அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/பசித்திரு, தனித்திரு, விழித்திரு

விக்கிமூலம் இலிருந்து
9. பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

அற நூல்கள் கூறிய முறைகளில், ‘விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும்’ தான் ஒழுக்கம் என்று நமதுமுன்னோர்கள் கூறி, அத்தகைய அறவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

'அறவழி ஒழுக்கமும்,' ஒழுக்கத்தின் வழி பொருளிட்டலும், பொருள் வழி ஒழுங்குபட்ட இன்பத்தை அனுபவித்தலுமே சிறந்த வாழ்க்கை' என வாழ்ந்து உலகுக்கே வழி காட்டினர்.

அதனால் தான் இல்லறம், துறவறம் என்று இரு அறவழிகளைக் காட்டி, தேகத்திற்குத் திறமையையும், ஆன்மாவிற்கு அமைதியையும் தேடிக் கொண்டனர்.

இந்த இரண்டு அறங்களையோ, வட நூலார் நான்காகக் கூறினார்கள். அமைதிக்காக, ஆன்மாவின் சுகத்திற்காக, அரும்பெரும் வீட்டுப் பேறுக்காக, அவர்கள் வகுத்த கொள்கை இப்படியாக இருந்தது.

1. பிரம்மசாரியம், 2. கிருகஸ்தம் 3. வானப்பிரஸ்தம் 4. சந்நியாசம்.

திருமணமாகாமல் துறவறம் மேற்கொள்வது பிரம்மசாரியம். இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அணுகுவது கிருகஸ்தம். காட்டிற்கு துணைவியுடன் சென்று, அங்கே துறவற வாழ்க்கையை மேற்கொள்ளுவது வானப்

பிரஸ்தம். பிறகு தனியாகப் பிரிந்து தவ வாழ்க்கை மேற்கொள்வது சந்நியாசம்.

இத்தகைய நான்கு அணுகு முறைகளிலும் பொதுவான ஒரு குறிப்பை நம்மால் காணமுடிகிறது.

எந்த நிலையிலும், எத்தகைய வசதியிலும் பசித்திருத்தல், தனிமையிலிருத்தல், விழித்திருத்தல் என்பது தான் மூன்று முக்கிய பண்புகளாக நின்று வழி காட்டுகின்றது.

பசித்திருத்தல் என்பது அளவோடு உண்டல், போதிய அளவு உண்டல், அதாவது பெருந்தீனி தின்று, மூச்சு விடக் கூட முடியாமல், இரை விழுங்கிய மலைப்பாம்பு நெளிவதைப் போல் வாழாமல், சுறுசுறுப்பாக இயங்குமாறு உணவு உண்ணுதல்.

அதிகமாக, அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை ஜீரணம் செய்யவே இரத்த ஓட்டத்தின் பெரும் பகுதி சரியாய் போய்விடுகிறது. இதனால் மற்ற இடங்களுக்கு, முக்கியமாக சிந்தனை செய்யும் மூளைப்பகுதிக்கு சரியான இரத்த ஓட்டம் செல்லாமல் திசை மாறிப் போவதால்தான், 'வயிறு முட்ட சாப்பிடுபவர்கள் வடிகட்டின முட்டாள்களாய் வாழ்கின்றார்கள் என்ற தன்மைக்கு ஆளாகிப் போகின்றார்கள்.

சிறந்த சிந்தனை, சுறுசுறுப்பான செயல்களுக்குப் பசித்திருத்தல் ஒரு ஒப்பற்ற காரணமாக அமைந்து விடுகிறது.

கூட்டமாய் இருக்கும்பொழுதுதான் மிருகங்கள் கொடுமையற்று இருக்கின்றன. உதாரணமாக, கூட்டமாக யானைகள் நடமாடும் பொழுது, அங்கு செல்கின்ற மனிதர்களுக்கு ஆபத்து அதிகமில்லை. ஆனால், தனியாக ஒரு யானை வந்துவிட்டால், எதிர்ப்படும் ஆளின் கதியும் அதோகதி தான்.

ஆனால் மனிதக் கூட்டத்தின் மகிமையோ தனியாகவே தெரிகிறது. கூட்டமாக மனிதர்கள் கூடும் போது தான் ஆபத்தானவர்களாக' ஆகி விடுகின்றார்கள். கட்டுகடங்காமல். சில சமயங்களில் காலித்தனத்தைக் கட்டவிழ்த்துத் திரிகின்ற 'காட்டுமிராண்டிகளாகவும் மாறிப் போகின்றார்கள்.

ஆனால். மனிதன் தனியாக இருக்கும்பொழுது ஆபத்தற்ற ஜீவியாகத்தான் விளங்குகிறான். தனிமையில் சிந்தனை அதிகமாக இருக்குமே தவிர, கொடுமைத்தனம் அதிகம் இருக்காது என்பது அனுபவசாலிகளின் நம்பிக்கை.

தனித்திருக்கும் பண்பினை வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள், சிந்தனைவாதிகளாகவும், சிலர் ;சீரிய திறம்பட செயலாற்றும் வல்லுநர்களாகவும் வாழ்வதை நாம் நேரில் கண்டிருக்கிறோம். ஆகவே முன்னேறும் வாய்ப்பு மனிதனுக்கு வேண்டுமென்றால், தனித்திருத்தல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.

சதா காலமும் தூங்கிக்கொண்டிருப்பவன், அல்லது தூக்க உணர்வோடு சோம்பல் கொண்டிருப்பவன், சகல சம்பத்துக்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், விரைவில் அனைத்தையும் இழந்து, தரித்திரனாகி விடுவான்.

விழிப்புணர்ச்சியுடன் விளங்குபவர்களே,வெற்றிக்கு உரியவர்களாகின்றார்கள். கருமமே கண்ணாக இருப்பவர்கள் கண்ணுறக்கம் கூட கொள்ள மாட்டார்கள் என்பது பழந்தமிழ் பாட்டன்றோ!

இறைவனைத் தேடி, எல்லாவற்றையும் துறந்து, உடலை ஒரிடத்தில் அமர்த்தி, உள்ளத்து நினைவுகளை ஒரு வழிபடுத்தித் தவம் செய்யும் துறவிகளுக்குத்தேவை பசித்திருத்தல், தனித்திருத்தல், விழித்திருத்தல் என்பனவாகும்.

தவம் செய்யத் தனிமை, உயிர்வாழ கொஞ்சம் உணவு. அதற்காக காய் கனிகள் கிழங்குகள் போன்ற உணவு. விழிப்போடு இருந்து ஜெபம் செய்யும் பண்பு.

இந்த மூன்றும் துறவிகளுக்கு மட்டுந்தான் சொந்தமா? அல்லவே! உலகின் உயிர் வாழும் மனிதர்கள் அனைவரும் உடன்பாடு கொண்டு, ஒழுகவேண்டிய பண்புகளல்லவா இவைகள்!

வாழ்க்கையும் விளையாட்டும் ஒன்றுதான் என்று கூறுகின்றோமே? அதற்கு சான்றாக அல்லவா இந்த மூன்று பண்புகளும் மிளிர்கின்றன.

விளையாட்டுப் போட்டிகள் மாலை மணிக்கு நடக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அந்தப்போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களும் வீராங்கனைகளும், துறவிகள் போலல்லவா தங்களைத் தயார் செய்து கொண்டு காத்திருக்கின்றார்கள்.

2 மணிக்குப் போட்டிகள் என்றால், பகல் 12 மணிக்கே கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு, பசித்திருக்கக் காத்து கொண்டிருக்கின்றார்கள். அதிகமாக உண்டுவிட்டால் அசதிதான் வரும், திறமைகளை வெளிப்படுத்தும் திறனும் ஆற்றலும் மிகுதிபடாமல் குறைந்து போகும். இதற்காகத்தான் அளவாக உண்டு ஆற்றலை வெளிப்படுத்திக்காட்டும் விழிப்புணர்வோடு காத்திருக்கின்றார்கள்.

அதோடு மட்டுமல்ல, தாங்கள் என்ன செய்யவேண்டும், எப்படி அணுகுமுறைகள் அமைய வேண்டும். எதிர்த்திடுவோரினை எப்படி வெற்றி காணவேண்டும் என்றெல்லாம் தனித்திருந்து திட்டம் தீட்டுகின்றனர்.

இப்படிப்பட்ட துறவிகள் பின்பற்றும் தூய வழியினை விளையாட்டுக்களில் பின்பற்றுபவர்களே, தீரர்களாகவும், சிறந்த திறமையாளர்களாகவும் புகழ் பெறுகின்றார்கள்.

அதிகமாக உண்ணுதற்கு ஆசைப்படுபவர், அதிகமாகப் பேசி மகிழ வேண்டும் என்று ஆவேசம் கொள்பவர். உறக்கம் தான் உயிர் என்று தூங்கித் தொலைப்பவர் யாரும் நல்ல விளையாட்டு வீரராக வரவே முடியாது.

ஆசைக்காக அவர்கள் விளையாடலாமே ஒழிய, ஆற்றல் மிக்கவர்களாகப் புகழ் பெற அவர்களால் என்றுமே முடியாது.

பசித்திருக்கவும், தனித்திருக்கவும், விழித்திருக்கவும், முதலில் பயிற்சி தான் தேவை. இந்தப் பண்புகளை புரிந்து கொள்ளும் போதே, ஏற்றுகொள்கின்ற பக்குவத்தை மனம் பெற்றுக் கொண்டு விடுகிறது. போற்றிப் பாதுகாக்கவும் தொடங்கி விடுகிறது.

ஆகவே, சிறந்த மனிதர்களாக விளங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கு, விளையாட்டு ஓர் இணைப்பு பாலமாக, ஏற்றிச்செல்லும் உயிர் காப்புப் படகாக, தொடர்ந்து வருகின்ற தோன்றாத் துணையாகவே உதவி வருகிறது.

ஒருவன் நல்ல விளையாட்டு வீரன் என்றால், அவன் இம் மூன்று பண்புகளிலும் முதிர்ச்சி பெற்ற தூய்மையாளனாக, வாய்மையாளனாகப் பயிற்சி பெற்றிருக்கிறான் என்பதே பொருளாகும்.

நீங்களும் முயலலாமே! எளிய வழியில், எளிய முறையில் உயர்ந்து, உயர்ந்தவர்களாக வாழலாமே!