அன்பூ வாசம்
அன்பூ வாசம்
மேலாண்மை. பொன்னுச்சாமி
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை — 600 017.
- முதற் பதிப்பு : டிசம்பர், 2002
- விலை : ரூ. 40–00
Title ANPOO VAASAM Author Melanmai. Ponnusamy Subject Short Stories Language Tamil Edition First Edition, December - 2002 Pages xii + 156 = 168 Publication Gangai Puthaka Nilayam
13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai - 600 017.Price Rs. 40-00
- ஒளி அச்சு : நேரு அச்சகம், இராயப்பேட்டை, சென்னை-14.
- Printed at : PS. SP. Meyappan & Co., Chennai-17. ✆ 2814 1093
- சமர்ப்பணம்
மதச்சார்பின்மைப் பண்பு கொண்ட
பாரத தேசத்தில்
நிகழ்கிற மதக் கலவரங்களில்
உதிர்கிற மனிதப் பூக்களுக்காக
மதபேதமில்லாமல்
மனம் பதறிப் பதைக்கிற
சகல இந்தியப் பற்றாளர்களுக்கும்...
முன்னுரை
“பரண் ஏறுவது என்றால் தவ்வித் தவ்வி ஏறலாம். ஏணி போட்டு ஏறலாம். ஒரு நீண்ட கம்பை தரையில் ஊன்றி, ஒரே எம்பாக எம்பிப் பாய்ந்தும் ஏறலாம். இறைவனை அடைவதுதான் முக்கியம். இஸ்லாமிய மார்க்கம், கிறிஸ்தவ மார்க்கம், இந்து மார்க்கம் எதன் மூலமும் அடையலாம்” என்று கூறிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்து வாழ்ந்து அருள் பாலித்த அன்புதேசம், நம் தேசம். பரந்த நெஞ்சும் படர்ந்த அன்பும் சொந்தமாகக் கொண்ட தேசம்.
‘மிலேச்சர்கள், மாட்டுக்கறி தின்கிறவர்கள்’ என்று சனாதனவாதிகள் அருவெருத்து அசூயை செய்யப்பட்ட அமெரிக்க தேசமக்கள் மத்தியில் அருவெருப்பில்லாமல் - அசூயைப்படாமல் அன்பான புன்னகையோடு போய்... பாரம்பர்ய வலிமைமிகு இந்திய ஞானத்தைப் பிரசாரம் செய்தவர், பெருமைமிகு வீரத்துறவி விவேகானந்தர். இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்ற மதபேதம் பார்க்காமல் சகல மக்களையும் சகோதரர்களாக பாவித்த மகான், விவேகானந்தர். அவர் வாழ்ந்த தேசம் பாரததேசம்.
அன்பால் மனித உள்ளங்களை நிரப்பவும், உணவால் சகல உயிர்களின் வயிறுகளை நிரப்பவும் அணையா ஜோதியை ஆண்டவனாகவும், அணையாத அடுப்பை செயலாகவும் சிந்தித்த வள்ளலார் சுவாமிகள் அரும்பி மலர்ந்த இந்திய தேசம்.
‘தாழக் கிடப்போரைத் தாங்கிப் பிடிப்பதே தர்மம்’ என்று அகிலத்திரட்டு பாடிய ஸ்ரீ வைகுண்டநாதர் சுவாமிகள் அவதரித்த தேசம்.
அருந்ததிச் சிறுவனை வளர்ப்பு மகனாக்கிக்கொண்ட வ.உ.சி. வாழ்ந்த தேசம். ‘சகல ஜாதியினரும் சாமியின் முன் சமமே’ என்று சகலரையும் ஆலயப் பிரவேசம் செய்ய அரும்பாடு பட்ட வைத்தியநாத அய்யர் வாழ்ந்த தேசம்.
மகாகவி பாரதி, ஈ.வே.ரா, ஜீவா, காமராசர், மகாத்மா காந்தி எல்லோரும் அன்பால் இயங்கியவர்கள். அன்பை விதைத்தவர்கள். சகல இந்தியரும் சகோதரர்களாகக் கை கோர்த்தால்தான் பாரத பூமி சுதந்திர பூமியாகும் என்ற லட்சியம் கொண்டவர்கள்.
தேசப்பற்றின் லட்சணமாக மதச்சார்பின்மை ஒளிர்ந்தது. மனிதநேயத்தின் முகமே மத நல்லிணக்கமாகத் திகழ்ந்தது.
இப்படிப்பட்ட மகான்களும், யோகிகளும், மனிதப் புனிதர்களும், தேசப்பிதாக்களும் தோன்றி அன்பை விளைவித்த இந்திய தேசத்தில், ‘மதக்கலவரங்கள்’ என்பது எத்தகைய ஆபாசம்? காந்தி மகான் அவதரித்த குஜராத்திலேயே நிலநடுக்க சோகத்தை மறக்கடிக்கக்கூடிய மதக்கலவரங்களும், மனித உயிர் மரணங்களும் என்பது எத்தகைய வரலாற்று முரண்?
அல்லிக்கொடிக்கு விதை போட்டால், அரளிச் செடிகள் முளைக்குமா? அன்பை விதைத்த தேசத்தில் பகை முட்செடிகள் முளைத்திருக்கின்றனவே!
இந்திய நதிகளின் இணைப்பில்தான் எதிர்கால சுபிட்சம் ஒளிந்திருக்கிறது. இந்திய மனிதர்களின் இதயங்களே அன்பால் இணைய முடியாமலிருக்கிற பயங்கரத்தில் இந்தியாவின் நிகழ்காலமே நரகமாகிறதே...
மதத்தால் பகைத்தீ வளர்ந்து, எழுகிற புகைமூட்டத்தில் தேசத்தின் மூச்சே திணறுகிறதே...
கனிந்த மனசின் உயர் பண்புதானே பக்தியும், மதமும்? மனசுகளைப் பிளந்து, குரோதச் சிறுமைகளைப் பெருகச் செய்கின்றனவே... அது மதமா? பக்தியா?
இந்திய மனிதர்களின் இதயங்களை மதத்தால் துண்டாடி, பகைத்தீ வளர்த்தால்... இந்தியாவின் ஒற்றுமை என்னாகும்? பாரம்பர்யப் பெருமைகள் என்னாகும்? அன்புத் தேசமே இந்திய தேசம் என்கிற புகழ்மிக்க மரபு என்னாகும்? மானுடப் பண்பு என்னாகும்?
மதப்பற்று என்ற நியாயம், மதவெறி என்கிற அநியாய நெருப்பாக பற்றிப் படர்கிற அபாயத்தில்... தேசப்பற்று என்கிற உயர்பண்பு முக்கியமற்று மங்கி மறைந்துவிடுகிறதே... இது நியாயமா? நாட்டுக்கு நல்லதா? எதிர்கால இந்தியா என்னாகும்?
மனித நேயமுள்ள தேசப்பற்றாளர்கள் அனைவரும் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். பதில் சொல்ல வேண்டும். தேசமும், மானுடமும் காப்பாற்றப்பட வேண்டும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளலார் போன்ற மகான்களின் ஞான வெளிச்சத்தில் இன்றைய பக்திமான்கள் அனைவரும் கருணை மனத்தினராகக் கனிய வேண்டும். சமய பேதமற்று சகோதரர்களாக சகலரையும் தழுவுகிற பரந்த இதயம் பெற வேண்டும்.
கொஞ்ச நஞ்சமாக மனமூலைகளில் பம்மிப் பதுங்கிக் கிடக்கும் மதக் குரோதம் என்கிற மூட்டைப் பூச்சியை நசுக்க வேண்டும். ஞான வெளிச்சம் அன்பொளியாக வேண்டும்.
இன்றைய இந்தியத் தமிழனின் பயணமும், மனமும் இவ்வாறே இருக்க வேண்டும்.
இந்தக் கனவுகளைச் சுமந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் அதிகம். ‘அன்பூவாசம்’ என்ற சிறுகதையே அதுதான். ‘கலவரமற்ற சமாதான தேசமாக இந்தியா மாற வேண்டும்’ என்ற பெருங்கனவை ஏந்தி நிற்கிறது, அந்தச் சிறுகதை.பாரதத் தாய், பூமனசுகள், பாச நெருப்பூ போன்ற சிறுகதைகளும் அத்தகைய தன்மை வாய்ந்தவையே.
அன்புதான் பிரபஞ்சத்தை பேரழகு மிக்கதாக்குகிறது. உலகத்தை சொர்க்கமாக்குகிறது. பகையும், வெறுப்பும், சுயநலப் பேராசையும் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கி, காற்றை அசுத்தமாக்கி, நீரை மாசாக்கி, பிரபஞ்சத்தையே நரகமாக்குகிறது.
அன்பு வற்றிப்போகிற பயங்கரத்தில் தான், வளர்த்து ஆளாக்கி வயதாகிப்போன அப்பாக்களும், ஆச்சிகளும் அனாதைப் பிச்சைக்காரர்களாகிப் போகிறார்கள்.
மனைவியின் கனவுகளைக் கருக்கிவிட்டு, ஒயின் ஷாப்புகளில் வாழ்வை அடகு வைக்கிற பரிதாபமும், அன்பு வற்றிப் போனதின் விளைவுதாம்.
ஆமாம்... அன்பில்லாத பாலைப் பயங்கரத்தையும் அன்புச்சுனை அரிய குளிர்மையையும் ஒரு சேர உணர்த்துகிற பன்முகச் சிறுகதைகளின் அணிவகுப்பாக இந்த ‘அன்பூவாசம்’ தொகுப்பு.
‘அன்பூவாசம்’ ஆனந்தவிகடனில் ஓவியக்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை. அது மட்டுமல்ல... இன்னும் சில சிறுகதைகள் ஆனந்தவிகடனில் ‘முத்திரைச் சிறுகதைகள்’ என்ற பெருமையைப் பெற்றிருந்தன.இத்தொகுப்பு, இக்காலத்தின் குரலாக உங்களிடம் வருகிறது.
இத்தொகுப்பை அழகாக அச்சிட்டு வெளியிட்டிருக்கிற கங்கை புத்தக நிலைய உரிமையாளர் திரு. ராமு அவர்களுக்கும், அட்டை ஓவியம் அமைத்துத் தந்த திரு. ஷ்யாம் அவர்களுக்கும், சிறுகதைகளைப் பாதுகாத்து, வரிசைப்படுத்தித் தந்த என் மகள் வைகறைச் செல்விக்கும், எனது ஆணிவேராகவும், ஆதார பலமாகவும் இருந்து வருகிற என் தம்பி கரிகாலனுக்கும் அன்பான வணக்கங்கள் என்றென்றுக்கும்...
இனி... நீங்களும், ‘அன்பூவாசமு’மாக...
வாசித்து முடித்துவிட்டு மௌனமாகிவிட வேண்டாம். அஞ்சல் வழியாகப் பேசுங்கள். நல்லதைப் பாராட்டுங்கள். தவறைச் சுட்டிக் காட்டுங்கள்.
பாராட்டு என்னை ஊக்கப்படுத்தும். சுட்டிக்காட்டல் செதுக்கி கூர்மைப்படுத்தும். இரண்டுமே இலக்கியத்துக்கு உரமாகும். நன்றி!
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
மேலாண் மறைநாடு
626127
இராஜபாளையம் வழி,
விருதுநகர் மாவட்டம்
04562/271233
ஆசிரியரின் பிற நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்மானுடம் வெல்லும்
சிபிகள்
பூக்காத மாலை
(அனந்தாச்சாரியார் அறக்கட்டளை விருது)
மானுடப் பிரவாகம்
பூச்சுமை
(லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது)
கணக்கு
தாய்மதி
உயிர் காற்று...
(பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது)
விரல்
காகிதம்
என் கனா
ராசாத்தி மனப் பூ
(தமிழக அரசின் மாநில விருது)
ஒரு மாலை பூத்து வரும்
(தமிழக அரசின் மாநில விருது)
மானாவாரிப் பூ
(அமரர் சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது)
வெண்பூ மனம்
கோடுகள்
தழும்பு
ஈஸ்வர...
பாசத் தீ
முற்றுகை
இனி
அச்சமே நரகம்
ஊர்மண்
ஆகாயச் சிறகுகள்
முழுநிலா
சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
உள்ளடக்கம்
| 1 |
| 14 |
| 31 |
| 43 |
| 60 |
| 74 |
| 91 |
| 106 |
| 118 |
| 128 |
| 143 |