அலிபாபா (2002)/பொறாமையால் விளைந்த கேடு

விக்கிமூலம் இலிருந்து
2


பொறாமையால் விளைந்த கேடு


டுத்த நாள் காலையில் காஸிம் பத்துக் கோவேறு கழுதைகளை ஒட்டிக்கொண்டு வனத்திற்குச் சென்றான். அங்கே, முன்பு அலிபாபா அமர்ந்திருந்த பெரிய மரத்திற்கு எதிரேயிருந்த பாறையைக் கண்டுகொண்டு, அவன் மிக்க மகிழ்ச்சியுடன், “ஓ ஸிம்ஸிம் திற!” என்று கூவினான். உடனே, குகையை அடைத்திருந்த பாறை விலகிக் கொண்டது. காஸிம் உள்ளே சென்று, சுற்றிலும் குவிந்து கிடந்த பெருநிதிகளைக் கண்டான். அவன் உள்ளே சென்றதும், பாறை தானாகவே வாயிலை அடைத்துக் கொண்டது. அவன் அங்கேயிருந்த செல்வங்களைக் கண்டு வெகுநேரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்தான். பிறகு தான் வந்த காரியத்தை எண்ணிக்கொண்டு, அவசர அவசரமாகத் தங்க நாணயங்களை அள்ளிப்போட்டுக் கோணிகளை நிரப்பினான். பத்துக் கழுதைகள் எத்தனை மூட்டைகளைச் சுமக்க முடியுமோ அத்தனையையும் அவன் கட்டி, வாயிற்பக்கமாகத் தூக்கிக்கொண்டு போய் அடுக்கி வைத்துக்கொண்டான். பிறகு வாயிலை அடைத்திருந்த பாறையைப் பார்த்து, அவன், “ஓ பார்லி, திற!” என்று கூவினான். வழக்கமாகச் சொல்லவேண்டிய மந்திரச் சொல்லை அவன் மறந்துவிட்டதால், 'ஸிம்ஸிம்' என்பதற்குப் பதிலாக ‘பார்லி’ என்று தானாகக் கற்பனை செய்து கூவினான். அதனால் பாறை அசையவில்லை. ‘ஸிம்ஸிம்’ என்ற சொல் எள்ளுச்செடியின் பெயரை நினைவுறுத்தக் கூடியதாக இருந்ததால், அவன் வேறு பல தானியங்கள் பெயர்களைச் சொல்லி, “திற!” “திற!” என்று கூவிப் பார்த்தான். வழி திறக்கப்படவில்லை. அப்பொழுதுதான் அவன் தனக்கு ஏற்பட்டிருந்த அபாய நிலையை நன்கு உணர்ந்துகொண்டான். ஆசையுடன் அள்ளிக் கட்டி வைத்திருந்த நாணயமூட்டைகளை அப்பொழுது அவன் மதிக்கவில்லை. நாலு பக்கங்களிலும் நிறைந்திருந்த கண்ணைப் பறிக்கும் பொருள்களிலே அவன் நாட்டம் செல்லவில்லை. குகையைக் கடந்து வெளியேறுவது எப்படி என்பதை மட்டுமே சிந்தனை செய்துகொண்டு, அவன் குகையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் தேடி வந்தது பொன். இப்பொழுது அவன் உயிரே ஆபத்துக்குள்ளாகியிருந்தது!

நண்பகலில் திருடர்கள் குகைப்பாதையிலே குதிரைகள் மீது சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது புதர்களின் பக்கமாகப் பல கோவேறு கழுதைகள் சுற்றி மேய்ந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அங்கேயிருந்த பத்துக் கழுதைகளையும் பிடித்து விற்றால், நல்ல விலை கிடைக்கும். ஆனால், அவர்கள் அவைகளைப் பிடித்துக்

கொள்ள வேண்டுமென்று எண்ணவில்லை. அத்தனை கழுதைகள், நகரைவிட்டு வெகுதூரம், ஆளில்லாமல் தனியாக வந்திருக்க முடியாது என்று அவர்கள் சந்தேகப் பட்டனர். அவைகளைப்பற்றி வந்த ஆசாமி எங்கே? அவன் திருடர்களின் குகைப்பக்கமாக அவைகளைக் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர்கள் சிந்தித்து, உடனே எதற்கும் குகையைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

திருடர் தலைவனும் மற்றவர்களும் குகை வாயிலுக்குச் சென்றனர். தலைவன் வழக்கமாக மந்திரச் சொற்களைக் கூறியதும், பாறை விலகி விட்டது. இதற்கிடையில் குதிரைக் குளம்புகளின் ஓசைகளைக் கேட்டு காஸிம், திருடர்கள் அங்கு வந்துவிட்டதை முன்பே தெரிந்து கொண்டான். அவர்கள் உள்ளே வந்ததும் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, அவன் தரையில் விழுந்து தயங்கிக் கொண்டிருந்தான். வாயிற் பாறை விலகியதும், அவன் விரைவாக வெளியே ஓடித் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று கருதி ஆவலோடு ஓடத் தொடங்கினான். ஓடிய ஓட்டத்தில் அவன் குகை வாயிலில் முதலில் நின்று கொண்டிருந்த திருடர் தலைவன்மீதே முட்டிக் கொண்டான். உடனேயே, தலைவன் அவனை ஒரு கையால் ஓங்கியடித்துத் தரையிலே தள்ளி விட்டான். தலைவனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த திருடன் ஒருவன், தன் உடை வாளை உருவி, காஸிமை இரு துண்டுகளாக வெட்டிப் போட்டுவிட்டான். பிறகு எல்லாத் திருடர்களும் குகைக்குள் சென்றனர். காஸிம்

வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காகத் தூக்கி வைத்திருந்த நாணயக்கோணிகளை அவர்கள் மற்ற நாணயங்களோடு கொண்டுபோய்ச் சேர்த்துக் கொட்டினர். இறந்து கிடந்தவன் குகைக்குள் எப்படி நுழைந்தான் என்பதைப்பற்றி அவர்கள் பன்முறை சிந்தித்துப் பார்த்தும் புலன் தெரியவில்லை. குகையின் மேல் முகட்டிலிருந்து யாரும் உள்ளே இறங்க முடியாது. குகையின் வாயிலை அடைத்திருந்த பாறையும் மந்திரச் சொற்களை உச்சரித்தாலன்றி வழி விடாது. இறந்து கிடந்த ஆசாமி மந்திரச் சொற்களை எப்படி அறிந்துகொண்டிருந்தான்? இந்தப் புதிர் அவர்களுக்கு விளங்கவேயில்லை. அவர்கள், காஸிமின் உடலை மேலும் இரண்டு துண்டுகளாக்கி, தங்கள் பொக்கிஷசாலைக் கதவின் இரண்டு பக்கங்களிலும், பக்கத்திற்கு இரண்டு துண்டுகளாகத் தொங்கவிட்டனர். இனியும் எவனாவது அங்கு வந்தால், அந்த அங்கங்கள் அவனுக்கு எச்சரிக்கை யாயிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பிறகு, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர். பாறையும் வெளி வாயிலை அடைத்துக்கொண்டது.

இரவு நேரமான பின்னும் தன் கணவன் வராததால், நகரிலே, காஸிமின் மனைவி மிகவும் வருத்தமடைந்தாள். அவள், மனம் தடுமாறிக்கொண்டே, அலிபாபாவின் வீட்டுக்குச் சென்று, நாதன் வராத காரணம் ஏதாயிருக்கலாம் என்று கேட்டாள். அவன் சென்றிருந்த இடம் அலிபாபாவுக்குத் தெரிந்திருந்ததால், அவன் மூலம் விவரம் தெரியும் என்று அவள் நம்பியிருந்தாள். அலிபாபாவும் மனம் கலங்கித்தான் இருந்தான். காலையிலே சென்ற காஸிம் இரவு வரை திரும்பி வராததால், அவனும் துயரமடைந்து உளைந்து கொண்டிருந்தபோதிலும், அவளைப் பார்த்து ஆறுதல் சொன்னான். ஒருவேளை, மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக, இருட்டிலேயே வரக்கூடும் என்றும், நேர் பாதையில் வராமல், நகரைச் சுற்றிக்கொண்டு வந்தால், நேரம் ஆகத்தான் செய்யும் என்றும் அவன் அபிப்பிராயப்பட்டான். அவனுடைய மதினி சற்று ஆறுதலடைந்து, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள்.

அன்று நள்ளிரவு வரை காஸிம் வராததால் அவள் நடுக்கமடைந்தாள். உள்ளத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த துக்கத்தை வெளிப்படுத்தி உரக்க அழலாம் என்றால், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் இரகசியத்தை அறிந்துகொண்டுவிடுவார்கள் என்று அஞ்சினாள். ஆகவே, அவள் வாயைத் திறக்காமல், மெளனமாகவே அழுது கண்ணீர் பெருக்கினாள், ‘பாவியாகிய என்னாலேயே எல்லாம் விளைந்து விட்டது! பொன்னைப்பற்றிய இரகசியத்தை நான் ஏன் அவரிடம் சொன்னேன்? மைத்துனனின் செல்வத்தை எண்ணி, நான் ஏன் பொறாமை கொண்டேன்? என் பொறாமையே என் குடியைக் கெடுத்துவிட்டதா?’ என்று. அவள் இரவு முழுவதும் தன்னைத்தானே பல விதமாக அலட்டிக்கொண்டிருந்தாள். மறுநாள் பொழுது புலர்ந்தவுடனேயே, அவள் மீண்டும் அலிபாபாவை நாடி ஓடிச்சென்றாள்.

உடனே, அவன் அண்ணனைத் தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று அவள் வேண்டிக்கொண்டாள். அவன் அவளைச் சிறிது தேற்றிவிட்டு, தன் கழுதைகளைப் பற்றிக்கொண்டு வனத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். அங்கே, குகை அடியில் சென்றதும், தரையில் புதிதாக உதிரம் சிந்தியிருப்பதைக் கண்டான். அண்ணனையோ, அவன் கொண்டு சென்ற கழுதை களையோ கானவில்லை. ஏதோ பெரிய விபரீதம் விளைந் திருக்கும் என்று அவனுக்கு அப்பொழுதே தோன்றிற்று. உடனே, பாறையை நோக்கி, “ஓ எலிம்ஸிம், திற!” என்று அவன் கூறினான். அது அகன்று வழிவிட்டது. உள்ளே சென்றதும், கதவில் காஸிமின் உடல் நான்கு பாகங்களாகத் தொங்குவதை அவன் கண்டு நடுக்கமடைந்தான். எனினும், தன் கடமையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கருதி, அவன் அந்த அங்கங்களை எடுத்து, இரண்டு துணிகளில் கட்டி, ஒரு கழுதையின் மேலே ஏற்றி வைத்தான். அந்தத் துணிகளுக்கு மேலே காய்ந்த விறகுகளையும் கட்டிவைத்து மூடினான். பிறகு, குகையிலிருந்து தங்க நாணயங்களைக் கோணிகளில் கட்டி, மற்ற இரண்டு கழுதைகளின் மேலே ஏற்றி, அவற்றையும் விறகுகளால் மறைத்து, பாறையை முன்போல் மூடிக்கொள்ளச் செய்துவிட்டு, வனத்திலிருந்து வெளியேறிச் சென்றான்.

வீட்டுக்குச் சென்றதும், அவன் நாணய மூட்டைகளைக் கீழே இறக்கி, மனைவியிடம் ஒப்படைத்து, அவைகளை மண்ணுக்குள் உடனே மறைத்து வைக்கச் சொன்னான். ஆனால், தன் அண்ணனுக்கு நேர்ந்த கதியை அவன் அவளிடம் சொல்லவில்லை. அங்கிருந்து ஒரு கழுதையை மட்டும் ஒட்டிக்கொண்டு அவன் அண்ணன் வீட்டுக்குச் சென்று, வாயிற்கதவை மெதுவாகத் தட்டினான்.

காஸிம் வீட்டில் மார்கியானா என்ற அடிமைப் பெண் ஒருத்தி வேலை பார்த்து வந்தாள். அவள் மிகுந்த புத்திக்கூர்மையுள்ளவள். சந்தர்ப்பத்தை அறிந்து எதையும் திறமையுடன் சமாளிப்பதில் அவள் கெட்டிக்காரி. கதவைத் தட்டிய ஓசை கேட்டதும், அவள் ஓடி வந்து, ஓசைப் படாமல் மெதுவாகத் தாழைத் திறந்தாள். அலிபாபா, தான் பற்றி வந்த கழுதையை உள்ளே முற்றத்திற்குக் கொண்டு சென்று, அதன்மீது வைத்திருந்த இரண்டு துணி மூட்டை களையும் கீழே இறக்கி வைத்தான். பின்னர், வேலைக் காரியைப் பார்த்து. அவன், “மார்கியானா மரித்துப்போன உன் எசமானரின் ஈமச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்! முதலில் நான் போய் மதினியிடம் செய்தி சொல்லிவிட்டு, மீண்டும் வருகிறேன்!” என்று சொன்னான். அந்த நேரத்தில், மதினியே அங்கு வந்துவிட்டாள். அவள் மைத்துனனின் முகத்தில் தென்பட்ட சோகக் குறிகளைக் கண்டு, உளம் கலங்கி, என்ன செய்தி என்று விசாரித்தாள். அலிபாபா, குகையில் தான் கண்ட காட்சியையும், அண்ணன் அங்கங்களைச் சேகரித்து வந்திருப்பதையும் சுருக்கமாகக் கூறினான். “நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இந்த விஷயத்தை நாம் மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரகசியம் வெளியானால், நம் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும்!” என்றும் அவன் கேட்டுக் கொண்டான். காஸிமின் மனைவி ‘ஓ’ வென்று அழுது கொண்டே, “என் கணவரின் விதிப்படி அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி உங்களைக் காப்பதற்காக நான் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்கிறேன்!” என்று சொன்னான்.

அதன் பின்பு அலிபாபா, “ஆண்டவன் கட்டளையை யாரும் மீறி நடக்கமுடியாது. நீ பொறுமையுடன் இருக்க வேண்டும். நெடுநாள் கைம்பெண்ணாகக் கஷ்டப்படும்படி விடாமல், நானே உன்னைப் பின்னால் இரண்டாம் தாரமாக

மணந்து கொள்கிறேன். என் மனைவி நல்ல குணமுள்ளவள். உன்னை ஆதரிப்பாள்!” என்று கூறினான். அவள் அழுது அலறிக் கொண்டே, “இனி உங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வதே என் கடமை!” என்றாள். பின்னர், அலிபாபாவும், மார்கியானாவும் காஸிமின் உடலை அடக்கம் செய்வதைப் பற்றி நெடுநேரம் கலந்து ஆலோசனை செய்தனர். காஸிம் கொலையுண்டு மடிந்தான் என்பதை எவரும் தெரிந்து கொள்ள முடியாதபடி காரியங்களை நடத்த வேண்டும். வெளியே எவரேனும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டால் பின்னர், பலருக்கும் அது அம்பலச் செய்தியாகிவிடும். திருடர்களும் அதைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து அலிபாபாவையும், அவனுடன் சம்பந்தபட்டவர்களையும் அவர்கள் கண்டு பிடித்துப் பழி வாங்கிவிடுவார்கள். மார்கியானா நிலை மையைப் தெளிவாக உணர்ந்திருந்ததால், எல்லாவற்றையும் கவனமாக நடத்துவதாக உறுதிகூறி, அலிபாபாவை அனுப்பி வைத்தாள்.

அவன் வெளியே சென்றபின், மார்கியானா ஒரு மருந்துக்கடைக்குப்போய், கொடிய நோய் கண்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மருந்து ஒன்று வேண்டும் என்று கேட்டு, வாங்கி வந்தாள். அப்பொழுது கடைக்காரன், வீட்டில் யாருக்கு உடல் நலமில்லை என்று கேட்டான். “எங்கள் முதலாளி காஸிம் பல நாள்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். அன்னம், ஆகாரமில்லை; வாய் திறந்து பேசவுமில்லை. அநேகமாய்ப் பிழைக்கமாட்டார் என்றே தோன்றுகிறது!” என்று அவள் மறுமொழி சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

மறுநாளும் மார்கியானா, முன் சென்ற மருந்துக் கடைக்கே போய், மரண அவஸ்தையில் இருப்பவருக்குக் கொடுக்கக்கூடிய உயர்ந்த மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்பொழுது, “இந்த மருந்து அவர் தொண்டையில் இறங்குமோ, என்னவோ, தெரியவில்லை. நான் வீடு போய்ச் சேருமுன்பே அவர் காரியம் முடிந்துவிடக் கூடும்!” என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.

இடையில் அலிபாபா அண்ணன் வீட்டில் அழுகைக் குரல் கேட்டவுடன் தானும் அங்கே சென்று ஈமச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று கருதி, தன்
வீட்டிலேயே காத்துக் கொண்டிருந்தான். இரண்டாவது நாள் காலையில் பொழுது புலரு முன்பே, மார்க்கியானா, முகத்திரை அணிந்து கொண்டு வெளியே சென்று, பாபா முஸ்தபா என்ற வயோதிகத் தையற்காரனைக் கண்டு பேசினாள். அவனிடம் ஒரு தங்க நாணயத்தை நீட்டினாள். அவன் அன்று தனக்கு வந்த அதிருஷ்டத்தை எண்ணி மகிழ்ந்து, “என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். “நீ உன் கண்களில் ஒரு துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு என்னுடன் வர வேண்டும். கொஞ்சம் தையல் வேலை இருக்கிறது!” என்று அவள் கூறினாள். அவன் முதலில் இணங்காமல் திகைத்தான். உடனே, மார்கியானா மீண்டும் திர்ஹமை[1] அவனுக்கு அளித்தவுடன், அவன்


புறப்பட இசைந்து விட்டான். அவர்கள் சிறிது தூரம் சென்ற பின், அவள் அவனுடைய கண்களைத் துணியால் மறைத்துக் கட்டி, அவனைக் காஸிமுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே வெளிச்சமில்லாத ஓர் அறையில், ஒரு மேடை மீது காஸிமின் அங்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு அவள் முஸ்தாவின் கண்களிலே கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டு, அவன் அந்த அங்கங்களை முறையாகப் பொறுத்தி வைத்து, ஒரே உடலாகத் தைத்துக் கொடுக்க வேண்டுமென்றும், அந்த உடலுக்கு ஏற்ற அளவில் ஒரு கபன்[2] தைக்க வேண்டுமென்றும் கூறினாள். வேலை முடிந்ததும், கையில் மேலும் ஒரு திர்ஹம் தருவதாகவும் அவள் வாக்களித்தாள். பணத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டான் முஸ்தபா. அவள் கோரியபடியே பினத்தைத் தைத்து, கபனையும் முடித்துக் கொடுத்தான். அவள், தன் சொற்படி, மேலும் ஒரு தங்க நாணயத்தை அவனுக்கு அளித்து, மீண்டும் அவனுடைய கண்களைக் கட்டி, வெளியே அழைத்துச் சென்று, அவன் கடைப்பக்கம் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அவள், அலிபாபாவையும்கூட வைத்துக்கொண்டு, பினத்தை வெந்நீரில் குளிப்பித்து, அதன்மீது கபனைப் போர்த்திச் சுத்தமான தரையிலே அதைத் துக்கி வைத்தாள். பிறகு, அவள் பள்ளிவாசலுக்குச் சென்று, இமாமை அழைத்து வந்தாள். சமய முறைப்படி இமாம் திருக்குர்ஆன் ஓதிய பின்பு, நான்கு பேர்கள் சவப்பெட்டியைத் துரக்கிக் கொண்டு கபருஸ்தானை[3] நோக்கிப் புறப்பட்டனர். இமாமும் அலிபாபா முதலியோரும் தொடர்ந்து சென்றனர். மார்கியானா, விரித்த தலையுடன், மார்பில் அடித்து அழுதுகொண்டே பிரேதப் பெட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தாள். இடுகாட்டில் பிரேதம் முறைப்படி அடக்கம் செய்யப்பெற்ற பின், எல்லோரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

நகரின் வழக்கப்படி பெண்டிர் பலரும் காஸிமுடைய வீட்டுக்கு வந்து, அவன் மனைவியிடம் துக்கம் விசாரித்தனர். சிலர் ஒப்பாரி வைத்து அழுதனர். பலர் விதவைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினர். இவ்வாறு ஈமச்சடங்கு முறைப்படி நடந்தேறியது. ஆனால், காஸிம் மரித்த விவரம் அவன் மனைவி, வேலைக்காரி, அலிபாபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர் அனை வரும் அவன் இயற்கையாக நோயுற்று மாண்டதாகவே எண்ணிக்கொண்டனர்.

நாற்பது நாள்கள் துக்கம் காத்த பின்பு, அலிபாபா அண்ணனுடைய சொத்துகளைத் தன் வீட்டிலேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, விதவையைத் தானே திருமணம் செய்துகொண்டான். அவளுடைய மூத்த மகன் ஒரு வியாபாரிடம் தொழிலிலே பயிற்சி பெற்றிருந்ததால், காஸிமுடைய கடையை அவனே நடத்தும்படி ஏற்பாடு செய்து, மேற்கொண்டு தேவையான பணத்தைத் தானே கொடுப்பதாகவும் அலிபாபா தெரிவித்தான்.

  1. திர்ஹம் - தங்க நாணயம்.
  2. கபன் - பிணத்திற்குப் போர்த்தும் துணி.
  3. கபருஸ்தான் - இடுகாடு, கபர் - சவக்குழி.