அப்பம் தின்ற முயல்/அப்பம் தின்ற முயல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
1
அப்பம் தின்ற
முயல்

அது ஒரு மலைக்காடு. ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டிப் போய்க் கிடந்தது. அந்த மலைக் காட்டில் ஒரு குட்டி முயல் இருந்தது.

ஒரு நாள் அந்தக் குட்டி முயல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாகத் துள்ளிப் பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து, பாய்ந்து ஒடிக் கொண்டிருந்த அந்தக் குட்டி முயலுக்குத் திடீரென்று ஒர் ஆசை தோன்றியது.

மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தான் அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும், நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே, மேலே சென்று கொண்டிருந்தது. போகப் போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்நது.

குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிதுகூட அயராது அது துள்ளிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது.

உச்சியில் நின்று அந்தக் குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது. மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்னச் சின்ன செடிகள் போல் காட்சியளித்தன. ஏரி, குளங்களெல்லாம் சிறிய, சிறிய பள்ளங்கள் போல் தோன்றின. கிழக்குப் பக்கத்தில் இருந்த கடல் ஓர் ஏரியைப் போல் காட்சியளித்தது. அப்பொழுது கடலின் அடி மட்டத்திலிருந்து வெள்ளை நிறமான ஓர் அப்பம் வெளிவந்தது.

அந்த அப்பத்தைப் பார்க்க பார்க்கக் குட்டி முயலுக்கு அதைக் கடித்து தின்ன வேண்டும்போல் இருந்தது. உடனே கீழ் நோக்கிப் பாய்ந்தது. சிறிது தொலைவு கீழே இறங்கியவுடன் கிழக்குத் திசையில் திரும்பிப் பார்த்தது. அந்த அப்பம் மேலே வந்து கொண்டிருந்தது. கடலில் தோன்றி வந்த நிலவைத்தான் குட்டி முயல் அப்பம் என்று நினைத்தது.

அப்பம் மேலே வந்து கொண்டிருக்கிறது. அது அருகில் வந்த உடன் பிடித்துத் தின்னலாம். ஏன் கீழே இறங்க வேண்டும். இவ்வாறு எண்ணிய குட்டி முயல் அந்த இடத்திலேயே நின்று மேலே வரும் அப்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்பம் மேலே மேலே வந்தது. ஆனால் முயல் குட்டிக்கு அருகில் வரவில்லை. தொலைவிலேயே இருந்தது. தொலைவில் இருந்தபடியே வானத்தின் உச்சிக்குப் போய் விட்டது.

மலை உச்சியிலிருந்து வானத்து உச்சியையே பார்த்துக் கொண்டிருந்த முயல் குட்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்பம் எட்டவில்லையே, அப்பம் எட்டவில்லையே என்று கத்திக் கதறி அழுது கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக ஒரு காட்டு யானை வந்தது.

'யானையாரே, யானையாரே,உச்சியில்இருக்கும் அப்பம் எனக்கு எட்டவில்லை. உங்கள் நீண்ட துதிக்கையால் அதைப் பிடித்துத் தாருங்கள்” என்று குட்டி முயல் கேட்டது.

யானை வானத்தை நோக்கித் தன் துதிக்கையை நீட்டி அப்பத்தைப் பிடிக்க முயன்றது. அந்த முயற்சியில் தன் முன்னங்கால் இரண்டையும் மேலே தூக்கி துதிக்கையை நீட்டிக் கொண்டு அது எழுந்து நின்ற பொழுது தடுமாறி மலைச்சரிவில் உருண்டு விழுந்து விட்டது.

முயல்குட்டிக்கு மேலும் அழுகை அழுகையாக வந்தது. யானையார் விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றவும் முடியவில்லை. அப்பத்தைப் பிடிக்கவும் முடியவில்லை. என்ன செய்வேன் என்று சொல்லி அது

அழுது கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக ஒட்டைச்சிவிங்கி ஒன்று வந்தது. குட்டிமுயல் அதைக் கூப்பிட்டது.

”சிவிங்கியாரே,சிவிங்கியாரே,வானத்து உச்சியில் உள்ள அப்பத்தைப் பிடிக்க என்னால் முடியவில்லை. உங்கள் நெட்டைக் கழுத்தை நீட்டி அதை எனக்குப் பிடித்துத் தாருங்கள்” என்று குட்டி முயல் கேட்டது.

பாவம் குட்டி முயல் வானத்து அப்பத்துக்காக மிகவும் ஏங்குகிறது; பிடித்துத் தான் கொடுப்போமே என்று கூறிக் கொண்டே ஒட்டைச்சிவிங்கியார் தன் நெட்டைக் கழுத்தை நீட்டி அந்த அப்பத்தைப்பிடிக்க முயன்றார். ஆனால் அந்த வானத்து அப்பத்தை அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை,

”குட்டி முயலே, குட்டி முயலே இங்கே வா. என் தலையில் ஏறிக்கொள். உன்னை நான் வீசுகிறேன். நீ பாய்ந்து சென்று அந்த அப்பத்தைப் பிடித்துக் கொள்” என்று கூறியது.

உடனே குட்டி முயல் பரபரவென்று ஒட்டைச் சிவிங்கியின் மேல் ஏறி முதுகுக்குச் சென்று கழுத்தின் வழியாகத் தலை உச்சியை அடைந்தது. அதன் தலையில் ஏறி நின்றவுடன் ஒட்டைச் சிவிங்கி தன் தலையை வேகமாக ஆட்டி குட்டி முயலை ஒரு தட்டுத் தட்டி உயரத்தில் வீசி விட்டது. ஒட்டைச் சிவிங்கியால் வீசியெறியப்பட்ட அந்தக் குட்டி முயல் அம்புபோல் பறந்து சென்று அந்த வானத்தின் அப்பத்தை அடைந்தது. அந்த வானத்து அப்பம் குட்டிமுயலைப் போல் ஆயிரம் மடங்கு பெரிதாய் இருந்ததால், முயலால் அதை கடித்துத் தின்ன முடியவில்லை. அந்த அப்பம் தான் முயலை விழுங்கி விட்டது.

குழந்தைகளே, நிலாவை உற்று நோக்குங்கள். அதன் நடுவில் அந்தக் குட்டி முயல் இருப்பதை இன்றும் காணலாம்.