அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு ஜனநாயகம்!

விக்கிமூலம் இலிருந்து

5. அண்ணா ஒரு ஜனநாயகம்!


உயிர் அடங்கிய உடல்போல, சவக்களை தட்டிய முகத்தோடு, இரவு, உலகத்தின் மேல் மொய்த்துக் கொண்டிருந்தது.

இருளில் ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அடிவானம் தோய்ந்து கொண்டிருந்தது.

அடிவானத்தின் விளிம்பெல்லாம், தூக்கத்தில் சிரிக்கின்ற குழந்தையின் புன்முறுவலைப்போல - ஊமை மின்னல்கள் இங்குமங்கும் ஒடிக்கொண்டிருந்தன.

செறிந்த தென்னங் கீற்றின் வழியாகத் தென்றலின் பவனி வருகிற பொழுதெல்லாம் கீற்றுகள் சந்தம் பாடின!

அந்தி சாய்கிற வரையில், கவலையேற்றத்தின் வாயிலாக, கழனிக்கு நீர்ப்பாய்ச்சிய உழவர்கள் சென்றுவிட்டபிறகு ஏற்ற வாய்க்காலில் இருந்து கழனிக்கு ஓடிவரும் தேங்கிய நீர், சிறிய மடிப்பலைகளோடு அங்கங்கு சிலிர்த்துக் கொண்டிருந்தது.

நிலவற்ற அந்த நீல வானத்தில், நித்திலங்கள் கூட்டம் கூட்டமாக இருந்து பூமியை உற்று நோக்கிக் கொண்டிருந்தன!

'இம்மென்ற ஓசையோடு திக்குகள் எட்டும் அமைதியோடு கூடி, மோன விரதத்தில் ஆழ்ந்திருந்த நேரம்:

அதோ ஒரு கல் தொலைவில், வாழ்க்கையின் வடிவத்தைச் சரியாகக் காணமுடியாதவர்கள் - மரண வேக்காட்டில் நொந்து

போனவர்கள் - உடலங்களைச் சுடுகாட்டுத் தீப்பிழம்பு சாம்பலாக்கிக் கொண்டிருந்தது!

ஒய்ந்துபோன ஜீவன், வன்னிக் கொடிக்குத் தன்னுடைய கூட்டை இரையாக்கி - அது எரிகின்ற விதத்தைக் கலையுணர்ச்சியோடு கண்டுகொண்டிருந்தது.

மேலே நிர்மலமான வானம் அதனைத் தாவிப்பிடித்துக் கொண்டிருந்தது - இறந்தவனின் ஆசைப் புகை:

மனிதனுடைய பிறப்பைப் பற்றி மகிழ்ச்சிக் கொள்ளுகின்ற இந்த உலகம் - அவன் இறந்த பிறகு ஏன் மெளனம் சாதிக்கிறதென்று தத்துவங்களைக் கேட்டால், அது தனக்குரிய விக்ரகங்களைக் காட்டுகிறது.

என்னுடைய சிந்தனை வளையங்கள், இந்த சூழ்நிலைக் கிடையில், மிக அமைதியான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தன.

ஆனால், அதிலுள்ள ஒர் அழுத்தமான வளையம் மட்டும், வானை நோக்கி அறுந்து போகின்ற பட்டத்தைப் போல - வேகமாக ஒடிக்கொண்டிருந்தது.

இப்போது - இரண்டு மேகக் குவியல்கள், எதிரும் புதிருமாகத் தெற்கிலிருந்தும் - வடக்கிலிருந்தும், குவிந்து கொண்டிருக்கின்றன.

அதோ, அவை ஒன்றை ஒன்று கவ்விக் கொள்கின்றன.

தப்பித்துப்போன எனது சிந்தனை வளையம், அவை பிணைப்பை வெட்டி வீழ்த்திக் கொண்டே, மேல் நோக்கிச் செல்கின்றது.

இப்போது என் எண்ணம், மேகத்தைத் தாண்டி - பூமியின் ஈர்ப்புப் பிரதேசத்தைத் தாண்டி - இறகுகூட நகர முடியா காற்றில்லா பகுதியைத் தாண்டி - கோள் மண்டலத்தைத் தாண்டிச், சென்ற வண்ணமாகவே இருக்கின்றது.

அந்த வான் வெளியின், நெஞ்சத்திலிருந்து கீழ்நோக்கி ஏதோ ஒன்று வருவதுபோல் நான் உணர்கிறேன்.

அந்த உருவத்தின் முழுமையும் எனக்குத் தென்படாவிட்டாலும் - ஒரு வெண்மையானப் புள்ளி, நிலப்பரப்பை நோக்கி வருவதை என்னால் உணர முடிகிறது.

நான் இருக்கின்ற பிரதேசத்தில் மின்னல் இல்லை விண்மீன்களது ஒளியில்லை - எங்கும் இருள் மயம்!

இப்போது நிலம் நோக்கி வருகின்ற உருவத்திற்கு நீண்டு விரித்த சிறகுகள் இருந்தன.

அதனுடை இறக்கைகள், பகுத்தறிந்த அறிஞன் ஒருவன் வாழ்க்கையில், வாழயியலாத மக்களுக்கு அறிவுரைக் கூறிவிட்டு வாழ்த்தும்போது இருக்கின்ற கை அசைவைப் போல் அதனுடைய இறக்கைகள் மென்மையாக ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் பறவை, வான சாம்ராச்சியத்தின் தூதுவனாகவே இருந்தது:

இரக்கப்பட்டு அருள் வழங்கும் ஒருவனின் தூய்மையான உள்ளமும் அதன் உடல் நிறமும் ஒன்றாக இருந்தது.

வைரத்தின் ஒளியும் - பொன்னின் கதிர்த் தெறிப்பும் அதன் கண்ணிலே ஒளிர்ந்து கொண்டிருந்தன!

இப்போது அந்தப் பறவையை என்னால் சரியாகக் காணமுடியும்.

செதில் செதிலாக அணிவகுத்து எழில் பரப்பிக் கொண்டிருக்கும் இறகுகள் - அதன் சிறகுகள் மீது படர்ந்திருந்தன.

உடனே எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏனென்றால், அந்தப் பறவையைச் சுற்றியிருக்கும் பிழம்பொளி என் கண்மணியைக் கூசவைத்தது.

தங்கமே எரிந்து பூவானம் பூவானமாகிக் கொட்டுகின்ற பூவெல்லாம், நவரத்தின வண்ணத்தோடு சிதறுமானால் - தாங்க முடியாத அவ்வொளி வெள்ளத்தை, எந்தக் கண்ணாலும் ஆட்கொள்ள முடியாதல்லவா?

இப்போது நான் இந்த நிகழ்ச்சியின் விளைவால், கீழ்நோக்கித் தள்ளப்பட்டு விட்டேன்.

எனக்கு முன்னால் நெடிய மலை என்னைச் சுற்றிலும் ஒரே பள்ளத்தாக்குகள்!

காற்றின் பேரிரைச்சலால் உளறிக் கொண்டிருக்கும் குகையின் எதிரொலிகள்!

பேரிரைச்சலோடு கீழே விழும் நீர் வீழ்ச்சி!

கீச்சான் பூச்சிகளின் தொடரொலிகள்!

காட்டு விலங்குகளின் உறுமல்!

ஆனாலும், என் கண்கள் மட்டும் அறிஞன் ஒருவனின் கபாலத்தைப்போல் வளைந்திருக்கும், வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன!

வான் மண்டலத்தில் நான் பார்த்த பறவை - என் கண்களுக்கு இன்னும் தெரியவில்லை.

நான் இருக்கும் பகுதி, மலைப் பகுதியாக இருப்பினும் - பக்கத்திலே மக்கள் வாழும் பகுதியும் இருக்கவேண்டும்.

இரவு உணவை முடித்துவிட்ட கிராம மக்கள், பறை பொலியால் ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது.

அவர்களும் விழித்திருக்கிறார்கள் - நானும் விழித்திருக்கிறேன்.

அவர்களது எண்ணங்கள் கலையுலகத்தில் சஞ்சரிக்கின்றன!

என்னுடைய எண்ணங்கள் வான மண்டலத்தையே வியப்பாக கவனித்துக் கொண்டிருந்தன.

அந்த மக்கள், பகலெல்லாம் உழைத்து உழைத்து உருக்குலைந்தவர்கள்.

அந்திக்குப் பின்னால் களைப்பைப் போக்கிக் கொண்டனர் - இரவில் கலையைக் காண்கிறார்கள்!

நான் பகலெல்லாம், இம்மனிதச் சமுதாயத்தின் துன்பங்கள் எப்படி முளைக்கின்றன - தழைக்கின்றன இதற்கு மூலம் யார்? அந்தம் உண்டா? என்று உள்ளார்ந்த தியாக உணர்ச்சியோடு எண்ணியதால் - இடை இடையே களைத்து - இடையிடையே நெப்போலியனைப் போல நொடித் துக்கம் தூங்கி, இரவு நேரத்தில் இரைக்காக அலையும் காட்டு மிருகங்களைப் போலத் - தத்துவங்களுக்காக அலைந்து கொண்டிருப்பவன்!

அந்த கிராம மக்கள் கிடைத்ததை வைத்து வாழ நினைப்பவர்கள்!

நான், கிடைக்க வேண்டியது ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன்.

அவர்கள் வருத்தம் வருகிற நேரத்தில், முகத்திலடித்துக் கொண்டு கோயில் முன்பு அழுவார்கள்.

வருத்தம் வருகின்ற வழியை அடைத்துவிடத் துடித்துக் கொண்டிருப்பவன் நான்!

துன்பம் வரும்போது அவர்கள் அழுவார்கள் - இன்பம் சிரிக்கும் போது சிரிப்பார்கள்!

துன்பம் துளிர்க்கும் இடத்தையும், இன்பம் அரும்பும் இடத்தையும் - மனிதனுக்கென்றே படைத்தவர்கள் யார்? என்று, நான் கேட்டுக்கொண்டிருப்பவன்!

இந்தச் சமுதாயம், அந்த மக்களைப்போல் கபடு சூது அற்ற நிலையில் இருக்கிறது.

ஆத்மா, என்னைப்போல ஒர் உண்மைப்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறது.

அவர்கள், ஐம்புலனுக்கும் ஆறறிவுக்கும் நடுவில் இருக்கின்ற உயிரைப்போல் - உற்றார் உறவினர்கட்கு மத்தியில் இருக்கிறார்கள்!

உடற்கூட்டைவிட்டு வெளியே வந்த உயிர், தங்க இடமி ல்லாமல் தவிப்பதுபோல் - நான் மலைகளுக்கு இடையில் ஆதரவற்றிருக்கிறேன்.

எனது சிந்தனையே! நீ எங்கு சென்றாலும் சரி, திரும்பி வருகிற நேரத்தில், கடைக்குச் சென்ற தாய், குழந்தைகட்குத் தின்பண்டம் வாங்கி வருவதைப்போல, இந்த உலகை விடுதலைக்கு ஒர் உண்மையைக் கொண்டு வந்து கொடு!

எனது படுக்கை, திடீரென்று மரணத்தால் சுருட்டப்பட்டு விட்டால், என்னுடைய ஆசை, உறவுகளத்தனையும் வெறுங்கையோடு தெருவில் நிற்கக்கூடாது.

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த அந்த வான் பறவையின் வரலாற்றை எனக்கும் அறிவித்துவிட வேண்டும்.

பாம்பாட்டி தன் கூடையில் போட்ட பாம்பை, கூடையின் மூடியைத் திறக்கும் போதெல்லாம், அந்த அரவம் தலையை நீட்டுவதைப்போல, எனதுள்ளம், திறக்கப்படும் போதெல்லாம் - என்னுடைய ஆசைகள் தலை நீட்டுகின்றன.

துங்கு மூஞ்சி மரத்தின் இலைகள் அந்தி சாய்ந்துவிட்ட பிறகு தலையைத் தொங்க விட்டுக் கொள்வதைப் போல; என்னுடைய அந்திமக் காலத்தில், உண்மையைக் கண்டுபிடிக்கும் எனது ஆர்வங்கள் தொங்கப் போட்டுக் கொள்ளக் கூடாது.

நல்ல பகல் நேரத்தில், சவுக்குத் தோப்பில் கேட்கின்ற பேரிரைச்சல் போல - என்னுடைய இதயம், எப்போதும் இரைந்து கொண்டே இருக்கிறது.

திருவிழா முடிந்த பிறகு, விழா முடிந்தப் பெருமையில் ஊர் திரும்பும் பக்தர்களின் முகத்திலே இருக்கின்ற அமைதி -அந்தப் பறவையின் வரலாற்றை அறிந்த பிறகுதான்; எனக்கும் இருக்குமென்று நம்புகிறேன்.

இவ்வளவு பேராசை எனக்கு இருப்பதற்குக் காரணம் - நான் சிறு வயதிலேயே - தாயின் ஒரு மார்பகத்தில் பால் குடித்துக் கொண்டிருக்கிற போதே மற்றொரு மார்பகத்தை - யாரும் சுவைத்துவிடக் கூடாதே என்று எண்ணியப் பழக்கந்தான்.

இதை மனிதப் பேராசை என்று எண்ணிவிடாதே! குழந்தை ஒரு தெய்வம் இது தெய்வீக ஆசை!!

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என் நெஞ்சே! உன்னோடு நான் உறவாடுகிறேன்.

மனசாட்சியையும் -உன்னையும், சூழ்நிலைச் சந்தையில் - சொற்ப விலைக்கு விற்று - நெடிய நாட்களாக, மேற்கூறிய இரண்டுமற்றவனாக இருந்து கொண்டிருந்தவன்.

அறிவாளர் பனுவலாலும் - அறிந்தோர் மொழியாலும் - செறிந்தோர் அமைதியில் செழித்த அடக்கத்தாலும் இழந்த இரண்டையும் நான் திரும்பப் பெற்றேன்.

கடலுக்கு அடியில் இருக்கின்ற மணல், எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதாக எந்த கந்தகப் பூமியும் ஒத்துக் கொள்வதில்லை.

அதைப்போல, எனது இதயத்தின் அடித்தளத்தின் சூட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசைகள் - குளிர்ச்சியோடில்லை.

எண்ணமே! அதோ அந்தப் பறவை வருவதாகத் தெரிகிறது.

எனது கனவுகள் உருவம் பெற, அந்தப் பறவையிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வா!

நிலவுக்கு அருகில் இப்போது அப்பறவை என் கண்களுக்குத் தெரிகிறது.

அதன் வருகையால் அந்த நிலவு மேலும் குளிர்ந்து விட்டது: இல்லையெனில், கடல் பொங்குவதைப்போல் - பக்கத்திலே உள்ள நீர்வீழ்ச்சியின் தேக்கம், அலைகரம் நீட்டுமா?

திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவில், சந்தனத் தென்றல் நுழையும் போது - தொழுநோய்ப் பிடித்தவன் - தன்னுடைய வேதனையை மறந்து - அந்தத் தென்றலின் குளுமையையும் இரசிக்கிறான்!

அதுபோல, இழுக்கு அழுக்கால்; இன்னல் துன்பத்தால் வழக்காய் வாடிக்கொண்டிருக்கும் இந்த வியனுலகம் - ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டேன்!

அந்த கிராம மக்களது கூச்சல், இப்போது சிறிது அடங்கியது!

நாடகம் முடிந்த அரங்கமும் ஆட்டம் முடிந்த இடுகாடும், அமைதியைத்தான் வைத்துக் கொண்டிருக்கும்!

பறவை, மலையின் உச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது!

பறப்பன ஊர்வன எல்லாம், இப்போது தலை தூக்கிப் பார்த்தன!

பூமியிலிருக்கும் எல்லா தாதுப் பொருட்களும் உயிரினங்கள் அனைத்தும், பூரித்து வெளியில் வந்தன!

இப்போது பறவை, உச்சியின் மீது தத்துவம் கூறும் ஞானியைப் போல, மிக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தது!

தன்னுடைய அலகால், இறகுக்கிடையில் இருக்கின்ற தினவைப் போக்கிக் கொண்டது!

சிலிர்த்த இறகுகளை மேல் நோக்கி நிறுத்தி, ஜீவக் காற்றால் - தன் களைப்பைப் போக்கிக் கொண்டது.

கிராமத்து மக்கள் ஒடிவந்தார்கள். தன்னந் தனியனாய், நானும் அமைதியாய், நின்று கொண்டிருக்கும் என்னைச் கழ்ந்து கொண்டார்கள்.

எங்கள் கூத்தையும் - ஆட்டத்தையும் பார்க்காமல், இந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே! இதனால் யாது பயன், என்று கேட்டனர்!

அதோ, அந்தப் பறவையின் வடிவத்தால் - வரவால் -தோற்றத்தால் - எல்லா உயிரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றன!

அந்தப் பறவையின் பொலிவிலே, உங்கள் கண்கள் மயங்கவில்லையானால், அது உங்களுடைய விழிகளது குற்றமென்றேன்!

'அது ஒரு சோம்பல் பிடித்த பறவை' என்று அவர்கள் கூறினார்கள்.

'அது வான் வழியாக வந்த அறிவுத் தூதன், என்று நினைக்கிறாயா?’ என்று என்னைக் கேட்டார்கள்!

எனது எண்சாண் உடம்பும் அப்போது வணக்கத்துடன் - 'ஆம்' என்றது!

'உண்மையை நீ உரைக்கமாட்டாய். ஒரு கிச்சிலிப் பழத்தோலை நசுக்கினாலும் கண் எரியக்கூடிய ரசமாவது கிடைக்கும்'!

'உன்னைக் கசக்கிப் பிழிந்தாலும், நீ பொய்யைத் தவிர, உண்மையைப் பேசமாட்டாய்' என்று உதாசினம் ஆடினர்:

என்னுடைய வார்த்தைகள்; உங்கள் தலைகட்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீனைப்போல் - இல்லை யென்றால், உங்களுடைய உடம்பில் ஒடிக்கொண்டிருக்கும் உயிரைப் போல உண்மையானது தான்.

உங்களுடைய கிராமத்திலிருக்கின்ற ஒரு கலைஞன், யாழை மீட்டுகின்றபோது வரும் உண்மையான சுவர ஜாலங்களைப் போல; அப்பழுக்கற்றவை.

கட்டாந்தரையைக் கழனியாக்க, நிலத்திலே தோய்ந்து பளபளக்கும் கார் முனையைப்போல - என்னுடைய உண்மைகள் ஒளிர்கின்றன என்று கூறுகிறேன்.

அந்தப் பறவை, அப்போது தன்னுடைய கம்பீரமானத் தோற்றத்தால் , கிராம மக்களைத் திரும்பிப் பார்த்தது! ஒரு குரல் எழுப்பியது! ஒரே ஒரு வினாடிதான்!

மனிதன் இறப்பை வென்றுவிட்டான்! அவனுடைய உடலிலிருக்கும் உயிரணுக்கள், இனி மரணத்திற்கு அஞ்சவேண்டியதில்லை!

இந்த உலகம்; என்று மனிதனுக்குப் பிறப்பைக் கொடுத்ததோ - அன்றே, இறப்பையும் கொடுத்தது!

ஆனால், அந்தப் பறவை, சாகா வரத்தைத் தந்துவிட்டு - விடிவதற்கு முன், சென்றுவிட்டது!

அறிஞர் அண்ணா அவர்கள், அந்த வான் பறவையைப் போல் உலகுக்கு வந்தவர்.

நாட்கள் தோறும் செத்துக் கொண்டிருக்கின்ற ஜனநாயகம், அறிஞர் அண்ணாவால் சாகாவரம் பெற்றது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அந்தக் கிராம மக்களைப்போல - அரசியலில் கூத்தடித்துக் கொண்டிருப்பவர்கள், அறிஞர் அண்ணாவால் தெளிவு பெற்றார்கள்.

உலகத்திலுள்ள 96 மூலப் பொருள்களைப்போல், தத்துவத்திலுள்ள 95 அம்சங்களும், அண்ணாவால் பொலிவு பெற்றன.

அந்த வான் பறவை, என்று குன்றேறி நின்று குரல் கொடுத்ததோ - அன்றே அறிஞர் அண்ணாவைப் பற்றி அகிலம் அறிய ஆரம்பித்தது! -

என்னைப்போல், இனப் துன்பங்களைக் கவனியாமல், அண்ணாவை நெருங்கிப் பார்த்தாலொழிய, இந்தப் பேருண்மைகளைக் காணமுடியாது!

காணாதவர்கள், அந்த கிராம மக்களைப்போல் அறிவிருந்தும் அறியாதார், கண்டவர்கள், அப்பேருண்மையை மற்றவர்கட்கு விண்டிடும் ஆற்றலுடையவர்கள்!

குறிப்பு : விஞ்ஞான உலகத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு, இப்பொழுது ஒரு பேருண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

உலகம் தோன்றியது முதல், இதுவரையில், ஒரு விண்மீனின் ஒளி, நிலத்தை நோக்கி இன்னும் வரவில்லை.

ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் மைல் வேகத்தில், அதன் ஒளியலைகள் பாய்ந்து வந்தாலும் - அக்குறிப்பிட்ட விண்மீனின் ஒளி, இன்னும் நிலத்தை அடையவில்லை.

அது மட்டும் நிலத்தை வந்தடைந்தால், மனிதனின் உயிரணுக்கள் சாகா என்றும், அதனால் மரணம் தவிர்க்கப்படும் என்றும், அந்த விஞ்ஞானிகள் ஒர் அறிக்கையில் கூறியிருக்கின்றனர். இந்த விஞ்ஞானப் பேருண்மையில் உருவானதே பேரறிஞர் அண்ணாவுக்கு பொருந்திய 'நினைவஞ்சலி'யாகும்.