அண்ணா சில நினைவுகள்/கேலிக்குத் துணைபோன வேதனை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
கேலிக்குத் துணைபோன வேதனை!

திராவிட மாணவர்கள் முதலாவது பயிற்சி முகாம் 1944 ஏப்ரல் 16, 17 தேதிகளில் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெறுகிறது; பெரும்பான்மையான மாணவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுமெனப் பெரியார் அழைக்கிறார் என்று அப்போது அய்யாவிடம் தனிச் செயலராயிருந்த எஸ். கஜேந்திரன் கும்பகோணம், திருச்சி, அண்ணாமலை நகர் ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று செய்தி அறிவித்தார்.

தவமணிஇராசன் தலைமையில் நாங்கள் கும்பகோணம் கல்லூரியிலிருந்து 5, 6 மாணவர் போயிருந்தோம். திடீரென்று அய்யாவுக்குக் காய்ச்சல் அதிகமாக வந்து விட்டது. அண்ணாவே முழுப்பொறுப்பேற்று, மேடையில் பேக்வது எப்படி என்றும், கழகக் கொள்கைகளை விளக்கி யும் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், இரண்டு நாட்களும், செ. தெ. நாயகம் தலைமையில்.

அந்தக் கோடை விடுமுறையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறுசிறு குழுவினராக மாணவர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும்; எங்களுக்குத் தென்னார்க்காடு மாவட்டம் கிடைத்தது!

17.4.44 அன்று ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியின் சரசுவதி ஹாலில் திராவிட இளைஞர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது அந்த சரசுவதிஹாலைப் பார்த்தேன். எவ்வளவு சிறியது! இதிலா மாநாடு நடத்தினோம் என்று வியந்தேன். ஆயினும் அது 1944-ல் அல்லவோ? பழைய கோட்டை என். அர்ச்சுனன் வரவேற்புக் குழுவின் தலைவர். தமது பெரிய பிளிமத் காரில், அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டுவந்து, மாணாக்கர்கள் சாப்பாட்டுக்காக இறக்கியது கண்டு வியந்தோம்.

மாநாட்டுக்கு அண்ணாதான் தலைவர். நெடுஞ்செழியன் திறப்பாளர். அன்பழகன் கொடி உயர்த்தினார். அவர்களைப் போலவே மாணவர்களான நாங்கள் ஆளுக்கொரு தீர்மானத்தின்மீது சொற்பொழிவு ஆற்றினோம். இரவு நீண்டநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இரண்டு நாள் பயிற்சியில் ஈடுபட்டதால், எல்லோருக்கும் கிட்டத்தட்ட உறக்கம் வந்து உலுக்குகின்ற நிலைமை.

அப்போது மேடையில் நடிகமணி டி.வி. நாராயணசாமி, பேசிக் கொண்டிருக்கிறார் உணர்ச்சி பொங்கப் பொங்க! அன்றைக்கும் அவர் பேசத் தொடங்கினால் விரைவில், முடிக்கத் தெரியாது. மேடைக்கு எதிரில் தரையில் நாங்கள், அதாவது ஈ. வெ. கி. சம்பத், திருப்பூர் எஸ். ஆர். சுப்பிரமணியம், ஈரோடு எஸ். ஆர். சந்தானம் (அவர் தான் மாநாட்டுச் செயலாளர்) ஆகிய நாங்கள் ஒரு சிறு குழுவாக அமர்ந்திருந்தோம். சம்பத், இண்ட்டர்மீடியட் படித்தாலும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலம் அது.

மேடையில் தலைமை ஏற்றிருந்த அண்ணாவை நோக்கிக் கீழே வருமாறு சம்பத் சைகை செய்தார். ‘நாராயணசாமி பேசு’ எனக் கைகாட்டி விட்டுக் கீழே இறங்கி வந்து அண்ணா எங்களிடையே அமர்ந்தார். திருப்பூர் எஸ்.ஆர். சுப்ரமணியம் நல்ல வசதிபடைத்த நம் இயக்கத் தோழர். இனிய நண்பர். ஆனால் கொஞ்சம் விவேகமில்லாத தன்மையில் சில நேரங்களில் நடந்து கொள்வார். விளக்கமாகச் சொன்னால் கிறுக்குத்தன் மாகத் தோன்றுவார், அவரது சில நடத்தைகளால்! அவர், சம்பத்தின் கையைப் பற்றிக்கொண்டு, அவருக்குக் கை ரேகை பார்க்க ஆரம்பித்தார், தெரிந்தது போல!

‘எனக்கு எத்தனை மனைவி? எத்தனை பிள்ளைகள் இருக்கும்?’ என்றெல்லாம் சம்பத் கேட்கக் கேட்க, அந்தப் பகுதியில் ஒரே சிரிப்பு: கும்மாளம்! அண்ணாவும் எங்களோடு சேர்ந்து உரக்கச் சிரிக்கிறார்!

டி. வி. என். கோபத்தின் உயர் எல்லைக்கே போய் விட்டார். மிகமிக உரத்த குரலில், “ஏன் சிரிக்கிறீர்கள்? என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன், கேட்கவேண்டாமா? இதுதான் நாகரிகமா?” என்றெல்லாம் அண்ணாவைப் பார்த்தும் கேட்கிறார்! அண்ணா அவர்களிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ள அவரே, தன் வயமிழந்து போனார். “அண்ணா, இருங்க!” என்று, எழப்போன அண்ணாவை, அப்போதும் சம்பத் தடுக்கிறார். அண்ணா, சம்பத்தின் கையை விலக்கி விட்டு, மேடையை நோக்கிப் போனார்கள். டி. வி. என் அத்தோடு உட்கார்ந்து விட்டார், சினம் ஆறாததால்!

ஒருமணி நேரம் அந்த நள்ளிரவிலும் அண்ணா சொன்மாரி பொழிந்தார்கள். எல்லாருக்கும் தூக்கம் கலைந்து போயிற்று. சம்பத்தும் அமைதியாயிருந்தார்.

ஆனால், அடிக்கடி மற்றவர்களை கேலிப்பொருளர்க்கி நகைப்பதும், அண்ணாவிடம் தனக்குள்ள செல்வாக்கினால் பொது இடங்களில், அவரையும் தன் வசப்படுத்திக் கொண்டு, பிறரை ஏளனம் செய்ய முற்படுவதும், சம்பத்துக்கு ஒரு கெட்ட பழக்கமாகவேயிருந்தது. அதனால், அவருடைய எவ்வளவோ நல்ல தன்மைகள் மறைக்கப்பட்டு, மற்றையோரின் அருவெறுப்புக்கு ஆளாக நேர்ந்தது! அண்ணாவின் பெருந்தன்மையும் துணை போனதுதான் வேதனை இதிலே!