அறிவுக் கதைகள்/அமைச்சர் பதவி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

65. அமைச்சர் பதவி

தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான்.

மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன் ‘என்ன நெல்?’ என்று கேட்க, உடனே வெளியே ஒடிப் போய்வந்து ‘சம்பா நெல்’ என்று கூற, அரசன் “எங்கே போகிறது?” என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஒடிப்போய்க் கேட்டுவந்து ‘பக்கத்து ஊர் சந்தைக்குப் போகிறது’ என்றான். அரசன் என்ன விலை?’ என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, “மூட்டை 7 ரூபாய்” என்று கூறினான். அரசன் ‘எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன?” என்று கேட்டான். அதை விசாரிக்கப் போன மைத்துனன் மிகவும் களைத்துப்போய் திரும்பிவந்து கொண்டிருந்தான்.

சற்று நேரம் ஆகியும் மைத்துனன் திரும்பி வராததை அறிந்த அரசன், தெருவில் மீண்டும் வேறு வண்டிச்சத்தம் கேட்டதும், தேவியின் முன்னிலையிலேயே, மந்திரி பதவிக்காகத் தான் வரவழைத்திருந்த ஒருவனை அழைத்து, “வீதியில் என்ன வண்டி? விசாரித்து வா” என்றான்.

அவன் திரும்பி வந்து அரசனிடம், “வண்டியில் கேழ் வரகு, ஒரு வண்டியில் பத்து மூட்டை இருக்கிறது. மொத்தம் ஐந்து வண்டிகள். ஏழாவது மைலில் உள்ள சந்தைக்கு விற்பனைக்குப் போகின்றன. மூட்டை 6 ரூபாய் என்று சொல்கின்றனர். என் மதிப்பு 5 ரூபாய், மன்னரின் கட்டளை என்ன?” என்று சொல்லி நின்றான்,

அரசன், உடனே தன் தேவியைப் பார்த்து, “எங்கே மைத்துனரை இன்னும் காணோம்? இப்போது சொல்; யாரை அமைச்சராக்கலாம்?” என்று கேட்க, புதில் ஒன்றும் கூற முடியாமல் தலைகுனிந்து நின்றாள் பெருந்தேவி.