அண்ணாவின் பொன்மொழிகள்/பல்சுவை!
பல்சுவை
விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பதுபோல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது.
🞸🞸🞸
எவ்வளவு சிந்தனை எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பைப் பார்க்காமல், கேலி கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல், மூளை குழம்புமே, கண் குருடாகுமே என்று யோசிக்காமல், கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான், அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது; அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
🞸🞸🞸
விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிரைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிக்கட்டி போல, குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம் போல் விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.
🞸🞸🞸
மதிப்புற்றிருக்க வேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லதல்ல. விஞ்ஞானம் மதிப்புப் பெற மாணவர்கள் உழைக்கவேண்டும்.
🞸🞸🞸
காற்று வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறியினால் வரும் காற்றைத் தடுக்கலாம், விசிறியை வீசி எறிவதால். ஆனால் காற்று இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க எவரால் முடியும்?
🞸🞸🞸
காஞ்சியிலே உள்ள பெரிய தேரிலே ஒரு மானை அமர வைத்துத தேரைக் கவனியாதே; மானைப்பார். அதன மருளும் விழிகளைப் பார்; அதன் உடலிலே உள்ள புள்ளிகளைப் பார் காதுகளைக் கவனி; என்றால் எத்தனைபேர் காண்பார்--காணமுடியும்; இது போலத் தானே புராணங்களில், பயனைத் தேடி அலைவதும்.
🞸🞸🞸
பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்டமுடியாது. அவர்கள் தீட்டியான பிறகு கோபிப்பது வீண்கவலை,
🞸🞸🞸
இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது--கவனிப்பாரற்றுக் கிடக்கிறது எழில் மிக்க விதவையைப் போல.
🞸🞸🞸
துவக்கத்திலே, பயன் பெரிதாகவும், தரம் சிறிதாகவும் இருக்கலாம். பயன் பெருகப் பெருக தரத்தைத்தானே உயர்த்திப் பண்படுத்திட முடியுமே!
🞸🞸🞸
பாரதியின் பாட்டும் ஒரு பாட்டா? என்று எத்தனை.புலவர்கள் பரிகசித்தனர் பாரதியின் பாட்டை, ஆரம்பத்தில், ஆனால்......?
🞸🞸🞸
பயன், வெள்ளையனை விரட்டிட, மக்களிடையே வீராவேச உணர்ச்சியைத் தட்டி எழுப்பின பாரதியின் பாடல்கள், அந்தக் காலத்தில்.
🞸🞸🞸
மக்களிடையே எத்தகைய மனமாற்றமும், எண்ணத்தெளிவும், கருத்துக்களும் பரவிட--எளிதில் பரவிட, மொழி முதற் கருவியாக விளங்குகிறது.
🞸🞸🞸
மொழி வழியேதான் எத்தகைய கருத்துக்களும், பரவுகின்றன; பரப்பப்படுகின்றன, முதலில்.
🞸🞸🞸
அதிகாரத்தில் அமர்வதால் அகமகிழ்வோ அல்லது அழுக்காறோ அடைபவர்கள் அல்லர் நாம்.
🞸🞸🞸
இப்போது வேலையதிகம் எங்களுக்கு; வீணர்களாய்த் திரிவதற்கல்ல; வாய்ச்சொல் வீரர்களாய் விளங்கவுமல்ல; வன்மையுண்டு வகையான திட்டங்களை வகுத்துக் காட்ட; முயற்சியுண்டு முக்கிய இலட்சியங் களைத் தீர்த்துக்கொள்ள; கிளர்ச்சியுண்டு கடமையை நிறைவேற்ற; எழுச்சியுண்டு இனத்தைக் காப்பாற்ற!
🞸🞸🞸
நம் எதிர்கால வேலை மகத்தானது, மட்டற்றது, மடமையைப் போக்குவது கடமையைக் கடைபிடிக்கச் செய்வது.