அண்ணா சில நினைவுகள்/தம்பி, தோழராகி விட்டார்!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
தம்பி, தோழராகி விட்டார்!

ஈ.வெ.கி. சம்பத் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகிவிட்டர் என்ற பலமான வதந்தி திருச்சி மாநாட்டுக்கு முதல்நாள் பரவியிருந்தது. 1956-ல். அண்ணாவிடம் கேட்டேன். அதெல்லாம் இருக்காது என்று அலட்சியமாகச் சொன்னாலும், அண்ணாவின் உள்ளத்தில் சலனம் உண்டாகி விட்டது என்பதை முகம் காட்டியது.

ஆனால், மாநாட்டில் உரையாற்றும்போது சம்பத் “நான், அண்ணாவின் கையைப் பிடித்துக்கொண்டுதான் நடக்கக் கற்றுக் கொண்டவன். என் கையைப் பிடித்து, என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர் அவர்தான். அவர் தின்றுவிட்டு மிச்சமாகத் தந்த எச்சில் பக்கோடாவைத் தின்று வளர்ந்தவன் நான். அவரை விட்டு விலகி நான் வேறெங்கே போவேன்?” -என்ற பாங்கில் பேசினார். நம்பும்படியாகவே இருந்தது அப்போது!

டிக்கட் விற்கும் பெரிய Counter என் தலைமையில். தலைமைக் கழக சண்முகம், தேவராஜ், மாயூரம் காந்தி ஆகியோர் என் உதவிக்கு. பணம் எண்ணிக் கட்டி வைக்கது. ப. அழகமுத்து உதவி. நாவலர் புதிய பொதுச் செயலாளர்-மாநாட்டுத் தலைவர் அவர்தானே-தலைவரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், பலரும் உரை நிகழ்த்துவது எங்கள் காதில் லேசாக விழுகிறது. நாங்கள் கருமமே கண்ணானவர்கள். எழுந்து போக முடியாது; கடைசியாக அண்ணா வழிமொழிவாரே - அந்தப் பேருரையை மட்டும் எப்படியாகிலும் கேட்டுவிட வேண்டும். என்ற ஆவல் எனக்கு. இவர் எங்கள் மாவட்டத்தில் பிறந்தார், படித்தார், பெண் எடுத்தார்-என்ற ரீதியில் பலரும் நாவலரைச் சொந்தம் கொண்டாடிப் பாராட்டினர். அண்ணா பேச எழுந்ததும் சண்முகமும் நானும் பந்தலின் எல்லையில், ஒரு ஒலிபெருக்கி முன்பு நின்று, காதைத் தீட்டிக் கொண்டோம்.

“தம்பி வா. தலைமை தாங்க வா. உன் ஆணைக்கு அடங்கி நடப்பேன் வா.” -அண்ணா ‘மைக்’ முன்பு வந்தார். சொன்னார். திரும்பினார். நடந்தார். அமர்ந்தார்! நீண்டதொரு சொற்பொழிவை எதிர்பார்த்து, எதிரில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த லட்சக்கணக்கானோர் ஏமாந்தனர். எனினும், திருக்குறள் போல் உலகத்தையே தன்னுள் அடக்கிய சிறிய உரையைக் இக்ட்டோரின் கையொலி அடங்க, நெடுநேரம் ஆயிற்று.

‘என்னங்க சண்முகம்! அண்ணா பேச்சைப்பற்றி என்ன தெனக்கிறீங்க?” என்றேன். தீர்க்கமான சிந்தனையும், தெளிவான கருத்துகளும் கொண்ட சிறந்த பேனா மன்னரான இந்தச் சஆமுகத்தை அண்ணா தான் தேர்ந் தெடுத்தார். வில்லாளனை அனுப்பி, இவரைத்தாமே அழைத்துவந்து, தலைமை நிலையத்தை ஒப்படைத்தார். சண்முகத்திடம். அவர் சொன்னார்- சொல்றதுக்கு என்னங்க இருக்கு. ஆப்ரகாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரைபோல்ண்ணு சொல்லலாம். மக்களாட்சித் தத்துவத்தை இப்படிச் சுருக்கித்தர வேற யாராலும் முடியாது. இதைத் தமிழில் சொல்றதை விட, இங்கிலீஷ்ல சொல்லிப் பாருங்க. ரொம்ப உயர்வாயிருக்கும். Come on my younger brother! Come on to lead! I will obey your commands!” உலகமே, இதைக் கேட்டா, அண்ணாவின் அறிவாற்றலை உச்சிமேல் வச்சி மெச்சிக்கொள்ளும்!” என்று.

நாவலரைத் தேர்ந்தெடுத்தது சம்பத்துக்குப் பிடிக்க வில்லையோ? ஆமாம்! நான்காண்டுகளில் அது வெடித்து விட்டதே! என்னிடம் ஒருநாள் சம்பத் சொன்னார். நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போறவன். யாரும் கடைசிவரை நீடிக்க முடியாது கட்சியிலே! அவ்வளவு சுகபோகம், வசதிகள், வாய்ப்புகள் அங்கே! பார்லிமெண்ட் ஹவுசின் ரத்தினக்கம்பளத்திலே, காலடிபட்டாலே சுருண்டு விடுவான் எவனும்” என்று. அவரே இப்படிச் சுருள்வார் என்று நானே எதிர்பார்க்க வில்லை!

அண்ணர் அவரிடம் எவ்வளவு எதிர்பார்த்தார்! தர்மலிங்கமும் அவரும், இரண்டுபேர்தான் நமது பிரதிநிதிகள் என நாடாளு மன்றத்தில் வாழ்ந்தபோது, சம்பத்தைத் திருப்திப்படுத்தக் காரில் டெல்லிவரை பயணம் போனார் அண்ணா. தாம் விலகுவதற்கு முன் கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நீண்டதொரு விள்க்கக் கடிதம் அனுப்பினாரல்லவா-சம்பத், மாயூரம் கிட்டப்பா பொதுக்குழு உறுப்பின்ராகையால், அவருக்கும் அந்தக் கடிதம் ஒன்று வந்தது. அத்துடன், ஒரு துண்டுச் சீட்டில் “இந்தக் கடிதத்தை நண்பர் கருணானந்தம் அவர்களிடம் காண்பித்து, அவருடைய எண்ணத்தைத் தெரிவிக்குமாறு சொல்லுங்கள்” -எனவும் வரைந்தனுப்பி வைத்திருந்தார்.

அதை நன்கு படித்துவிட்ட நான், ஒரு பத்துப்பக்கம் உள்ள பெரிய கடிதம் எழுதினேன். அண்ணாவுக்கும். அவருக்கும் இடையே பிறந்து வளர்ந்த பாசம், நேசம். பற்று உறவு, அன்பு ஈடுபாடு இவற்றை ஒவ்வொன்றாக விளக்கி-நீங்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இந்த மாதிரி ஒரு கடிதம் எழுதியதே தவறு. எவ்வளவுதான். மனக்குறையிருப்பினும், அண்ணர்விடம் நேரில் பேசி விவாதம் செய்திட உங்களுக்கு, முழு உரிமையும், கடமையும் உண்டு-என்றெல்லாம் எழுதிச் சம்பத்துக்கு அனுப்பியதுடன், ஒரு பிரதி நகல் எடுத்து, அண்ணா அவர்களின் பார்வைக்கும் கொடுத்தனுப்பினேன். என்னுடைய இந்தக் கடிதத்தை அண்ணா அவர்கள் படித்ததும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன்.

பயனில்லாமல் போயிற்றே! ஒரு காலத்தில், பெரியாரின் வாரிசாகச், சட்டப்படித் தத்துப்பிள்ளையாக வருவார் என எதிர்பார்த்தேன். பெரியாரைப் பகைத்துக் கொண்டு, அண்ணா வெளியேறியபோது, அண்ணாவின் வாரிசாகவாவது சம்பத் நிலைத்திருப்பார் என்று நம்பினேன். அவர் தி. மு. கழகத்தில் தொடர்ந்து இருந் திருந்தால் ஆட்சிப் பொறுப்பில் சிறந்த நிர்வாகியாக விளங்கியிருப்பாரே! காமராஜர் வாழ்ந்த வரையில் அவரிடம் விசுவாசம்.அவர் பிணமாகி வீழ்வதற்குள் இந்திராகாந்தியிடம் விசுவாசம் என்று அவரது தேசியப் பற்றும் தடம் புரண்டுதான் போயிற்று!

கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை அவர் நடத்தியபோது, மாயூரத்திலிருந்து ஓடோடி வந்தேன். வழக்கமான டிக்கட் விற்கும் பணி என்னிடம் தரப்பட வில்லை. அண்ணா முன்னிலையில் சம்பத்திடம் ஏனென்று கேட்டேன். “நீங்க இப்பதானே ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க” என்றார் சம்பத், இது 31.7.1960ல். அன்றைய மாநாட்டில், “தம்பி சம்பத் சொன்னான்” என்றுதான், வழக்கப்படியே பேசினார் அண்ணா! ஆனால்... ஆனால்... ஆனால்!

அடுத்து ஆறு மாதங்களுக்குள் சடசடவென்று முன்னேறி, உண்ணாநோன்பு தொடங்கிவிட்டார் சம்பத், அண்ணா அளவிறந்த உளைச்சலுற்ற மனத்தினராய்இனிச் சம்பத்துத் தேறமாட்டான் என்று இறுதியாகப் புரிந்துகொண்டு “தோழர் சம்பத், தன் உண்ணா நோன்பைக் கைவிடுவார் என்று நம்புகிறேன்” என்று, பாஷையை மாற்றிக்கொண்டாரே!.24.2.1901ல் தன் அறிக்கையில்!

பிரிந்து சென்றபிறகு அண்ணாவும் சம்பத்தும் சந்தித்துக் கொண்டார்களோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் பார்க்கவில்லை இருவரையும் ஒரேயிடத்தில்!