரியவரு, சும்மாவா விட்டு வைப்பாரு! மந்திரிசபை ஒழிப்பு நாள் போட்டிருப்பாரு! இப்ப பார்த்தயா? சூர்ப்பனகையோட மூக்கை இராமன் அறுத்தது பேடிச் செயல், இதை எந்த யோக்யன் கேட்டான் என்று பேசி வாராரு......நாம், தப்பிச்சிக்கிட்டோம்........
ஊழி: அந்த வகையிலே பார்க்கறபோது, நீங்க அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லோணும்....
காம: 'நாம்'ன்னு சேர்த்துச் செல்லய்யா....நம்ம கட்சிக்கே அதிஷ்டம்னு சொல்லு. ஒண்ணு கேட்கறேன், சொல்லு, சென்னை ராஜ்யம்னுதான் பேர் இருக்கோணும் தமிழ்நாடுன்னு பேர் முடியாது என்று சொல்லி விட்டு, என்னைத் தவிர வேறு எவனாலாவது நிம்மதியா இருக்க முடியுமா? சும்மா விட்டுவைப்பாரா பெரியவரு! அட, மானங்கெட்டவனே! உன்னைப்போயி, நான் பச்சைத் தமிழன், தமிழ் மகன், தன்மானத் தமிழன் என்றெல்லாம் தூக்கி வைச்சி வைச்சிப் பேசினேனே! தமிழ்நாடுன்னு பேர் வைக்கக் கூடவா உனக்கு மனம் இல்லை, தமிழன் தானா நீ! மான ரோஷம் எல்லாம் வித்துப் போட்டு, நீ மந்திரியா இருக்கலாம்....நான் எப்படி அதைப் பார்த்துகிட்டுச் சும்மா இருக்க முடியும்......ஆகவே, இரண்டிலே ஒண்ணு பார்த்துவிடறேன்....என்று 'போர்' ஆரம்பிச்சிவிட்டிருப்பாரெல்லோ......
ஊழி: ஆமாம்.....தமிழ்நாடு என்கிற பெயருக்காக 'போர்' நடத்தப் போவதாகக்கூடச் சொன்னதாகக் கவனம்......
காம: சொன்னாரய்யா, சொன்னார். பிறகு, பார்த்தார், நான் தமிழ்நாடு கிடையாதுன்னு செல்லி விட்டேனா, என்னடா செய்யறது, இந்த மாதிரி நிலைமை ஆயிப்போச்சேன்னு, யோசனை செய்தாரு. செய்து, பிடி இராமனை! என்று அவரோட ஆசாமிகளுக்கு வேறே வேலை கொடுத்து விட்டாரு.....
ஊழி: சாமர்த்தியசாலிதாங்க......
காம: யாரு? அவருமட்டுந்தானா? ஏன்யா, அவர் மூலமாகக் காங்கிரசுக்கு வரக்கூடிய ஆபத்தை வரவிடாமப்படிக்குத் தடுத்த என்னோட சாமர்த்தியத்தைக் கொஞ்சங்கூடப் பாராட்டமாட்டே போலிருக்குது.......
ஊழி: செச்சே! அப்படி இல்லிங்க....நீங்க, முன்னே எல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருப்பிங்களே, இப்ப, என்னமோ குழைறதும் கொஞ்சறதுமா இருக்கவே.........
காம: குழையறதாலே, இலாபம் இருக்கா இல்லையான்னு பாரு. பம்பாயிலே இவ்வளவு ரகளை நடந்தது—பஞ்சாபிலே குஜராத்திலே—அசாமிலே—ஒரிசாவிலே—எங்கேபார்த்தாலும் ரகளையோ ரகளைன்னு நடந்தது—துப்பாக்கிப் பிரயோகம் நாள் தவறாமல் நடந்தது......கொலை! படுகொலை! சித்திரவதை! காங்கிரஸ் கொடுங்கோலாட்சி!—என்று இன்னேரம் இதற்காக, பெரியவரு சூறாவளிபோல அல்லவா பிரசாரம் செய்து, காங்கிரசோட மானத்தை வாங்கி விட்டிருப்பாரு—கொலைபாதக ஆட்சித் தலைவர் வருகிறார், அவர் முகத்திலே காரித் துப்புங்கள்—என்று இராஜேந்திர பிரசாத் வந்தபோது இயக்கமே நடத்தி இருப்பாரே! நீயும் பார்க்கறயே, நாள் தவறாமல் பேசுகிறாரே, ஒரு வார்த்தை, கண்டனம் பேசுகிறாரா? பேசமாட்டார்! எனக்குச் சங்கடமாக இருக்குமே என்கிற எண்ணத்திலேதான். இல்லையானால், 'நேரு ஒழிக' கிளர்ச்சிதான் நடக்கும்.ஊழி: ஆமாம்......அதைக் குறித்தெல்லாம் பேசுவது என்றால் அவருக்கு இஷ்டமாச்சே......
காம: இஷ்டம்னு மெதுவாச் சொல்றியே......அக்காரவடிசல் சாப்பிடுவது போலன்னு சொல்லு......காங்கிரஸ்காரர்களே காங்கிரஸ் ஆட்சியை வெறுப்பார்கள் அப்படியல்லவா, புட்டுப் புட்டுச் சொல்லி வருவாரு, பார்க்கறயே, அவர் சீதையைப் பத்தி எடுத்துச் சொல்லி வருவதைக் கேட்டா, சீதைக்கே சந்தேகம் வந்து விடுமே, அப்படி இருக்கெல்லோ, அப்படிப் பட்டவரு, காங்கிரஸ் ஆட்சியிலே, இரத்தம் ஆறாக ஓடுது, பிணம் மலைமலையாகக் குவியுதுன்னு, எடுத்துச் சொல்லியிருந்தா, அம்மாடி! அல்லோலகல்லோலமாகி இருக்குமே, ஒரு பேச்சு உண்டா! அதுதான் போகட்டும்! சிலோனிலே தமிழர்களைச் சுட்டுத் தள்ளின சேதி வந்ததே-எங்க ரெண்டு பேருக்கும் சினேகம் இல்லாமெ போயிருந்தா—இன்னேரம், காங்கிரஸ் சர்க்காரைப் படாதபாடு படுத்தியிருக்கமாட்டாரா? கப்சிப் ஒண்ணும் பேசல்லே, பார்த்தயேல்லோ! இந்த 'விசைத் தறி' சமாசாரம் ஒண்ணு போதுமே அவருக்கு காங்கிரஸ் சர்க்காரை கண்டதுண்டமாக்காமல் இனி நான் வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்கமாட்டேன் என்று கடும் சபதமல்லவா, எடுத்துக் கொண்டிருப்பாரு!
ஊழி: ஆமாம்.....அதெல்லாம் ஒரு துளி சங்கடமும் தருவதில்லை, எதெதற்கு அவர் பெரிய பெரிய கிளர்ச்சி செய்யக்கூடியவானு, நாடு எதிர்பார்க்குமோ, அதிலே அவர் தலையிடவே காணோம்.
காம: அதுமட்டும் இல்லை....அவர் தலையிட்டு, கிளர்ச்சி செய்யாதது மட்டுமல்ல, மத்த கட்சிக்காரனுங்க ஏதாச்சும் மூச்சுப் பேச்சுன்னாலும், இவரே அவர்களை எதிர்த்து, மூலையிலே உட்காரச் செய்துவிட்டு, எனக்குச் 'சேதி' சொல்லி அனுப்புவாருன்னு, எண்ணிக்கொள்ளேன், இவ்வளவு 'இலாபம்' இருக்குது
ஊழி: விளங்குதுங்க.....விளங்குது
காம: என்னோட சினேகிதம் ஏற்பட்ட பிறகு, அவர், தனிநாடு கேட்கிற விஷயத்தைக்கூட பத்தோட பதினொன்னு செய்துகிட்டாரு.....ஐந்தாண்டுத் திட்டத்தை அலங்கோலப்படுத்திப் பேசறது கிடையாது; இப்படி நமக்கு ஏகப்பட்ட இலாபம் இருக்குது.
ஊழி: இதை எல்லாம், விளக்கமாச் சொல்லி விடுங்களேன் நம்ம ஆளுகளுக்கு......காம: சுத்த ஏமாளியா இருக்கறயே, நம்ம ஆளுகளுக்கு விளக்கமாகச் சொன்னா, பெரியவரோட கட்சி ஆட்கள் விசாரப் படமாட்டாங்களா.....என்னடா இது, பெரியவரு காமராஜர்கூட நேசமா இருப்பது, ஆராய்ந்து பார்த்தா, நம்மோட கொள்கைக்கே ஆபத்தாத்தான் இருக்குது, காங்கிரசுக்குத்தான் அந்தச் சினேகிதத்தாலே, இலாபம் பலவிதத்திலேயும் இருக்குதுன்னு தெரிஞ்சி, சங்கடப்படமாட்டாங்களா......?
ஊழி: ஆமாங்க...... அதுவும் உண்மைதான்.
காம: அதனாலேதான், இப்படி உன்னைப்போல, தனியா வந்து. பார்க்கிறவங்களிடம் நான், விளக்கம் சொல்றேன். தேர்தல் முடிகிற வரையிலே, நாம இந்த! 'கறவைப் பசுவை' விடப்படாது ஐயா, விடப்படாது......ஆமா! நான் காரணமில்லாமலே, சினேகிதம் செய்து கொண்டிருப்பனா! கெண்டையை வீசினா, விரால் கிடைக்கும்னு, நம்பு. பெரியவரே, எழுதியிருக்காரு, காமராஜர் எப்பவும் காங்கிரஸ் 'பக்தர்'னு தெரியுதா.......
ஊழி: உங்களோட காங்கிரஸ் 'பக்தி' எங்களுக்குத் தெரியாததுங்களா......
காம: 'பக்தி' மட்டுமல்லய்யா......'யுக்தி' இருக்குது, அதையும் தெரிஞ்சிக்க வேணும்......தெரியுதா.......
ஊழி: உங்களோட பக்தியும் யுக்தியும், யாருக்கு வரும்.......இனி நான் சும்மா இருக்கப்போறதில்லைங்க.....ஆமா, கிராமம் கிராமமாக இதைச் சொல்லி வைப்பேன்......
காம: இரு, இரு.....வெளிப்படையாகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்துவிடாதே......ஆமா.....இந்த ஐந்தாண்டுத் திட்டத்துக்கு ஒரு நாடகக் கோஷ்டி ஏற்படுத்த முடியுமா......உன்னாலே......
ஊழி: நீங்க உத்தரவிட்டா செய்து முடிச்சுடறேன்.......இதுக்கு என்னங்க கஷ்டம்....
காம: செய்துபாரு, யோசனை. அடுத்த மாசம், முடிக்கலாம்.
ஊழி: நம்ம பக்கத்திலே, ஒரு மகாநாடு போடணுமுங்க, எலக்க்ஷனுக்கு முந்தி.
காம: போட்டாப்போச்சி, அதுக்கென்ன.
ஊழி: இந்திராகாந்தி வருவாங்களான்னு, கேட்கறாங்க.
காம: அடெடே! காங்கிரஸ் மகாநாடு போட உத்தேசமா?ஊழி: ஆமாங்க...நம்ம கட்சி மகாநாடுதான்.
காம: ஏன்யா! அதைவிட, புத்தர் மகாநாடு, திருக்குறள் மகாநாடு. இப்படி ஏதாவது போட்டா?
ஊழி: புரியுது, புரியுது...போடறது...எல்லோரையும் அழைக்கறது...
காம: இந்த முன்னேற்றத்தானுங்க மட்டும் வேணாம்...
ஊழி: சரி...அவனுங்க வந்தா கொஞ்சம் கூட்டம் வருது...
காம: கூட்டம் வரும்...ஆனா, அவரு வரமாட்டாரு.
ஊழி: அதுவும் அப்படியா...நமக்கு எதுக்குங்க சங்கடம்...
காம: 'யுத்தி'தான்யா, இப்ப நமக்கெல்லாம் 'கத்தி'—தெரியுதா...
ஊழி: தெளிவாகத் தெரியுது...ஏங்க, தேசீய கலா சேவா சபான்னு பேர்வைக்கலாமா...
காம: எதுக்குப் பேர்?
ஊழி: அதுதாங்க, நீங்க சொன்னிங்களே...?
காம: மகாநாடு விஷயமாத்தானே சொன்னேன்...
ஊழி: அதுக்கு முந்தி சொன்னிங்களே...ஐந்தாண்டுத் திட்ட பிரசாரம்...
காம: அடே, அதுவா, மறந்து விட்டேன்...
ஊழி: இதுதாங்க, எங்களோட பயமெல்லாம் எங்க விஷயத்தை மறந்து விடுவிங்களோ என்கிற பயம்தான்.
காம: அந்தப் பயமே வேண்டாம்...நான் எப்பவும், உங்களோட சேர்ந்து வளர்ந்தவனாச்சே...இந்தச் சினேகிதமெல்லாம் எனக்கு 'சாஸ்வதமா'...? இருக்கிற வரையிலே, என்னென்ன இலாபம்னுதான், என் குறி இருக்கும்...தெரியுதா...
ஊழி: நேரமாகுதுங்க...டெலிபோன்கூட அடிச்சிகிட்டே இருக்குது...நான் வாரேனுங்க வந்தேமாதரம்.
காம: ஜெய்ஹிந்! நமஸ்காரம்...காட்சி 3
இருப்போர்:—திராவிட கழகத் தோழர், திராவிட முன்னேற்ற கழகத் தோழர், ஆபீஸ் ப்யூன், ஆளவந்தார்.
காலம்:—சனிக்கிழமை மாலை 7 மணி.
தி. மு. க: இந்தக் காத்தமுத்து, என்ன பேசினாராம், காமராஜர் என்ன சொன்னாராம்......அடடே! என்ன, கண்ணிலே ஏதாவது தூசி விழுந்ததா.....
ஆள: ஏன், தம்பி! இன்னும் அதை எண்ணியா கண்ணைக் கசக்கிக்கிட்டு இருக்கறே
தி. மு. க: கண்ணீர் துளி!
ஆள: நீ, வேறே, தம்பியோட மனம்தான் தணலாக் கிடக்குதே.
தி. மு. க: நண்பா! கவலைப்படாதே, ஆளவந்தார், எனக்கு விவரமாகச் சொன்னார், காமராஜர், காத்தமுத்து சம்பாஷணையை
தி. க: உன்னிடம் சொல்லியாச்சா.
ஆள: என் எரிச்சல் இன்னமும் அடங்கல்லையே, தம்பி, காமராஜரைப் பெரியார் ஆதரிப்பதாலே, நமக்குத்தான் இலாபம்னு நீ சொல்லிச் சொல்லி, நானும் நம்பிக்கொண்டுதான் இருந்தேன்.
தி. மு. க: ரெண்டு பேருமாச் சேர்ந்து, என்னைத் திருத்தக் கிளம்பினது கொஞ்ச நஞ்சமில்லையே.......
தி. க: தாறுமாறாகக்கூடப் பேசினோம்.....
ஆள: காத்தமுத்துவிடம் காமராஜர், விவரம் விவரமாப் பேசப் பேச என் மனம் படாதபாடு பட்டுது, போயேன்......
தி. க: என்னிடம், நீ சொன்னது, என் மனசிலே நெருப்பை வாரிக்கொட்டினது போலாச்சி.....தி. மு. க: எனக்கு, ஆளவந்தார் சொன்னது கேட்டு ஆச்சரியம் ஏற்படவில்லை—ஏன்....எனக்குத் தெரியும், காமராஜர் எண்ணம் இப்படித்தான் இருக்கும் என்று.....
ஆள: எவ்வளவு புட்டுப்புட்டுச் சொன்னார் தெரியுமா.....இந்த காத்தமுத்து, வெளியேவந்து விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
தி. க: ஏன் சிரிக்கமாட்டான்.....நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டாரே. தன்னோட காமராஜர் என்கிற தெம்பு.
தி. மு. க: எல்லாம் நல்லதாகத்தான் முடியும்.....வருத்தப் படாதே......
தி. க: வேதனையா இருக்குதப்பா.
ஆள: ஏம்பா......ஐயாவிடம் சொன்னா, என்னா......?
தி. க: நாமா......நம்புவாரா?
தி. மு. க: சொல்லலாம், ஆனா நாமதான், அந்தப் பழக்கத்தையே வைத்துக்கொள்ளவில்லையே.
ஆள: ஆமாம், அதுவும் உண்மைதான்......
தி. க: சொன்னா, ரொம்பக் கோபிப்பாரு.....
தி. மு .க: அவரிடம் போய் இதைச் சொன்னா, தீர்ந்தது, நீங்களும் கண்ணீர்த் துளியாக வேண்டியதுதான்.
ஆள: இனிமேலேயா ஆகப்போவுது, தம்பி, இப்பவே கண்ணிலே தண்ணி தளும்புதே......