அண்ணா நாற்பது/அண்ணா நாற்பது

விக்கிமூலம் இலிருந்து
அண்ணா நாற்பது
தமிழ்த்தாய் வேட்டல்
அண்ணா துரையின் அரும்பிரிவால் வாடிடும்
எண்ணிலா மாந்தர் இடர்துடைக்க-அண்ணாமேல்
பண்ணுறு நாற்பது பாடல் பகர்ந்திடத்
தண்ணருள் செய்தமிழ்த் தாய்.
அவை யடக்கம்
பொன்னார் சங்கப் பொற்புறு நூற்களாம்
இன்னா நாற்பது இனியவை நாற்பதுபோல்
அண்ணா நாற்பது ஆக்கி யுள்ளேன்
அண்ணா வைப்பிரி ஆழ்துய ரதனால்
எத்தனை வழுக்கள் இருக்குமோ
அத்தனை யும்பொறுத் தருள்புரிந் தேற்கவே!
நூல்
1.

அண்ணா அண்ணாவென் றலறியேநூ றாயிரவர்
உண்ணு வதுவறள உரக்கவழும் ஓலமதை
அண்ணா நீசெவிமடுத் தன் புரைகள் தாராயோ
அண்ணா நீகண்திறந் தருள்கனியப் பாராயோ.

2.

மெரினா கடற்கரையின் மெத்தென்ற மணலறைக்குள்
அறிஞர் அண்ணாநீ அறிவுக்கோ யில்கொண்டாய்
ஒருநாள் இருநாளோ ஒவ்வொருநாள் தொறுமங்கே
திருநாள் கொண்டாடத் திரண்டெழுமால் மக்களினம்!



3. பவம்போக்கு வோமெனும் பண்டார சந்நதியோ
அவதார புருடரோ அல்லல்ல அண்ணா நீ
அவர்தமைப்போ லில்லா அண்ணாவாய் நீயிருந்தும்
எவர்தாமும் உனைத்தொழு தேத்தினரே எதனாலே?


4. எக்காலும் கடவுள் எனஒருவர் இருந்ததிலை
மக்களுளே அறிஞரே மாறுவரவ் வாறென்றே
இக்காலம் சில்லோர் இயம்புவதை அண்ணாவால்
முக்காலும் உண்மை முடிபெனவே உணர்ந்தோமால்!


5. எத்தனை அறிஞர்கள் புலவர்கள் இந்நாட்டில் சிறந்து வாழ்ந்தார்
எத்தனை துறவியர்கள் முனிவர்கள் இந்நாட்டில் பொலிந்து வாழ்ந்தார்
எத்தனை வள்ளல்கள் மன்னர்கள் இந்நாட்டில் மிளிர்ந்து வாழ்ந்தார்
அத்தனை தரத்தினரும் அண்ணாவின் புகழெல்லை அடைந்த துண்டோ?


6. நாத்திகத்தின் பெருந்தலைவர் நம்பெரியார் ராமசாமி
ஆத்திகத்தின் அருந்தலைவர் அந்தணராம் ராஜாஜி
ஏத்துபுகழ் இருவரையும் இருகண்க ளாய்க்கொண்டாய்
நாத்திகரா ஆத்திகரா நவின்றிடுவாய் அண்ணா நீ!


7. மன்னர் குடும்பமதில் மாணப் பிறக்க வில்லை
துன்னுஞ் செல்வமிகு குடியினில் தோன்ற வில்லை
இன்னும் எவ்வாய்ப்பும் இயையப் பிறக்க வில்லை
என்ன வகையாலே இத்துணை பெருமை பெற்றாய்?


8. குறுமுனியே போலக் குழையும் குறளுருவம்
குறளதுவே மானக் குலவும் குறளுருவம்
முறுவலொளி யாண்டும் முகிழ்க்கும் அருளுருவம்
மறுவறுநற் றமிழர் மகிழும் பொருளுருவம்.

9. உருச்சிறிய அச்சாணி உருள்விக்கும் பெருந்தேரை
உருச்சிறிய ஊற்றங்கால் உண்பிக்கும் உலகோரை
உருச்சிறிய அணுப்பிளவே உண்டாக்கும் உயராற்றல்
உருக்குறிய நம்மண்ணா உயர்ந்துவிட்டார் இமயம்போல்!


10.அண்ணாவை வணங்க ஆருயிர்தந் தார்பலரால்
அண்ணாவை இறைஞ்ச அழிபசியுற் ருேர் பலரே
அண்ணாவை ஏத்த அருந்துயருற் ருேர்பலராம்
அண்ணாவின் மகிமை யாதென்றே அறிந்திலமே!


11. அரசியல் அறிஞர் என்கோ அந்தமிழ் அறிஞர் என்கோ
வரிசைசேர் ஓவி யத்தில் வரைந்திடு காவி யத்தில்
பரவுறு நாட கத்தில் பணிகளில் அறிஞர் என்கோ
விரவிய துறையில் எல்லாம் வியத்தகு அறிஞர் உண்மை!


12. எந்த உலகினில் இத்தனை தம்பியர்கள் இருப்பர் என்றேகினய்
எந்த உலகினில் இத்தனை ஆர்வலர்கள் இருப்பர் என்றுசென்றாய்
எந்த உலகினில் இத்தனை தொண்டர்கள் இருப்பர் என்றுபோனாய்
எந்த உலகினில் இத்தனை சிறப்புக்கள் எய்தலாம் என்றகன்றாய்.


13. செல்வம் நிலையாது சென்றிடும் இன்பம் என்றே
சொல்வது முற்றிலுமே சொந்தப் பட்டறி வினிலே
நல்ல தமிழர்கள் நன்ருய்க் கண்டு விட்டார்
செல்வமாம் அண்ணா சென்றே மறைந்து விட்டார்.

14. மெரினாவின் கடற்கரையில் மெல்லென்ற காற்றிடையே
ஒருநூறு சொற்பொழிவும் உளங்கவர ஆற்றியுளாய்
ஒருநூறு கோடிமக்கள் உளங்குளிரக் கேட்டுவந்தார்
மெரினாவின் மேல்வந்து மீண்டுமுரை தருவதென்றோ?


15. தமிழர் தளபதியே தளர்விலாத் தாளாளா
அமிழ்தே அருநிதியே அறிவுக் களஞ்சியமே
கமழு நற்பல்கலைக் கழகமே கதிரொளியே
இமிழ்கடல் சூழுலகில் எங்குனைக் காண்போமால்!


16. சிரித்த முகமெங்கே சிந்தனைகூர் நெஞ்செங்கே
கருத்து நயங்கொழிக்கும் கற்பனைசால் நாவெங்கே
விரித்துப் பொருள்வரையும் விரைவுமிகு கையெங்கே
கருத்தைக் கவர்ந்தீர்க்கும் கனிவுசெறி கண்ணெங்கே


17. கற்பனையின் பேரூற்றே கலைகல்விக் களஞ்சியமே கனிவு மிக்க
நற்பண்பின் கொள்கலமே நடமாடும் நூலகமே நாவில் வல்லோய்
அற்புமிகு அண்ணாவே அடக்கத்தில் ஆழ்கடலே அறிஞர் ஏறே
பொற்புமிகு அமைதியினில் பொன்மலையே புகழ்வீசிப் போய்விட் டாயே!


18. முடியுடை மூவேந்தர் முத்தமிழ்நா டாளுகையில்
படையெடுத் துவந்தார்கள் பன்னாட்டு மன்னரிங்கே
அடிமைத் தளையில்யாம் அறுநூறாண் டாயிருக்க
விடிவெள் ளியாயண்ணா விரைந்தெழுந்தாய் தமிழ்விண்ணில்,


19. தமிழகத்தில் தமிழ்மொழியே தனியாட்சி மொழியாகத் தங்கச் செய்தாய்
தமிழகம்தன் திருப்பெயராய்த் ‘தமிழ்நாடு’ எனும்பெயரே தாங்கச் செய்தாய்

தமிழகத்தில் பல்வளமும் தமிழ்க்கலைகள் பற்பலவும் தளிர்க்கச் செய்தாய்
தமிழகத்தின் பெருமையெலாம் தரையெங்கும் கால்கொண்டு தழைக்கச் செய்தாய்.


20. சாதி சமயச் சாத்திரக் குப்பைகளைச் சாடித் தீர்த்தாய்
நீதி வழுவா நெறிமுறைக் கோட்பாடு நிலவச் செய்தாய்
ஓதி யறிந்தே உயர்ந்த பகுத்தறிவை உணரச் செய்தாய்
கோதில் புரட்சி குன்றா மறுமலர்ச்சிக் கொள்கை கண்டாய்.


21. கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போய்விடவே கழகம்பல கண்டனை
புண்மூடி வையாமல் புரையோடச் செய்யாமல் புன்மைகளைக் கீறினாய்
தண்மையுறு வழியினிலே தகுபுரட்சி பலசெய்து தமிழர்தம் நெஞ்சிலே
வண்மைதரு நற்கருத்து வளங்கொழிக்க வைத்தனையே வணங்குகிறோம் அண்ணலே!


22. சிரிக்க மட்டிலுமே சிலர்பேசுவர் சிந்திக்கச் சிலர்பேசுவர்
சிரிக்க ஒருகாலும் சிந்திக்க ஒருகாலும் சிலர்பேசுவர்
சிரிக்கவும் அதேநேரம் சிந்திக்கவும் நின்பேச்சு செய்திடுமே
சிரிக்கவும் ஆழ்ந்தாழ்ந்து சிந்திக்கவும் எம்மண்ணா செய்வதென்றோ?


23. அண்ணாசொற் பொழிவென்றால் அலைகடலும் ஒய்ந்துவிடும்
அண்ணாவின் பேச்சென்றால் அழுதபிள்ளை வாய்சிரிக்கும்
அண்ணாசொல் லாற்றுங்கால் ஊசிவிழும் ஒலிகேட்கும்
அண்ணாவின் சொற்கேட்டே அயலாரும் வாய்பிளப்பர்.

24. அண்ணாவின் சொற்கேட்கின் அலிகளும்ஆண் மைபெறுவர்
அண்ணாவின் மொழிகேட்கின் அயர்நரம்பும் முறுக்கேறும்
அண்ணாவின் உரைகேட்கின் அரையுடலும் எழுந்தாடும்
அண்ணாவின் ஒலிகேட்கின் அறுத்தகட்டை யுந்துளிர்க்கும்.


25. பெருமுனிவர் வாழும் பேரடவி யதனிடையே
ஒருதுறையில் மானுடன் உறுபுலிநீர் பருகுமெனத்
திருநூலில் கற்றதைத் தெளிந்துகொண்டோம் இஞ்ஞான்றே
இருகருத்தால் முரணுவோர் இணைந்திடுவர் அண்ணாமுன்!


26. சிரிப்பினால் முப்புரத்தைச் சிவபெருமான் சுட்டெரித்தார்
சிரிப்பினால் நம்மண்ணா செந்தழலை அணைத்திடுவார்
நெருப்புப் பொறிபறக்க நிலைமாறி வந்தவரும்
சிரிப்பு முகத்தோடு சென்றிடவே செய்திடுவார்.


27. அண்ணாவைக் காணின் அங்கண் ஒளிபெறும்
அண்ணாசொல் கேட்கின் அஞ்செவி குளிருமால்
அண்ணாசீர் பேசின் அணிநா வினிக்குமால்
அண்ணாவொடு பழகின் ஆருயிர் தளிர்க்குமால்.


28. எத்தனையோ கடவுளர்கட் கிந்நாட்டில் திருவிழாக்கள் எடுத்த யர்ந்தோம்
எத்தனையோ கடவுளரை இந்நாட்டில் ஊர்வலமாய் ஏந்தி வந்தோம்
எத்தனையோ கடவுளர்கட் கிந்நாட்டில் பூசனைகள் இயற்றி யுள்ளோம்
அத்தனைநங் கடவுளரும் அண்ணாபோல் பெருங்கூட்டம் அறிந்த துண்டோ!

29. அஞ்செழுத்து மந்திரமும் ஆறெழுத்து மந்திரமும் அதன்மேல் எட்டாய்
விஞ்செழுத்து மந்திரமும் விரித்தொலிப்பார் தம்மைவிட ‘அண்ணா’ வென்றே
கொஞ்சியெழும் மூன்றெழுத்தாய்க் குலவிடுநன் மந்திரத்தைக் கூறு வோரே
மிஞ்சிடுவர் இந்நாட்டில் மிகையல்ல இக்கூற்று மிக்க உண்மை!


30. ஒருகுடும்பில் ஓரொருவர் ஒருசிலர்க்கே அண்ணாவாய் உறைவ துண்டால்
ஒருகுடும்பத் தண்ணாவும் உடன்பிறந்தா ருடன்பகைதான் உற்றுச் செற்றுத்
தெருவரைக்கும் வந்துதலை தெறிக்கப்போர் செய்வதுண்டு தேரின் நீயே
ஒருநாட்டின் அண்ணாவாய் உளங்கலந்த அண்ணாவாய் உற்ற தெங்ஙன்?


31. ஒருநல்ல உருவுடனே ஒரேஓர் அண்ணாவாய் உதித்தது போதாதுகாண்
ஒருகோடி உருவுடனே ஒருகோடி யண்ணாவாய் உதித்துமே நீயிருந்தால்
ஒருகோடி தம்பியரும் ஒருவர்க்கோர் அண்ணாவை உடன்கொண்டு சென்றிருப்பர்
ஒருஞாயி றேபோல ஒரேஓர் அண்ணாவாய் உதித்தனை என்செய்குவோம்!


32. அண்ணாவும் இறக்க வில்லை அண்ணாவைத் துறக்க வில்லை
அண்ணாவை மறைக்க வில்லை அண்ணாவை மறக்க வில்லை
அண்ணாவை இழக்க வில்லை அனல்மூட்டி அழிக்கவில்லை
அண்ணாதான் கடலோ ரத்தில் அமைதியுடன் இருக்கின் றாரே!

33 இருக்கின்றார் எங்கள் அண்ணா இளைஞர்நெஞ் சங்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இனிய தமிழ் உளங்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இயற்றியுள்ள நூற்களிலே
இருக்கின்றார் எங்கள் அண்ணா இப்பெருநா டெங்கணுமே!


34 அண்ணா நீ பிறந்த அதுதான் நல்லூராம்
அண்ணா நீவாழ்ந்த அதுவே நன்னாடாம்
அண்ணா நீ மறைந்த அஃதே நற்கோயில்
அண்ணா தொடர்புற்ற அனைத்தும் உயர்ந்தனவால்!


35 பல்லவர் தலைநக ராயமைத் தாண்டதால் பாரிற் சிறந்தது காஞ்சி
அல்லலில் கோயில் அறநிலை யங்களால் அன்பின் மிக்கது காஞ்சி
பல்வகைக் கலைகள் பரவிப் படர்ந்ததால் பண்பில் நிறைந்தது காஞ்சி
நல்லவர் அண்ணா நலனுறப் பிறந்ததால் நாட்டில் உயர்ந்தது காஞ்சி.


36 தம்பியர் உள்ளனர் தமிழ்மொழி காத்திடுவர் எனுந்தருக்கோ
தம்பியர் உள்ளனர் தமிழரினம் ஓம்பிடுவர் எனுஞ்செருக்கோ
தம்பியர் உள்ளனர் தமிழ்நாடு புரந்திடுவர் எனுங்குறிப்போ
நம்பிநீ எதனால் நானிலம்விட் டகன்றனையால் நவின்றிடுவாய்.


37 எத்தனையோ பணிகள்தமை யாரை நம்பி விட்டகன்றாய் எங்கள் அண்ணா
எத்தனையோ பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்தாய் எங்கள் அண்ணா

இத்தனைநற் கடமைகளும் யார்செய்வர் நீயின்றி எங்கள் அண்ணா
அத்தனையும் முடிவுபெற அருவுருவாய் அருள்புரிவாய் அருமை அண்ணா!


38 புற்றுநோய் பின்னே புல்லன் காலன் மெல்ல
ஒற்றிச் சென்றே உயிரை உறிஞ்சி விட்டான்
புற்றுநோய் தனையும் பொல்லாக் காலன் தனையும்
முற்றும் விரட்ட முடியா மூட ரானோம்.


39 நாடுபல சென்றிட்டு நற்றமிழின் பெருமைதனை நாட்டி வந்தாய்
பீடுபெறு பாரதநற் பெருநாடு முழுவதுமே பெருமை பெற்றாய்
நாடுகண்டு பூரிக்க நல்லமுத லமைச்சேற்று நன்மை செய்தாய்
வீடுவிட்டுக் கூடுவிட்டு வீரத்தமிழ் உள்ளங்களாம் வீடு புக்காய்.


40 அண்ணாவிட் டகன்றதனால் அரற்றுதலே வேண்டாவாம்
அண்ணாவாய் நடைமுறையில் அனைவருமே மாறிவிடின்
அண்ணாக்கள் பலகோடி ஆகிடுவர் தமிழகத்தில்
அண்ணாவின் புகழுடனே அவர் கொள்கை வாழ்ந்திடுமே!