அறிவுக் கதைகள்/செட்டியாரும் காகமும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

44. செட்டியாரும் காகமும்

செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.

மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.

நரி—"காக்கா காக்கா—உன் குரல் எவ்வளவு அழகாக—இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.

காகம் அதை நம்பி,

வாய்திறந்து—கா கா என்றது.

உடனே மூக்கிலிருந்த வடை விழவே—அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது—

இது கேட்ட என் பேத்தி—

“தாத்தா—உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம்—

நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா—என்று பாடியது. நரி ‘உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு’—என்றது. உடனே காகம்.

வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.

அதுகண்ட நரி, மறுபடியும், ‘'ஏ. காக்கா—உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. ஆனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு'’ என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,

தாதை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .

—என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும்—என்றேன்.

இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.

இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.