அந்திம காலம்/அந்திம காலம் - 14

விக்கிமூலம் இலிருந்து

அவர்கள் வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. சுந்தரத்தை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு ராமா போய்விட்டார். வீட்டுக்குள் வந்த போது வீட்டில் அத்தை மட்டுமே இருந்தாள். காலையில் பரமாவோடு ஆஸ்பத்திரிக்குப் போன ஜானகியும் அன்னமும் இன்னும் திரும்பவில்லை என்று தெரிந்தது. பரமாவுக்கு என்ன முடிவு என்று தெரிந்து கொள்ள மனம் தத்தளித்தது.

காரை எடுத்துக் கொண்டு தாமாக ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குப் போகலாமா என நினைத்தார். ஆனால் அதற்கு உடல் இடம் கொடுக்காது எனத் தெரிந்தது. கால்கள் தளர்ந்திருந்தன. கால் கை தசையில் இறுக்கமான பிடிப்புகளும் வலியும் இருந்தன. இரத்த ஓட்டம் குறைந்துவிட்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் நடந்தாலே இளைத்தது. இன்று காலை நடக்க முயன்று பட்ட அவதியை நினைத்துக் கொண்டார். ஜானகியும் அன்னமும் செய்தி கொண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.

அத்தை கதவின் ஓரத்தில் அவருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்பது போல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். அவருக்கு வயிறு பசித்தது. "சாப்பாடு இருக்கா அத்தை? எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன்!" என்றார். அத்தை விரைந்து சமையலறைக்குப் போனாள்.

வயிறு பசிப்பதற்குக் காரணம் டாக்டர் ராம்லிதான். அவர் போட்டுவிட்ட ஊசிதான்.

தான் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஒருமுறை கையெழுத்தைச் சரி பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மதர் மேகி அவரிடம் கேட்ட கேள்வி பற்றியோ தங்கள் பழைய ஆசிரியர் - மாணவர் தகராறு பற்றியோ வாய் திறக்கவில்லை. அவருடைய முகம் என்றும் போல்தான் இருந்தது. கசப்போ இனிப்போ காரமோ ஒன்றும் இல்லை. சுந்தரமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.

தாமாக ஒரு ஊசியை எடுத்து ஒரு குப்பியிலிருந்து மருந்து நிரப்பி அவருடைய கையில் குத்தி விட்டார். சில மாத்திரைகளைக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்து விழுங்கச் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் பெயர் எழுதப் பட்டு தயாராக இருந்தன. அவற்றை சுந்தரத்திடம் கொடுத்தார்.

"இவற்றை எப்படிச் சாப்பிடுவதென்று லேபிலில் எழுதியிருக்கிறது. தவறாமல் சாப்பிடுங்கள். இன்றிரவு தொண்டை வீங்கிக் கரகரக்கக் கூடும். இந்த மாத்திரைகள் அதைத் தணிக்கத்தான். சாப்பிடுங்கள். அதிகம் பேசவேண்டாம். இது தூக்க மாத்திரை. தேவை ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள். நாளைக்காலை ஒன்பதரை மணிக்கு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

ஏதாவது பேசாமல் போகக் கூடாது. அது பகைமையை வளர்க்கும் என எண்ணினார் சுந்தரம். "இப்போது போட்டீர்களே, அது என்ன ஊசி?" என்று கேட்டார்.

"அது அன்றைக்குப் போட்டதைப் போலத்தான். வாந்தி குமட்டலைக் குறைத்துப் பசியைக் கொடுக்கும்!" என்றார் ராம்லி. அன்று அவர் கொடுத்த மருந்து நல்ல பலன் கொடுத்ததை சுந்தரம் நினைத்துப் பார்த்தார்.

தயங்கித் தயங்கிச் சொன்னார்: "டாக்டர், மதர் மேகி உங்களிடம் பேசியது பற்றி...!"

"ஆமாம். அது சின்ன பழைய விஷயம். அதை மறந்து விடுங்கள். நாளைக்குப் பார்ப்போம்!" என விடை கொடுத்து வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் டாக்டர் ராம்லி.

கொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. தனது சந்தேகங்களைப் போக்கிச் சுமுகத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அவருக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை எனத் தெரிந்தது. உள்ளே என்ன நினைக்கிறார் என்பது கொஞ்சமும் புரியவில்லை.

வீட்டுக்கு வரும் வழியில் ராமா கேட்டார்: "என்ன சொல்றாரு நம் ராம்லி?"

"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாரு ராமா! இந்த விஷயத்தைப் பெரிசாகவே எடுத்துக்கில. மறந்திருங்கன்னு மட்டும் சொன்னார்."

"அப்புறம் என்ன? மறந்திடு சுந்தரம்! நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் மனசில வெச்சிக்க மாட்டார்னு!"

"ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல!"

"அது முகமூடின்னு நீ நெனைக்கிற! அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா?"

சாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் ராம்லியின் முகம் நினைவுக்கு வந்தது. அது முகமா முகமூடியா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அந்த மருந்து அன்று போலவே இன்றும் விரைவான பலன் கொடுத்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் குமட்டல் முற்றாக நின்றிருந்தது. பசித்தது. சோற்றின் மேல் ஆசை வந்தது. ஆனால் பரமாவின் நினைவு வந்ததும் மீண்டும் வயிறு கொஞ்சம் கலவரம் அடைந்தது. அடக்கிக் கொண்டு சோற்றைக் கொஞ்சமாகப் பிணைந்து ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்த போது வாசல் மணி அடித்தது.

எட்டிப் பார்த்தார். ஒரு கூரியர் வேன் நின்றிருந்தது. சிப்பந்தி ஒருவர் ஒரு பெரிய கடித உரையுடன் இறங்கினார். சுந்தரம் கை கழுவி வௌியே சென்று கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் முகவரி உரையில் எழுதியிருக்க வில்லை.

கிழித்துப் பார்த்தார். ஒரு காப்புறுதிப் பத்திரம் இருந்தது. ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது.

"அப்பா, பிரேமின் மருத்துவக் காப்புறுதி அனுப்பியிருக்கிறேன். மருத்துவ மனையில் காட்டுங்கள். எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். என் கண்மணியைப் பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தில் இடம் கிடைத்ததும் வருகிறேன். ராதா"

பணத்துக்குக் குறைச்சலில்லை. இந்தத் துன்பங்களுக்கிடையே அது ஒன்றுதான் நிம்மதி. உன் நோய்களை நீ ஓய்வாக அனுபவிக்க நான் உனக்கு வேண்டிய பணம் கொடுக்கிறேன் என ஆண்டவன் சொல்கிறானா? இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா? இந்தப் பணத்தைக் கொடுத்து உயிரை வாங்க முடியுமா?

இறைவனே! உன் பெயரில் இந்த உலகில் எங்காவது பொருளகம் இருக்கிறதா? இதோ இந்தக் காப்புறுதிப் பணத்தையும் என் உயிரையும் அங்கு வைப்புத் தொகையாகக் கட்டுகிறேன். என் பேரனின் உயிரை மீட்டுக் கொடுப்பாயா?

காப்புறுதியை மேசை மீது வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார். மெதுவாகச் சாப்பிட்டார். இனிமையாக இருந்தது. அமுதமாக இருந்து. அத்தையின் சமையல் தொண்டையில் இறங்கி வயிற்றில் சுகமாகத் தங்கியது. அற்ப சுகம்தான். ஆனால் அனுபவிக்கும் போது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது?

எதுவும் சிரமத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. சாப்பிடாமல் வாடிக் கிடந்த பின் சாப்பாட்டின் அருமை தெரிகிறது. நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பின்னர்தான் நடையின் அருமையும் காலின் அருமையும் தெரிகின்றன. இவற்றின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தண்டனைகளா? வௌிச்சத்தின் அருமை தெரியாத அறிவிலியே, கொஞ்ச நாள் இருட்டறையில் இருந்து தண்டனை அனுபவி. அதன் பின் சாதாரண வௌிச்சமே உனக்கு அபூர்வமாகத் தெரியும். அதை உனக்குக் காட்டுகிறேன் என இறைவன் விதித்திருக்கிறானா?

"இவற்றையெல்லாம் தண்டனை என நினைக்க வேண்டாம். சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள்!" என்ற மதர் மேகியின் சொற்கள் நினைவுக்கு வந்தன.

சரி, நான் இதைச் சோதனை என்று எடுத்துக் கொள்கிறேன். பரமாவுக்கும் இது சோதனையா? இந்தப் பச்சிளம் வயதிலா? இது சோதனை என அவனுக்குத் தெரியுமா? இந்தச் சோதனைக்குப் பின் வாழ்க்கையைப் புதிதாகப் பார்த்து அதன் அருமைகளைப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறானா?

இந்தச் சோதனைகள் இல்லாமலேயே வாழ்க்கை அவனுக்குப் புதிதாகத்தானே இருக்கிறது? தைப்பிங் ஏரிப் பூங்காவில் அவன் தட்டாம் பூச்சி பிடிக்க முயன்றதை நினைத்துப் பார்த்தார். புல்லையும் சிறு காட்டுப் பூக்களையும் சிறு கைகளால் பிய்த்து உற்றுச் சோதித்ததையும் நினைத்துப் பார்த்தார். திருக்குறளை மழலையில் சொல்லிச் சிரித்ததை நினைத்ததார்.

எல்லாமே அவனுக்குப் புதியவைதானே! இப்போதுதானே முதலில் தெரிந்து கொள்கிறான். அன்பையும் பரிவையும் தெரிந்து கொள்கிறான். தன் தகப்பனிடமிருந்து வன்முறையையும் தெரிந்து கொள்ளுகிறான். தன் தாயின் அன்பு இருந்தாலும் அவளுக்கு அந்த அன்பைவிட ஏதோ இன்னொரு ஈர்ப்பு இன்னொரு இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான். தெரிந்து கொண்டு இதன் அர்த்தங்கள் புரியாமல் திணறுகிறான். இப்படி அவன் பாதி கற்றுக் கொள்ளும் வேளையிலேயை தெய்வங்கள் சோதனை வைக்க வேண்டுமா?

"ஏ சுந்தரம்! மடையனே! 57 வயதில் நீ வாழ்க்கையைப் பற்றி என்னதான் கற்றுக் கொண்டாய்?" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. "ஏ பரமா என்னும் பையனே! மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய்?" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது? மதர் மேகி! இதற்கு என்ன பதில்?

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் வீட்டுக்கு முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அன்னம் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள். அவர் போய் அவசரமாகக் கை கழுவி துடைத்து வந்தார்.

ஜானகி பரமாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறானா மயக்கத்தில் இருக்கிறானோ என அவருக்குத் தெரியவில்லை. அவனுக்குப் போர்வை போட்டு சுத்தியிருந்தார்கள். அவர்கள் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார் சுந்தரம். "என்ன ஆச்சு அக்கா? ஏன் இவ்வளவு நேரம்?" என்றார்.

"ரெண்டு மூணு டாக்டர்கள் கூடிக் கூடிப் பேசி முடிவு சொல்லி எல்லாம் செட்டில் பண்ண இவ்வளவு நேரமாச்சி தம்பி. இப்பத்தான் விட்டாங்க" என்றாள் ஜானகி.

"என்ன சொல்றாங்க அக்கா?"

"நாம மிந்தி நெனச்சத விட மோசமாகத்தான் இருக்கு. அக்யூட் லியூகேமியான்னு உறுதிப் படுத்திட்டாங்க. பல உறுப்புக்களுக்குப் பரவியிருக்காம். ரத்த சோகை ரொம்ப அதிகமா இருக்காம். மொதல்ல 'போன் மேரோ' (எலும்புச் சோறு) மாற்று அறுவை பண்ணனும்னாங்க. பிள்ளைக்கு சகோதரர்கள் இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைன்னேன். அப்பா அம்மா வரமுடியுமான்னு கேட்டாங்க. இல்ல, தாத்தா பாட்டிதான் இருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் வேண்டான்னுட்டு ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியுந்தான் ஆரம்பிச்சிருக்காங்க."

தான் பட்ட பாடு அனைத்தும் அவனும் படப் போகிறான் என நினைத்து அவர் உள்ளம் சோர்ந்தது. ஜானகி அவனைக் கொண்டு உள்ளே படுக்கையில் கிடத்தினாள். அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.

"சிகிச்சை ஆரம்பிச்சாட்டங்களா அக்கா?"

"ஆரம்பிச்சிட்டாங்க. சில மருந்துகள் குடுத்திருக்காங்க. உடனே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா இன்னக்கி ராத்திரி இவனோட அப்பன் வரப்போற கதையைச் சொல்லி கூட்டி வந்திட்டோம். ஆனா முடிஞ்சா இன்னக்கி ராத்திரியே அட்மிட் பண்றது நல்லது தம்பி! அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க!"

ராதா காப்புறுதிப் பத்திரம் அனுப்பியிருப்பதைச் சொல்லி பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லை எனச் சொன்னார்.

"ரொம்ப துவண்டு போயிட்டான் தம்பி. டாக்டர் சொக்கலிங்கம்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து எங்கிட்ட பேசினாரு. புற்று நோய் செல்கள் ரொம்ப வளந்திருக்கு. பல உறுப்புக்கள பாதிச்சிருக்கு. இதக் கட்டுப் படுத்தலன்னா ஒரு மாசம் கூட பிள்ள தாங்கமாட்டான்னு சொல்றாரு!"

அறைக்குள் சென்று அவனைப் பார்த்தார். தன் வேதனைகளை மறந்து அவன் தூக்கத்தில் இருந்தான். ஜானகி அவன் தலையணையைச் சரி செய்து அவனுக்குப் போத்திவிட்டு போர்வையின் விளிம்புகளை உள்ளே சொருகி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

"உங்களுக்கு உடம்பு பத்தி என்ன சொன்னாங்க?" என்று கேட்டாள். அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.

இந்த வீட்டில் நல்ல சேதிக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியாதா ஜானகி என்பது போல் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு "முன்னேற்றம் ஒண்ணும் இல்ல! புது சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க! பாக்கலாம்!" எனப் பெரு மூச்சு விட்டார்.

வாடிப் போன பூவைப்போல் கிடக்கும் அவனை மீண்டும் பார்த்தார். தனக்கும் பரமாவுக்கும் இப்போது ஒரு பந்தயம் நடக்கிறது. யார் முதலில் போவது? பரமா! சாவுக்கு என்னோடு போட்டி போடாதே! தாத்தா முதலில் போகும் வரை காத்திரு! இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய்! நான் போய் நீயும் வந்து சேர, நாம் அங்கே உட்கார்ந்து தமிழ்ப் படிக்கலாம். கண்ணீர் துளிர்த்தது. எழுந்து வௌியே வந்தார்.

டாக்டர் ராம்லியின் மருந்துகள் சில அமிலங்களை அடக்கி வைத்திருந்தாலும் பரமா பற்றிய இந்தச் செய்திகள் வேறு அமில ஊற்றுக்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். வயிற்றில் ஒரு புரட்டலும் வலியும் தோன்றின. நெஞ்சு குமட்டியது.

இன்று இரவு சிவமணியும் அவன் தாயாரும் வரப் போகிறார்கள் என்ற நினைவு வந்தது. இன்றிரவு மீண்டும் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது. தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.


      • *** ***

ஆறு மணி முதலே காத்திருந்தார்கள். சிவமணியும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தவுடன் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கு அழைத்துச் சென்று அவன் தகப்பன் மூலமாகவே பரமாவை அங்கு சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.

அப்படி சிவமணி ஒத்துக் கொண்டால் அன்றைக்கு இரவு அன்னம் மருத்துவ மனையில் பரமாவுக்குத் துணையாகத் தங்கியிருப்பதாக ஏற்பாடு. ஆகவே தனக்கு மாற்றுத் துணிகளையும் இரவில் குடிக்க மைலோவைக் கலந்து பிளாஸ்கிலும் எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள் அன்னம். பரமாவின் துணிகள் ஒரு தனிப் பையில் இருந்தன.

"ஒத்துக்குவானா தம்பி, உன் மருமகன்? இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா?" என்று கேட்டாள் அன்னம்.

"பார்ப்போங்கா! அப்படி இழுத்திட்டுப் போனாலும் நாம் தடுக்க முடியாது. அவன் பிள்ள, அவன் இஷ்டம்! நாம் என்ன பண்ண முடியும்?" என்றார். பரமா படுத்திருந்த அறையை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தார்.

ஏழு மணிக்குத்தான் தன் கார் டெலிபோனிலிருந்து அழைத்தான். "பிரேம் தயாரா இருக்கானா?" என்று கேட்டான்.

"சிவமணி! இதக் கேளு, பரமாவுக்கு உடம்பு சரியில்ல... ஆஸ்பத்திரியில..."

"ஷட் அப்" அவனுடைய பதில் ஒரு கிளவ்ஸ் அணிந்த குத்துச் சண்டைக்காரனின் பலத்துடன் அவர் முகத்தில் குத்தியது. "இந்த சாக்குப் போக்கெல்லாம் தேவையில்ல. அவனுடைய துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க. நானும் அம்மாவும் அங்க வந்து எறங்குவோம். அவன என் காடியில ஏத்துவோம். உடனே திரும்பிடுவோம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட உங்க வீட்டில தங்க மாட்டோம்."

"கேளுப்பா..."

"நான் பினேங் பாலத்துப் பக்கம் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவேன்." போனைத் துண்டித்தான்.

நாயைக் கட்டி வைத்து முன் கேட்டைத் தயாராய் திறந்து வைத்து அரை மணி நேரம் நெருப்புத் தணலில் இருந்தார்கள்.

ஏழரை மணிக்கு அவனுடைய ராட்சசப் பாஜேரோ ஜீப் வண்டி தீப்பந்தங்கள் போன்ற தன் முன் விளக்குகள் எரிய அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. கட்டி வைத்திருந்த நாயின் இடைவிடாத குரைப்புப் பின்னணியில் சிவமணி இறங்கினான். அவன் தாயார் - மிக அபூர்வமாகத் தான் பார்த்துள்ள சம்பந்தியம்மாள் - ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தாள்.

கதவருகில் வந்து நின்றதும் அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: "எங்க பிரேம்? கொண்டாங்க வௌிய, நான் போகணும்!" என்றான். முகத்தில் கடுமைதான் இருந்தது.

"வா சிவமணி. உள்ளுக்கு வா. உன் மகன்தான, நீ நல்லா அழைச்சிட்டுப் போலாம். ஆனா உள்ளுக்கு வந்து நாங்க சொல்றதக் கேட்டுட்டு அழச்சிட்டுப் போ!" என்றார்.

"தேவையில்ல! அதையும் இதயும் சொல்லி அவன வச்சிக்கப் பாப்பிங்க! நான் இப்படியே போறதுதான் நல்லது!" என்றான்.

"சரி. சந்தோஷம். எப்படியிருந்தாலும் உன்மகன் நடக்கிற நிலமையில இல்ல. நீ உள்ள வந்து அவனப் பாத்திட்டு படுக்கையிலேருந்து தூக்கிட்டுப் போ!" என்றார்.

அவன் திரும்பித் தன் தாயைப் பார்த்தான். "அம்மா! நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா!" என்றான்.

சம்பந்தியம்மாள் காரைவிட்டு இறங்கினாள். அவள் முகத்திலும் அனல் பறந்தது. அவள் உள்ளே நுழைய அவர் வடூவிட்டார். அன்னம் அவளைப் பரமா படுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள். சிவமணி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டருகில் இருளான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.

ஜானகி பரமாவின் பக்கத்தில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். சம்பந்தியம்மாள் பரமாவைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அவன் உடம்பு அப்போது கொதிக்க ஆரம்பித்திருந்தது. அவனைத் தொட்டுப் பார்த்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.

"அவன் உடம்புக்கு என்ன?" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டாள்.

அன்னம் அந்த அம்மாளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். "இப்பவாவது அந்தக் கேள்வியக் கேக்க மனசு வந்திச்சே உங்களுக்கு! கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான்!" என்றாள்.

சம்பந்தியம்மாள் மருண்டு போய் பிள்ளையையும் அன்னத்தையும் ஜானகியையும் மாறி மாறிப் பார்த்தாள். "ஏன் இத மிந்தியே சொல்லல?" என்று கேட்டாள்.

சுந்தரம் அறை வாசலில் நின்று பதில் சொன்னார். "நீங்க சொல்ல விட்டாதான சொல்றதுக்கு? எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி!" என்றார்.

"கேன்சரா?" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள்.

"கேன்சர்தான். அக்யூட் லியுகேமியா."

"உண்மையாவா?"

"டாக்டர் சொன்னாதான் நம்புவிங்கன்னா, அங்கேயே போய் கேட்டுக்கலாம். அங்க போகத்தான் நாங்களும் தயாரா இருக்கோம்!"

சம்பந்தியம்மாள் வௌியே போய் சிவமணியைத் தனியாகக் கொண்டு போய் அவன் காதில் குசுகுசுத்தாள். அவன் அவர் பக்கம் குரூரமாகப் பார்த்தான். பின் சத்தமாகச் சொன்னான். "எல்லாம் பொய்ம்மா! பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா! நீ போய் தூக்கிட்டு வா! அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ! இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா! நாம் போவோம்!" என்றான்.

சம்பந்தியம்மாள் தயங்கித் தயங்கி மீண்டும் உள்ளே வந்தாள். அன்னத்தைப் பார்த்தாள். "நெசந்தானா நீங்க சொல்றது? இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா?" என்று கேட்டாள்.

"நம்புறது நம்பாதது உங்களப் பொறுத்தது. நாங்க என்ன செய்ய முடியும்? உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி! பரவாயில்ல! அள்ளித் தூக்கிட்டுப் போங்க! வடூயிலேயே செத்துப் போனா நீங்களே ஏற்பாடு பண்ணிப் பொதைச்சிடுங்க!" என்று கூறிவிட்டு அன்னம் அழுதாள்.

சம்பந்தியம்மாள் மீண்டும் மகனிடம் போய் குசுகுசுத்தாள். அவன் "பொய் சொல்றாங்கம்மா" என்று திருப்பித் திருப்பிச் சொன்னது காதில் விழுந்தது. அந்த அரை இருட்டுப் பகுதியில் அவன் கையில் சிகிரெட் முனை எரிந்தது மினுமினுப்பாகத் தெரிந்தது. அவன் கை வீச்சில் அது அங்குமிங்குமாக அலைந்தது.

சம்பந்தியம்மாள் கொஞ்சம் கோபமாகப் பேசியது அவர்கள் காதில் விழுந்தது. "சீக்குப் பிள்ளய நான் வச்சிப் பாக்க முடியாது. நீ வேற யாரையாவது வச்சிப் பாத்துக்க. என்னால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைய முடியாது. நீயே போய் தூக்கிக்க! நீயே ஆள் வச்சிப் பாத்துக்க!" என்றாள்.

"என்னம்மா இவ்வளவு தூரம் வந்து இப்படிச் சொல்ற!" என்றான்.

"அப்பிடித்தான். நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு!" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன்? சுந்தரம் உள்ளுக்குள் கொதித்தார். ஆனால் அடங்கியிருந்தார்.

சிவமணி கொஞ்ச நேரம் குழம்பியிருந்தான். அங்குமிங்கும் அலைந்தான். பின்னர் சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான். ஜிம்மி மீண்டும் சங்கிலியில் திமிறிக் கொண்டு அவனைப் பார்த்துக் குலைத்தது.

படுக்கையருகில் வந்து பரமாவைப் பார்த்தவாறு நின்றான். அவன் வாயிலிருந்து அந்த அறைக்குள் சிகிரெட்டின் நாற்றம் பரவியது. ஜானகி எழுந்து தள்ளி நின்றாள். படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பரமாவின் நெஞ்சில் போர்வையின் மேல் கைவைத்து இலேசாக உலுக்கினான்.

"பிரேம்! லுக் போய்! லுக், டேடி இஸ் ஹியர்" என்றான்.

பிரேம் கண்களை மெதுவாகத் திறந்தான். சிவமணியைப் பலவீனமாகப் பார்த்தான். "டேடி, ஐ எம் சிக்!" என்றான். மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

ஜானகியைப் பார்த்து முறைத்தான் சிவமணி. "காய்ச்சல்தான அடிக்குது. கேன்சர்னு ஏன் பெரிய பொய்யச் சொல்றீங்க?" என்றான்.

"தூக்கிட்டுப் போப்பா! உனக்கு ஏன் நாங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்? கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க!" என்று சீறினாள் ஜானகி.

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மகனைப் பார்த்தவாறு இருந்தான். வாசல் பக்கம் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்தான். "எப்ப உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டான். அவன் கோபத்தின் சுருதிகள் குறைந்திருந்தன.

"ரெண்டு வாரமா சோதனைகள் நடந்தது. போன வாரம் உத்தேசமாத் தெரியும். இன்றைக்குத்தான் நிச்சயமா சொன்னாங்க! ஸ்பெஷலிஸ்ட் சென்டர்ல சேக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு உனக்காகக் காத்திருக்கோம். அவ்வளவுதான்" என்றார் சுந்தரம்.

தலையைக் குனிந்து கொண்டான். யோசித்தவாறு இருந்தான். பின் தலை தூக்கிக் கேட்டான். "அவளுக்குத் தெரியுமா?"

"எவளுக்கு?"

"உங்க மகளுக்கு!" என்றான்.

அவள் பெயரைக் கூடச் சொல்ல அவனுக்கு நா வரவில்லையே எனக் கோபப் பட்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். "தெரியும்"

"அப்ப அவனப் பார்க்க வர்ராளா? எப்ப வர்ரா?"

யோசித்துச் சொன்னார். "அது எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உனக்குச் சொல்றதா இல்ல. பிள்ளை பேர்ல எடுத்த ஆஸ்பத்திரி இன்சூரன்ஸ் பத்திரம் மட்டும் அனுப்பியிருக்கு. இன்னைக்குத்தான் கூரியர்ல வந்தது" என்றார்.

தலை குனிந்தவாறு இருந்தான். அப்புறம் விருட்டென்று எழுந்து வௌியில் போனான். முன்பு சிகிரெட் பிடித்துக் கொண்டு நின்ற அதே இருளில் இன்னொரு சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். புகைத்தவாறு இருந்தான்.

அவன் தாய் வரவேற்பரையில் ஒரு நாற்காலியின் விளிம்பில் குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். இங்கு வந்து மகனோடு சேர்ந்து அடாவடித் தனம் செய்து அனைவரையும் அவமானப் படுத்திவிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டு போகவேண்டும் என்று அவள் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறாத ஏமாற்றமும் எரிச்சலும் முகத்தில் தெரிந்தன.

சுந்தரம் இன்னொரு நாற்காலியில் வயிற்றைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தார். இது மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற நாடகத்தின் இந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராமல் தான் எழுந்து போவது நன்றாக இருக்காது என உட்கார்ந்திருந்தார். தலை விண் விண் எனத் தெறித்தது. கால் கை தசைகளை வலி பிசைந்து கொண்டிருந்தது. வயிற்றுத் தசைகளிலும் வலி தோன்றியிருந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களில் சிகிரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான் சிவமணி. சுந்தரத்தின் முன் நின்றான். "சரி வாங்க! அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம்! நானும் டாக்டர்கிட்ட பேசணும்" என்றான்.

அந்த முடிவு கிடைத்ததற்கப்புறம் வீடு பரபரத்தது. சாமான்கள் அடுக்கப்பட்டன. காரில் ஏறின.

சுந்தரம் தன் அறைக்குப் போய் மருந்துகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டார். ஜானகி கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.

"ஏங்க! நீங்களுமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? உங்களுக்கு தலையும் வயிறும் வலிக்குதுன்னு பாத்தாலே தெரியுது. நீங்க மாத்திரை சாப்பிட்டு வீட்ல இருங்க. நானும் அக்காவும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோமே!" என்றாள்.

"இல்ல ஜானகி. இவ்வளவு நடக்கும்போது நான் ஒண்டியா வீட்ல உக்காந்திருக்க முடியாது. நானும் வாரேன். வலி இருக்கத்தான் செய்யிது. ஆனா எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா பழகிக்கிட்டு வருது! சமாளிச்சிக்கலாம் வா!" என்று புறப்பட்டார்.

உடல் வலி மட்டும் அல்ல. மன வலிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டுதான் வருகிறது. சமாளிக்க முடிகிறது. ஆனால் அணைகள் உடைகின்ற தருணம் ஒன்று இருக்கத்தானே வேண்டும், அது எப்போதோ என்று எண்ணியவாறு அன்னத்தின் காரில் ஏறி உட்கார்ந்தார்.

அன்னத்தின் சிறிய கஞ்சில் கார் வழிகாட்ட பாஜேரோ ஒரு புலி போலப் பின்னால் வந்து கொண்டிருந்தது.