அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/விளையாட்டு வினையாகிறது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


12.விளையாட்டு வினையாகிறது


வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலத்திலிருந்தே மனித வாழ்க்கையில் விளையாட்டு வடிவம் பெற்றுக் கொண்டிருந் திருக்கிறது. ஆதிகால மனிதனது வாழ்க்கையின் ஆரம்பமே, இயற்கைச் சூழ்நிலை யில் எழுந்த இடர்ப்பாட்டிலும், எதிர் நீச்சலிலுமே நீக்கமற நிரவிக்கிடந்திருக்கின்றது.

ஆதிகால மனிதனுக்கு வேலை என்ன, விளையாட்டு என்ன என்ற வேற்றுமை தெரியாதவாறு, அவனுடைய வாழ்க்கைமுறை அமைந்திருந்தது. அவனது உள் உணர்வுகளே அவனை உந்தி இயக்கிக் காத்தன.

உலகத்தில் மாறி மாறி வந்த இயற்கைப் பருவங்களின் மாற்றங்கள், அவனுடைய உணர்வுகளுக்கு உணவாகி, அவனது அறியாமையை அகற்றி, விழிப்பூட்டும் அனுபவங் களாக மலர்ந்து வழிகாட்டி, வாழும் வகையை உணர்த்தின.

உட்காரவோ உறங்கவோ ஓர் இடமில்லாமலும், உடுத்திக் கொள்ளவோ மானம் காக்கவோ, உடைகள் இல்லாமலும், உண்டு மகிழவோ உடலை வளர்க்கவோ உணவுகள் கிடைக்காமலும், விலங்கோடு விலங்குகளாக, மனிதன் விளங்காமல் வாழ்ந்த காலத்தில், பசியுணர்வு அவனை பாடாய் படுத்திய போது, காய்களை, கனிகளை, கிழங்குகளை, இலைகளை, தழைகளைத் தின்றான்.

மழையும் வெயிலும், பனியும் குளிரும் அவனுக்கு புரியாத புதிச்களாய் இருந்தது போலவே, உணவக்காக அலைந்த விலங்குகளின் வேட்டைக்களமாக அவனது வாழ்க்கை அமைந்தபோது, பயஉணர்வு காரணமாக அவன் மரப்பொந்து களிலும் புதர்களிலும், மரக்கிளைகளிலும் பதுங்கித் தன்னைக் காத்துக் கொண்டான்.

ஆதிகால மனித வாழ்க்கை, அயராத அழியாதப் போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. அதாவது, வெறிகொண் டலைந்து விலங்கினத்திலிருந்து, தங்களைக் காத்துக் கொள்கின்ற விவேகமில்லாத நடைமுறைகளிலே தான். அன்றைய மனிதன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

மாறிவந்த காலங்கள், மனிதனது அறியாமையையும் மாற்றிக் கொண்டே வந்து, அறிவு பூர்வமான அனுபவங் களையும் அவ்வப்போது அளித்துக் கொண்டே வந்தன.

தாவிப்பாய்ந்த மிருகங்களிட மிருந்து தப்பித்துக் கொள்ள அன்றைய மனிதர்கள் ஓடினர்கள். அப்பொழுது தப்பித்துக் கொண்ட அனுபவத்தால், தங்கள் சந்ததியினரையும் தயார் செய்து கொள்ள முனைந்த பழக்கமே, கூட்டமாக ஒடிப் பழகிய வழக்கமே, இந்நாளைய ஒட்டப் பந்தயங்களாக மாறி வந்திருக்கின்றன.

தப்பி ஒடிய காலத்தில் பள்ளங்களையும், மேடுகளையும், குழிகளையும், நீர்ப்பகுதியையும் தாண்டிக் குதித்த பழக்கமே தாண்டும் போட்டிகளாக உருமாறி வந்திருக்கின்றன.

ஓடவும் தாண்டவும் முடியாமல்,' கிட்டத்திலே' சிக்கிக் கொண்ட பொழுது, கல்லெறிந்து, கம்புகளை வீசித் தப்பிக்க முயன்று. பின்னர் குறிபர்த்து வீசிய முறைகளே, இன்று எறியும் போட்டிகளாக ஆகியிருக்கின்றன.

தப்பிச் செல்லக் கூடிய நேரங்களில் தடைகளை ஏற்படுத் திய கற்கள், சிறு பாறைகள், மரத்துண்டுகள் போன்றவற்றைத் துாக்கித் தள்ளி விட்டுச் சென்ற பழக்கமே, எடை தூக்கும் போட்டி அறிவை ஏற்படுத்தித் தந்தன.

இந்நாளில் ஏற்பட்டிருக்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், நமது முன்னோர்கள் பெற்ற வாழ்க்கை அனுக வங்களின் முதிர்ந்த வடிவமாகும்.

'மனிதன் ஒரு வேலை செய்யும் அறிவுள்ள மிருகம்'என் கிறார் சூலி நக்கோடா என்பவர்.

உழைப்பே அவனது வாழ்க்கையாக அமைந்திருந்தது. இந்தியாவில் வேத காலம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்ட காலம். அப்பொழுது வாழ்ந்த வேத கால மக்களின் வாழ்க்கை முழுவதும், உடல் உழைப்பாகவே இருந்து வந்ததால், இயற்கையாகவே அவர்கள் உடற்பயிற்சி செய்கின்ற வாய்ப்புள்ளவர்களாகவே விளங்கினார்கள். அதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையை ஆற்றலுடன் நடத்திச் செல்ல அவர்கள் புதிய விளையாட்டையோ உடற்பயிற்சி யையோ உருவாக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. அவர்கள் வேட்டையாடினார்கள். குதிரை சவாரி செய்தார்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக இடம் விட்டு இடம் பெயர்ந்து அலைந்த அனுபவங்கள், அவர்களுக்கு உடல் வலிமையையும், உடல் நெகிழ்ச்சியையும் திறன் நுணுக்கங் களையும் உருவாக்கித் தந்தன.

காட்டிலே வாழ்ந்த மக்கள், வீட்டிலே தங்கியிருந்து வேளாண்மை செய்து, வாழ்கின்ற விவரம் புரிந்து கொண்ட நாட்களில், வித விதமான தேவைகள் அவர்களுக்கு உரு வாயின. அந்தத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள அவர் கள் அதிகமாக உடல் உழைப்பையே நாடவேண்டியிருந்தது.

அன்றாடத்தேவைகள் அவைகளைத் தீர்த்துக்கொள்ளும் வேலைகள் எல்லாம் மனிதர்களது மரபுத் தொழில்களாக மாறி வந்தன. உணவு அடிப்படைத் தேவை என்பதால், உழவுத் தொழில் வளர்ந்தது. உடைகள் அவசியம் என்பதால், நெசவுத் தொழில் வளர்ந்தது. தற்காப்பு அவசியம் என்பதால், போரிடு வதற்கான ஆயுதங்கள், தற்காப்பு இடங்கள், வாகனங்கள் முதலியன உருவாக்கும் தொழில் நிலைகள் விரிவடைந்து கொண்டே சென்றன.

தொழிலே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே தொழிலாகவும், மாறி அவர்களை ஆழ்த்திவிட்டிருந்தன.

ஆதிகால மக்களின் அன்றாட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவிய தொழில்களிலிருந்தே பல விளையாட்டுக்கள் தோன்றி வளர்ந்து, செழித்தோங்கி, சரித் திரம் படைத்தன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன.

"உழவுக் காலங்களிலும் அறுவடைக் காலங்களிலும் ஒன்று கூடி பாட்டுப் பாடி வேலைகளைத் தொடங்கிய முறை களே கடவுள் வழிபாடாகவும்; காணிக்கை தரும் கடன் களாகவும், நடனமாடுகின்றன நிகழ்ச்சிகளாகவும், விருந்து படைக்கும் விழாக்களாகவும் வடிவெடுத்துக் கொண்டிருக் கின்றன.

கூட்டங் கூட்டமாக சேர்ந்து வாழத்தொடங்கிய மக்கள், தங்களது தற்காப்புக்காகப் போரிடும் சாதனங்களையும் பஐங்கர ஆயுதங்களையும் படைத்துக் கொள்ள தலைப் பட்டனர். பல கூட்டங்களுக்கு இடையே அடிக்கடி போர்கள் நடத்தி வந்ததே. அவர்கள் வாழ்க்கையின் நோக்கமாகவும் இருந்தன.

மிகப் பழங்காலத்தில் ஒருவரோடு ஒருவர் செய்து கொண்ட துவந்த யுத்தமே, இன்று மல்யுத்தம் போட்டி

யாகவும்; குத்திக் கொண்டும் தாக்கிக் கொண்டும் போட்ட சண்டையே குத்துச்சண்டைப் போட்டியாகவும்; வில்லை வளைத்து அம்பு விட்டு எதிரியை சாய்த்த முறையே இன்று வில் வித்தைப் போட்டியாகவும்; ஈட்டியையும் வேல்களையும் எறிந்து தாக்கி விதமே இன்று வேலெறிதல் போட்டியாகவும் (Javelin); தட்டெறியும் போட்டியாகவும்; தடைகளைத் தாண்டித் தப்பித்துச் சென்ற பழக்கமே இன்று தாண்டும் போட்டிகளாகவும் மாறி மென்மை பெற்று வந்திருக்கின்றன.

நமது வாழ்க்கையின் வரலாற்றை பல பகுதிகளாகப் பிரித்துக் காட்டிய அறிஞர்கள், ஆரம்ப காலத்து முன்னோர் களின் வாழ்க்கையை கவலையும் பதைப்பும் நிறைந்ததாகவும், அடுத்ததாக, கண்டுபிடிப்புகளின் காலம் என்றும்; அதற் கடுத்து ஆனந்தமாக வாழ்க்கையை அனுபவித்து மகிழும் காலமாக அமைந்தது என்றும், பின்னர் திருப்தியடையாத காலமாக மாறி வந்தது என்றும் பிரித்து விளக்குகின்றார்கள்.

ஓய்வில்லாத உழைப்பும், உணர்ச்சி மயமான உள்ளக் கிடக்கைகளும் மனிதர்களை வாழ்க்கையை வெறுக்கத் தோன்றிய காலத்தில் தான், விளையாட்டு முன்னே வந்து வழிகாட்டி, அமைதியையும் ஆனந்தத்தையும் ஊட்டியது.

ஒலிம்பிக் பந்தயங்கள் பல முறைகளில் தோன்றி உலகத் திலே மகிழ்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஊட்டி உயிர்ப் பித்துத் தந்ததை நாம் கூறலாம்.

விளையாட்டு மூலமாக சமுதாயமானது வாழ்க்கை முறையைப் பிரதிபலித்து வாழக் கற்றுக் கொடுக்க வந்த விளையாட்டு, நவீனமயமான இந்த நூற்றாண்டில் வாழ்க் கையை ஒட்டுகின்ற வருமானம் தரத்தக்கத் தொழிலாகவும் மாறி விட்டது.

உழைத்து ஓய்ந்த உடலுக்கு உற்சாகம் தரத்தக்க அளவில் விளையாடுகின்றவர்களை, பொழுதுபோக்கு ஆட்ட க்காரர்கள்

என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். ஆனால், விளையாட்டுக்களில் ஊறிப்போய், திறன் நுணுக்கங்களில் தேறிப் போயிருந்த திறனாளர்கள், அந்த விளையாட்டுக்களை வினளையாடிக் காட்டிப் பொருள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்

தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக் கொண்டவர்கள், அதனையே கற்றுத் தரும் தொழிலாக்கிக் கொண்டு, வாழ்க்கையை நடத்தத் தொடங்கியதும், குத்துச் சண்டை. மல்யுத்தம் போன்றவற்றில் ஆற்றலுக்காக ஈடுபட்டவர்கள், அதனையே பொருள் திரட்டும் போட்டிகளில் ஈடுபட்டதும் இதற்கு சான்றுகளாக அமைந்து விட்டிருக்கின்றன.

விளையாட்டு என்பது விளை+ ஆட்டு என்று பிரி கின்றது விளை எனும் சொல்லுக்கு விருப்பம் என்றும், ஆட்டு என்பதற்கு இயக்குதல அதாவது உறுப்புக்களை இயக்குதல் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

நம்மையறியாமலேயே கைகளை கால்களை அசைப் பதற்கு இயக்கம் (Movement) என்றும்; ஒரு நோக்கத்தையோ அல்லது பயனையோ கருதி உடலை இயக்குவதற்கு வேலை (Work) என்றும்; சுவாசத்தை முறைப்படுத்திக் கொண்டு உடலுறுப்புக்களை இயக்கி, உடல் நலத்தையே முழுமூச்சாகக் கொண்டு செயல்படுவதை பயிற்சி(Exercise) என்றும் மகிழ்ச்சி பெறுவதற்காக விருப்பம்போல் உடலை இயக்குவதற்கு விளையாட்டு என்றும் கூறுகிறோம்.

வருமானம் கருதி அல்லது மற்றவர்க்கு அடிபணிந்து, ஆணைக்கு உட்பட்டு அடங்கி உறுப்புக்களை இயக்கியும் அந்தப்பணி முடித்த பிறகு ஆதாயம் எதிர்பார்த்தும் இருப்பதையே வேலை என்கிறோம்.

ஆனால் விளையாட்டு என்பது தன்னிச்சையாக, தடினே தனக்கு அதிகாரியாக இருப்பதுபோல இருந்து, உறுப்புக்களை

இயக்கியும், அதன் மூலம் ஆடும்போதும், ஆடி முடித்த போதும் மகிழ்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் எதிர்பார்க்கின்ற இனிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

வேலை உடலை வருத்துகிறது. முடிவில் களைப்பில் ஆழ்த்துகிறது. விளையாட்டோ உடலை இயக்குகிறது. முடிவில் சுகத்தையும் மனோலயத்தையும் வளர்க்கிறது.

அத்தகைய அரிய பண்பாற்றல் நிறைந்த விளையாட்டுக்களில் அதிசயக்கத்தக்க அளவு வல்லமை பெற்றவர்கள். தங்களது திறமையையே தொழிலாக்கிக் கொள்கின்றார்கள். அதனால் வாழ்க்கையை நடத்திச் செல்கின்ற வருமானத்தையும் வளர்த்துக் கொள்கின்றார்கள் .

ஒய்வு நேர உழைப்பாக விளையாட்டு இருக்கிறது. அதாவது மகிழ்ச்சியுடன் பங்கு பெறும் பணியாக. ஆனால் தொழிலோ முழு நேரப் பணி பாக, முற்றிலும் எல்லா நேரங் கரிலும் அதிலேயே தினைவுகளை ஆழ்த்தி விட்டுக்கொள் கின்ற தன்மையில்தான் அமைந்திருக்கிறது.

சீருடற் பயிற்சிகளை கானே செய்யும்பொழுது அது பலம் தரும் பயிற்சிகளாக அமைகின்றன. அவற்றையே சர்க்கஸ் காட்சி களில் செய்யும் பொழுது தொழிலாக மாறி விடுகிறது.

டென்னிஸ் ஆட்டத்தை நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளில் ஆடும் பொழுது, அமெச்சூர் ஆட்டக்காரர் என்று பெயர் பெறுகிறார். அந்த ஆட்டக்காரரே, பணம் வ கிக் கொண்டு ஆடுகின்ற பொழுது, தொழில் முறை

ஆட்டக்காரராகப் பெயர் பெற்று விடுகின்றார்.

இன்று தொழில் முறை விளையாட்டுக்களில் தான் அதிக வீரர்கள் பங்கு பெற ஆசைப்படுகின்றார்கள். டென்னிஸ் அ.வி.--13

ஆட்டம் தான். தொழில் விளையாட்டுக்களில் முதலிடம் வகிக்கின்றது. அடுத்ததாக, கிரிக்கெட் ஆட்டமும், அமெரிக்கத் தளபந்து ஆட்டமும் அதன் பின் இறகுப் பந்தாட்டமும் வருகிறது.

தொழிலாக ஏற்றுக் கொண்டு விளையாடுபவர்களின் வாழ்க்கை, எதிர்காலத்தில் ஏற்றம் தரும் வகையில் அமைந் திருக்கும் ஒரே காரணத்தால் தான். திறமையுள்ள வீரர் களைத் தேர்ந்து எடுத்துக் கொள்ள ஓர் அமைப்பே உற்சாக மாக இயங்கியும், வீரர்கள் அவர்களுக்குத் துணை சென்றும் விளையாட்டைத் தொழிலாக்கிக் கொண்டு வருகின்றனர்.

சமுதாய அமைப்பும் இதற்கும் ஒரு காரணம் என்று சொல்லலாம்; வசதியுள்ள விளையாட்டு வீரர்களுக்குத்தான் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது என்பது தான் அந்த நியதி.

எத்தனையோ ஒலிம்பிக் வீரர்சள் இடைப்பட்ட தங்கள் வாழ்க்கையில் பட்டினி கிடந்து பரிதவிக்கின்றார்கள். வளைகோல் பந்தாட்டப்புலி' என்று அகில உலகப் புகழ் பெற்ற தியான் சந்த் என்ற வீரர், தனது இறுதி நாளில் பட்ட துயரும், மரித்த அவலமும் வரலாற்றில் மிகத் துயரமான நாட்களாகும்.

எனவே, மகிழ்ச்சிக்காகத் தொடங்கி, மக்களை ஒன்று சேர்க்கும் இயக்கமாக மலர்ந்து, பின்னர் திறன்களை வளர்க்கும் அரங்காக உயர்ந்து, ஓய்வுக்கு உற்ற தோழமையாக மாறி, உலகப்புகழ் தரும் ஓடமாக ஊர்ந்து வழி காட்டியாக வளர்ந்து வந்த விளையாட்டுக்கள், இன்று வாழ்க்கையின் வசதிகளை வாங்கித் தருகின்ற வருமானத்தை வழங்கும் தொழிலாகவும் மாறி வந்திருக்கிறது,

உலகமெங்கிலும் இது நடைமுறையாகி விட்டதால், விளையாட்டுத் தொழில்தான் இனி வீரர்களை அழைத்துக்

கொள்ளும் என்று நம்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பொழுது போக்கு விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரையும் மாற்ற முற்படும் ஒலிம்பிக் விதிகள் கூட, சில நேரங்களில் செயல்பட முடியாமல் திகைத்து நிற்பதைக் காணும்போது, வருமானம் வருகின்ற தொழிலாக விளையாட்டுக்கள் மாறி வருவதை யாரும் தடுக்க முடியாது என்ற சூழ்நிலை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.


என்றாலும், விளையாட்டு உடலை வளம்படுத்தவும், மக்களை மனிதர்களாக இயங்கச் செய்யவும் உதவுகிறது என்கின்ற கொள்கையை அறிந்து, அதில் பங்கு கொண்டு பயன் பெறுவோம் என்று பின்பற்றுவோம், பயன்பெறுவோம்.

ஆமாம்!

விளையாட்டு வினை (துன்பம்) யாகும் என்ற தவறான பழமொழி மாறி, வினை (தொழில்) ஆகிறது என்று காலம் மாறிக்கொண்டு வருகிறது.

காலத்தின் அழைப்பை ஏற்பவர்கள் தான் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியும். அதற்காக இளைஞர்கள் தயாராகிக் கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். அதுவே நன்றாகும்.