உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா சில நினைவுகள்/நாயன் இசையே உலகில் சிறந்தது

விக்கிமூலம் இலிருந்து
நாயன இசையே உலகில் சிறந்தது

திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சிணாமூர்த்திக்குத் திருமணம், அண்ணா தலைமையில் கிழவடம் போக்கித் தெருவில், T. N. ராமன், லெட்சப்பா, V. நமசிவாயம் (இளம் பாடகர்) ஆகியோர் மணமகனுக்கு உறவினர்,

திருவாரூர்-சங்கீத மும்மணிகளான தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் பிறந்த ஊராயிற்றே! அதனால்தானோ என்னவோ, அன்று மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட, இசை பற்றிய விரிவுரை அதிகமாயிருந்தது அண்ணாவின் வாழ்த்துரையில்.

இசை என்றால் இசையவைப்பது. அதனால்தான் தேவார-திருவாசகம், திருப்பாவை திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள்-காலத்திலிருந்து, இராமலிங்க அடிகள் காலம்வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப்பாடல்களாகவே இயற்றித் தமது, சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசையவைத்தனர்"-என்பதாக இராக ஆலாபனை தொடங்கிய அண்ணா, பிர்காக்கள்-சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார்! இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்ற பல்லவியும், கருவிகளின் இசையில் உயர்ந்தது நாயன இசையே என்று அனுபல்லவியும் தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லை. நயனச் சரணமும் சொல்லி, நிரவல், சுரப்பிரஸ்தாரம், அரோகண அவரோகணம் எல்லாம் செய்து, முற்றாய்ப்பு வைத்தார் அண்ணா! (பாட்டுக் கச்சேரியில் அல்ல: பேச்சுக் கக்சேரியில்!)

  "நாயனக் கருவிக்கு நிகர் ஏதுமில்லை. ஒலிபெருக்கியின் உதவியில்லாமல், நாயனமும் தவிலும் இணைந்திடும் அந்தப் பேரிசையை, மைல்கணக்கான தூரத்திலிருந்தே கேட்கமுடியும். இவையிரண்டையும் கையாள்வதற்கு நன்கு ‘தம்’ (மூச்சு) பிடிக்கக் கூடிய உடல்வாகு வேண்டும். திடமான கை கால்கள் வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பொறுமையும் நிதானமும், மணிக்கணக்கில் அயராமல் உழைக்கும் தென்பும், துணிவும் வேண்டும். ஆனால், நம் நாட்டில் இசைத்துறையை இன்று நம்மிடமிருந்து கைப்பற்றி வரும் பார்ப்பனர்கள்-இந்த நாயன இசையை மட்டும் நம்மிடமிருந்து வெற்றி கொள்ள முடியவில்லை! அவர்களால் இயலாது என்பதுதான் உண்மையான காரணம்! ஆனால், உண்மையை மூடிமறைத்து, நாயனம்-நாயனம் என்றுகூட அவர்களுக்கு சொல்ல மனம் வராது; நாதஸ்வரம் அல்லது நாகஸ்வரம் என்பார்கள். நீசவாத்யம் என்று ஒதுக்கி வைத்தனர். நாயன வல்லுநர்களை மேதைகளை மேளக்காரர் என்றும் நாவிதர் என்றும், அவர்கள் தீண்டத்தகாதவர் என்றும் சாதிக் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

நமது திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது. ஆயினும், சில நாயன மேதைகள் தீய பழக்கங்களுக்கு (மது) அடிமையாகி இந்த மகோன்னதமான இசைக் கருவிகளின் மேன்மையைப் பாழாக்குவதை எண்ணி வருந்துகிறேன்.”

எதிரிலிருந்த பெருங்கூட்டத்தில் குளிக்கரை பிச்சை யப்பாபிள்ளை, திருவாரூர் வைத்தியநாதன் ராஜ ரத்தினம் சகோதரர்கள், ராஜ சந்தானம் பிள்ளை போன்ற முக்கால்வாசிப் பேர் இசை வேளாள மரபினர். கையொலியும் ஆரவாரமும் ஆமோதிப்பும் நீண்டநேரம் நீடித்தது.

இம் மணமகன் நாயனத்தைத் தொட்டதில்லை, முன்னின்று இத்திருமணத்தை நடத்தியவர், நாயனத்தைத் தொட்டார்; ஆனால் தொடரவில்லை! யார் இவர்? தங்க நாயனக்காரரான முத்துவேலரின் ஒரே மகன்; இவர் பெயர் மு. கருணாநிதி !

ஆம் நம் கலைஞர்தான்! தன் பால்ய நண்பனும் இணை பிரியாத் தோழனுமாகிய தென்னனுக்குத் திருமணம் நடத்திக் கொண்டிருந்தார்! இயக்கத் தோழர்கள் உரிமையோடு வந்து தங்கி ஆலோசனைகள் கேட்கத் திருவாரூர் கீழ வீதியிலுள்ள அந்தச் சிறிய கூரை வீட்டுக்குத் தென்னனைத் தேடி வருவார்கள், காஞ்சி கல்யாண சுந்தரமும் நானும் அந்தத் திண்ணையில் தங்கி தென்னன் வீட்டில் ‘கறிச்சோறு’ சாப்பிட்ட நாட்கள் எத்தனையோ, எத்தனையோ?

மணவிழா முடிந்து, மேடையிலிருந்து அண்ணா கம்பீரமாக இறங்கி வந்தார், நாயனத்தின் ‘சாம்பியன்’ ஆக, அண்ணா! எங்கே அண்ணா மறைத்து வைத்திருந் தீர்கள் இவ்வளவு இசை ஞானத்தை? உங்களுக்கு எப்படி இசையில் பயிற்சி ஏற்பட்டது?” என்ற எல்லாருடைய சந்தேகத்தையும் என் மூலமாக வெளிப்படுத்தினேன்.

“இதுல என்னய்யா ஆச்சரியம்? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை கச்சேரி எவ்வளவு கேட்டிருப்பேன்! அவருக்கு இணையான லயஞானம் உடைய சங்கீத வித்வான் இன்று வரை எவருமில்லே தெரியுமா? அவர் கச்சேரி எப்பவம் ஃபுல் பெஞ்ச். மிருதங்கம் கஞ்சிரா கடம் முகர் சிங் கொன்னக்கோல் டோலக் பிடில்...இப்படி! நீ அவரெப் பாத்திருக்கமுடியாது!...”

இல்லேண்ணா! அவர் சீடர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையும் அதே பாணிதானே! சித்துராரின் கச்சேரி நிறையக் கேட்டிருக்கேன். தாளம் போட்டுப் போட்டு, அவர் வலது தொடையும் உள்ளங்கையும் காய்த்துப் போயிருக்கும். 5 மணி 6 மணி நேரம் அயராமெப் பாடுவார். ஏன், இப்ப நம்ம மதுரை சோமு இவருடைய சீடர்தானே?”

“ஆமாம்! சரியாச் சொன்னே. இன்னும் நம்ம சீர்காழி கோவிந்தராஜன் இவுங்கள்ளாம்கூட அசுர சாதகம் செஞ்சி, இப்படி ஒரு நிகரில்லாத நெலமக்கி வந்தவுங்க. இவுங்களோட போட்டி போட பிராமின்ஸ் யாரும் வர முடியிறதில்லே” என்றார் அண்ணா.

இந்த அண்ணாதுரைக்குத் தெரியாத துறை ஏதாவது இருக்குமா?